காரைநகர் இந்துக் கல்லூரியில் 15ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரிய மணிகள் குறித்த சுருக்கமான விபரங்கள் அவர்களது புகைப்படங்களுடன் 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த சயம்பு மலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்விணையத்தளமும் அவர்கள் அனைவரையும் கௌரவித்து நன்றிகூறுகின்ற வகையிலும் எமது வாசகர்களின் பயன் கருதியும் அவற்றினை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றது. தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சியில் பங்குகொண்ட ஆசிரிய மணிகள், உப-அதிபர்கள் குறித்த விபரங்களும் எடுத்து வரப்படவுள்ளன.
திரு.சண்முகம் அம்பலவாணர்
அம்பலச் சட்டம்பியார் (1910 – 1928)
இப்பாடசாலை ஆரம்ப பாலத்தில் அரச உதவி நன்கொடை எதுவும் பெறாது தனியார் பாடசாலையாக விளங்கியபோது நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் கற்பித்தவர். தமிழ்ப் பண்டிதரான அவர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை வரன்முறையாக கற்றிருந்தமையினால் சிறந்த ஆசிரியராக திகழ்ந்தவர். ஐயம் திரிபறக் கற்பிப்பதில் வல்லவர். சயம்பு உபாத்தியாயரைப் போலவே இவரும் பாடசாலைக்கு ஒவ்வொரு நாளும் தவறாது சமூகமளித்தவர். மிகக் குறைந்த வேதனத்தை பெற்ற இவர் மக்களிடமும் மாணவரிடமும் நிறைந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தவர். கடமையே கண்ணாக இருந்த இவர் மிகச் சிறந்த உரை ஆசிரியராகவும் விளங்கினார். இப்பாடசாலை நாற்றாக இருந்த காலத்தில் நன்னீர் ஊற்றாக இருந்து வளர்த்த பெருமை இவருக்கு உண்டு.
திரு.R.கந்தையா (1915 – 1955)
சயம்பு உபாத்தியாயரின் பிரிய மாணவனான இவர் பரந்த கல்வியறிவும் கற்பித்தல் பணியில் திறமையும் கொண்டவர். தமிழ், கணிதம், சமயம் ஆகிய பாடங்களை சிறப்புடன் கற்பித்தவர். ஒரே இடத்தில் நாற்பது ஆண்டுகள் சேவை செய்த ஆசிரியர். பொறுமை, சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்டவர். சயம்பு உபாத்தியாயரின் புகழ் பாடி மகிழ்ந்தவர். போக்கு வரத்துச் சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் தனது பிரதேச மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு மாட்டு வண்டியில் பாடசாலை வந்தவர். மாணவர் மனதில் என்றும் நின்று நிறைந்த புகழாழர்.
திரு.K.செல்லையா 1st Class Trained (1922 – 1962)
ஆங்கில பாடத்தை திறமையாகப் போதித்த ஆசிரியர். கண்டிப்பு நிறைந்தவர். அரிச்சந்திரன் நாடகத்தை நெறிப்படுத்தியவர். கதாகாலாட்சேபம் செய்வதில் வல்லவர். சமயத்தில் ஈடுபாடு உடையவர். ஈழத்துச் சிதம்பரத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பஜனை செய்தவர். தனது சேவையின் இறுதிநாள் வரை அர்ப்பணித்து ஆங்கிலம் கற்பித்தவர். அவரது ஆங்கில உச்சரிப்பு உள்நாட்டு, வெளிநாட்டு ஆசிரியர்கள் அனைவரையும் வியக்கவைத்தது. இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வித்தகராக திகழ்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர். பண்ணிசை அறிந்தவர். நாடகங்கள் எழுதி நடித்து இயற்றியவர். நாவலர் வழி வந்த கந்தபுராண கலாசார வாழ்வு வாழ்ந்த மேதை.
திரு.M.அம்பலவாணர் 1st Class Trained (1924 – 1967)
கணித பாடத்தை திறமையாகக் கற்பித்த ஆசிரியர். மாணவர்கள் மனம்கொள்ளத்தக்க வகையில் இலகுமுறையில் நீண்ட காலம் கணிதம் போதித்த ஆசிரியராவார். மிகவும் கண்டிப்பானவர். நேரந் தவறாதவர். கடமையே கண்ணெனப் போற்றியவர். சைவத் தமிழ்ப் பாரம்பரியம் இவரது செயற்பாடுகளில் வெளிப்படையாக இருந்தது. பட்டம், பதவி, புகழ் விரும்பாதவர்.
