யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் இசைத்துறைத் தலைவராக செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார்.
ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞரான காரை. மண் தந்த N.K.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தவர். ஈழத்தின் சிறந்த முன்னணி வாய்ப்பாட்டுக் கலைஞரான இவர் கர்நாடக இசையில் M.A., M.Phil. ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டு கர்நாடக இசைத்துறையில் சிறந்த ஆற்றுகையாளராக விளங்குபவர். சுவிற்சலாந்து, ஜேர்மனி, பின்லண்ட், சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிற்கு கலைப் பயணத்தினை மேற்கொண்டு சென்றிருந்தவர்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அழைப்பினை ஏற்று 2015ஆம் ஆண்டு யூன் மாதம் கனடாவிற்குப் பயணம் செய்து சிறந்த இசைக் கச்சேரியை நிகழ்த்தி கனேடிய தமிழ் இசை உலகின் மிகுந்த பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். காரை.இந்துவின் மேம்பாடு நோக்கியதாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் இசை நிகழ்வின் ஊடாக தாம் கற்ற பாடசாலைக்கு உதவ வாய்ப்புக் கிடைத்தமை குறித்து மிகுந்த பூரிப்படைந்திருந்தார்.
ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்த்தான வித்துவானாகப் பணியாற்றிய நாதஸ்வரக் கலைஞர் அமரர் கயிலாயக் கம்பரினதும் காரை மண்ணின் மற்றொரு நாதஸ்வரக் கலைஞர் அமரர் சுப்பையாக் கம்பரினதும் பேத்தியே செல்வி பரமேஸ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இசைத்துறைத் தலைவர் என்கின்ற உயரிய பதவியைப் பெற்றுக்கொண்டு காரை.இந்து அன்னையின் கீர்த்தியை மேலோங்கச் செய்திருக்கும் செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையடைகின்றது.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு கலைப் பயணத்தினை மேற்கொண்ட செல்வி பரமேஸ்வரி கணேசன் குறித்த சில புகைப்படப் பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “யாழ்.பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”