2019ம் ஆண்டு க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் வணிகமும் கணக்கீடும் பாடத்தில்(Business & Accounting) காரை.இந்துவிலிருந்து தோற்றியிருந்த அனைத்து 14 மாணவர்களும் சித்தி பெற்றது(100% சித்தி) மட்டுமல்லாது அனைவருமே C தரத்திற்கு மேலான சித்தியினைப் பெற்று சாதனை படைத்திருந்தனர். எட்டுப்பேர் A தர சித்தியும் இரண்டு பேர் B தர சித்தியும் நான்கு பேர் C தர சித்தியும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களுடைய இத்தகைய சாதனைக்கு, இவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தி விட்டிருந்த உயர்தர கணக்கீட்டுப் பாட ஆசிரியையான திருமதி தயாளினி ஜெயக்குமார் அவர்களுடைய அர்ப்பணிப்புடனான கடின உழைப்பே மூலகாரணமாகும். இதனைக் கருத்திற்கொண்ட வடமாகாணக் கல்வித் திணைக்களம் இவ்வாண்டுக்கான மாகாண மட்ட சாதனையாளராக திருமதி தயாளினி ஜெயக்குமாரை தெரிவுசெய்து பாராட்டிக் கௌரவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு தொடக்கம் காரை இந்துவின் உயர்தர கணக்கீட்டுப் பாட ஆசிரியையாக பணியாற்றி வருகின்ற திருமதி தயாளினி அவர்கள் பலரதும் பாராட்டினைப் பெற்ற சிறந்த ஆசிரியையாக விளங்குபவர். காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறைப் பட்டதாரியுமான இவர் 10ஆம் 11ஆம் தர மாணவர்களிற்கு உயர்தர கணக்கீட்டுப் பாடத்துடன் வணிகமும் கணக்கீடும், முயற்சியாண்மை ஆகிய பாடங்களையும் மாணவர்களின் மனம்கவரும்வண்ணம் கற்பித்து வருபவர். முயற்சியாண்மைக் கல்வி (Entrepreneurship) என்கின்ற பாடம் இக்கல்லூரியில் ஆரம்பிப்பதற்கு திருமதி தயாளினியே காரணமாக இருந்துள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். 2016ஆம் ஆண்டு தேசிய ரீதியிலான உற்பத்தித்திறன் போட்டியில் கல்லூரி வெற்றி பெறுவதற்கு தயாளனியின் உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாக அறியமுடிகின்றது. கல்லூரியின் நிகழ்வுகளில் கல்லூரி நிர்வாகத்திற்கு உறுதுணையாகவிருந்து நிகழ்வுகளைப் பாராட்டும்படி சிறப்பாக ஒழுங்கமைப்பதில் முன்னின்று செயற்பட்டு வரும் இவர் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சியை முன்னெடுக்க உதவியவராவார். குறிப்பாக கல்லூரியின் நிர்வாகத்திற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் வழங்கிய ஒத்துழைப்புக் காரணமாக முன்னாள் அதிபர்களான திருமதி வாசுகி தவபாலன், திருமதி சிவந்தினி வாகீசன் ஆகியோரின் மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியவராக விளங்குகின்றார். என்றும் போல தயாளினி அவர்களுடைய ஒத்துழைப்பு தனது நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட தற்போதய அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள், திருமதி தயாளினி கல்லூரியின் நிதி நிர்வாகப் பொறுப்பினை ஏற்று திணைக்கள அலுவலர்கள் திருப்திப்படக்கூடியவகையில் திறமையான முறையில் கையாண்டு வருவதாகப் பாராட்டினார்.
காரை.இந்துவின் வளர்ச்சியில் பல வகையிலும் பெரும் பங்காற்றி வருகின்ற திருமதி தயாளினி ஜெயக்குமார் அவர்கள் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தின் மாகாண மட்ட சாதனையாளருக்கான கௌரவத்தினைப் பெற்றமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிக்க பெருமிதம் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைவதுடன் இவரது சேவை தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
கடந்த ஆண்டுகளில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல அமர்வுகளாக நடைபெற்று வருகின்ற மாகாண மட்ட சாதனையாளர் தின நிகழ்வு கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இம்முறை நடைபெறாத நிலையில் திருமதி தயாளினி வலயக் கல்விப் பணிமனைக்கு அழைக்கப்பட்டு மாகாணப் பணிப்பாளரின் சார்பில் வலயப் பணிப்பாளர் அவருக்கான பாராட்டுச் சான்றிதழினை வழங்கி கௌரவித்திருந்தார்.
பாராட்டுச் சான்றிதழும், சான்றிதழ் வழங்கும்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படமும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து திருமதி தயாளினி ஜெயக்குமார் கல்லூரி தொடர்புபட்ட நிகழ்வுகளில் பங்குகொண்டபோது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும் பார்வையிடலாம்:ஆசிரியர் தின விழாவில் கௌரவம் பெறுதல்
க.பொ.த.சாதாரண, உயர்தர பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வில் – மாணவர்கள் சிறப்புச் சித்தியைப் பெறுவதற்கு தயார்படுத்தி விட்டமைக்கான கௌரவத்தினைப் பெறுதல்.உயர்தர மாணவர் மன்றத்தின் ‘நதி’ சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வில் வணிக தின விழாவில் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கல்லூரிக்குக் கிடைத்த சிறப்புத் தககமைக்கான விருதினையும் சான்றிதழையும் அதிபர்(முன்னாள்) திருமதி வாசுகி தவபாலனுடன் இணைந்து பெற்றமை
க.பொ.த.சாதாரண, உயர்தர பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வில்உயர்தர மாணவர் மன்றத்தின் ஒன்றுகூடல் – விருந்தபசார நிகழ்வில்
No Responses to “மாகாண மட்ட சாதனையாளர் கௌரவத்தினைப் பெற்று காரை. இந்துவைப் பெருமைப்படுத்திய ஆசிரியை தயாளினி ஜெயக்குமாரை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”