திரு.S.கந்தையா (1928 – 1965)
காரைநகர், களபூமியைச் சேர்ந்த இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களைத் திறம்படப் போதித்த பெரும்தகையாளர். சமஸ்கிருத மொழியில் மிகுந்த தேர்ச்சியுடையவர். ஊரார் மெச்சும் பண்புடையவர். மிகுந்த அறிவாளியாகத் திகழ்ந்தார். மாணவர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். சமய நம்பிக்கை நிறைந்தவர். ஆசார சீலர். ஆசிரியப் பணியில் நேர்மையும் அர்ப்பணிப்பும் வாய்ந்த ஆசிரியராவார்.
திரு.V.சுப்பரமணியம் 1st Class Trained (1929 – 1962)
தமிழ், தமிழ் இலக்கியம், சமயம் ஆகிய பாடங்களை சுவை படக் கற்பிக்கும் ஆசிரியராவார். இணைப் பாடத்திலும் முன்னின்று செயல் புரிந்தவர். சமாதான நீதிவானாக (து.P) பட்டம் பெற்றவர். கூட்டுறவுத்துறையில் மிக ஈடுபாடு உடையவர். மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, காரைநகர் ப.நோ.கூ.சங்கம் ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கு கொண்டவர். கல்விச் சேவையுடன் சமூக சேவையும் சமமாகச் செய்த பண்பாளர்.
திரு.T.நவரத்தினம் 1st Class Trained Inter Science (1939 – 1968)
கணிதத்தில் மிக்க புலமையுடையவர். மிகத் திறமை வாய்ந்தவர். மாணவர் மனம் கொள்ளத்தக்க வகையில் ஆழமாகவும் விளக்கமாகவும் கற்பிப்பதில் வல்லவர். ஆளுமை நிறைந்த இவர் கண்டிப்பும் கடமையில் கட்டுப்பாடும் உள்ளவராவார். ஆசிரியர்களுடன் வேறுபாடின்றிப் பழகுபவர். யாழ்ப்பாணத்திலிருந்து கல்லூரிக்கு தனது காரில் நேரந் தவறாது வந்து கற்பித்த ஆசிரியராவார்.
திரு.N.வேலுப்பிள்ளை 1st Class Trained (1946- 1960)
இவரை ஐயம்பிள்ளை மாஸ்டர் எனவும் அழைப்பர். இவர் ஆங்கிலம், சமயம் போன்ற பாடங்களைத் திறமையாகக் கற்பிக்கக் கூடியவர். அதிபர் ஆ.தியாகராசாவிற்கு வலது கரம்போன்று செயற்பட்டு நிதி நிர்வாக விடயத்தில் உதவி புரிந்தவர். மாணவர்களிற்கு கற்பிக்கும்போது நகைச்சுவையாகப் பேசி கடினமான பாடங்களையும் எளிதாகப் புகட்டுபவர். பாடசாலையின் விளையாட்டுச் செயற்பாடுகள், சமயச் செயற்பாடுகள் ஆகியவற்றில் மிக ஈடுபாட்டுடன் பங்கு கொண்டவர்.
திரு.A.சிதம்பரப்பிள்ளை Dip.In.Tamil (1947 – 1967)
இவர் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், சமயம் ஆகிய பாடங்களை இனிமையாகவும் ஆழமாகவும் கற்பிக்கும் ஆற்றல் நிறைந்தவர். ஆங்கில மொழியிலும் வல்லவர். சமய நிகழ்வுகள் அனைத்திற்கும் பொறுப்பாக இருந்து செயற்படுத்தியவர். கல்லூரி அதிபருடன் நிர்வாகப் பணிகளில் நன்கு ஒத்துழைத்து செயற்பட்டவர். சைவ ஆசார சீலரான இவர் நீண்டகாலம் கற்பித்து இக்கல்லூரியிலேயே ஓய்வு பெற்றார்.
திரு.P.நாகலிங்கம் 1st Class Trained (1947 – 1963)
1927 இல் இருந்து 1943 வரை உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கற்பித்தார். உயர்ந்த எடுப்பான தோற்றத்தினாலும் இனிய குரலாலும் எல்லோரையும் வசீகரிக்கும் தன்மையுடையவர். எண்கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களை நுட்பமாகவும் மனோதத்துவமாகவும் போதிக்கும் ஆற்றலுடையவர். ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியராக இருந்துள்ளார்.
திரு.N.கனகசுந்தரம் 1st Class Trained (1948 – 1970)
இவர் புகழ்பூத்த நாகமுத்துப் புலவரின் ஏக புதல்வனாவார். கல்லூரியின் பழைய மாணவனாகிய இவர் தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைச் சிறப்புடன் கற்பித்தவர். சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கல்லூரியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியவர் ஆவார். புல்லாங்குழல் இசைப்பதிலும் வல்லவர். கல்லூரிக் கீதத்தை இயற்றி இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்று செயற்படுத்தியவர். தமது சேவைக் காலம் முழுவதிலும் இக்கல்லூரியிலேயே பணியாற்றியவர். இவர் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
திரு.P.ஆறுமுகசாமி B.A. Dip.in.Education (1950 – 1967)
உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு சரித்திரம், குடியியல், தமிழ் ஆகிய பாடங்களைச் சிறப்பாகக் கற்பித்தார். ஆசிரிய தொழிற் சங்கங்களில் அங்கத்தவராக விளங்கிய ஆசிரியர். மாணவர்களின் நலன்களிற்காக உழைத்தவர். கல்லூரியில் பணியாற்றும் காலத்தில் 1967இல் இறைவனடி சேர்ந்தார்.
திரு.S.ஐயாத்துரை B.A.(London) (1950 – 1970)
காரைநகர் புது வீதியைச் சேர்ந்த இவர் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்பித்தவராவர். புவியியல் கற்பித்தலிலும் ஆற்றல் மிக்கவர். நேர்மை, கண்ணியம், கடமையுணர்ச்சி மிக்கவர். தமிழ் உணர்வு மிக்கவர். உயர்ந்த சிந்தனையாளர்.
திரு.P.சங்கரப்பிள்ளை B.Sc. (1954 – 1968)
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு பௌதிகவியல், கணிதம் ஆகிய பாடங்களையும் ஏனைய வகுப்பு மாணவர்களிற்கு விஞ்ஞான பாடத்தையும் கற்பித்தவர். கண்டிப்பு நிறைந்தவர். மாணவர் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர். வேறு பாடசாலைகளிற்கு மாற்றலாகிச் சென்று இறுதியாக விக்ரோறியாக் கல்லூரியில் உப அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
திரு.A.நமசிவாயம் M.A. (1955 – 1973)
பட்டதாரி ஆசிரியரான இவர் புவியியல் பாடத்தில் மிகத் திறமையாகப் போதிக்கும் ஆற்றல் மிகுந்தவர். இனிமையாகப் பேசும் இயல்புடையவர். சயம்பு மேல்மாடி மண்டபம் கட்டுவதற்கு அதிபருக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டவர். சக ஆசிரியர்களுடன் சுமுகமாய்ப் பழகும் பண்புள்ளவர். மாணவர்களை அன்பால் அரவணைத்து கல்வி அறிவு ஊட்டியவர்.
திருமதி கமலாவதி நடராசாரா B.Sc. (1967 – 1988)
இரசாயனவியல் பாடத்தை திறம்பட போதித்த ஆசிரியராவார். க.பொ.த. சாதாரண தரத்தில் பௌதிகவியல், விஞ்ஞான ஆசிரியராகவும் விளங்கினார். மாணவியரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டவர். நேரந் தவறாது கற்பித்தலில் ஈடுபட்டவர். இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்.
திரு.S.சபாநடேசன் B.Sc. (1959 – 1973)
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் கணிதம், பௌதிகவியல் ஆகிய பாடங்களை திறம்படப் போதித்த பேராசான். கணிதம் கற்பித்தலில் மிகுந்த ஆற்றல் நிறைந்தவர். விளையாட்டுத் துறையில் ஈடுபாடு காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். கடமையில் கண்டிப்பு நிறைந்தவர். தோற்றத்தில் பொலிவும், ஆளுமையும், இனிய சுபாவமும் கொண்டவர். இவர் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் என்றும் மாணவர் மனதில் நிறைந்து நிற்கும். இவர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்று வசித்து வந்த நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
திருமதி நாகபூசணி தியாகராசா B.A. (1961 -1988)
அமரர் தியாகராசா காலத்தில் இருந்து கல்லூரிக்கு சேவையாற்றிய ஆசிரியப் பெருந்தகை. மூளாய் கிராமத்திலிருந்து ஒழுங்காக வருகை தந்து சமயமும் தமிழ்ப் பாடமும் புகட்டியவர். நயமாகவும் சில வேளைகளில் கண்டிப்பாகவும் பேசி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றிய ஆசிரியை. ஒழுக்கக் கட்டுப்பாட்டில் கண்டிப்பானவர். ஆசிரியைகளுக்குள் ஒரு திலகமாகத் திகழ்ந்தவர். பெற்றோரும் அவர்களது பிள்ளைகளும் இவரை ஆசிரியராகக் கொள்ளும் பேறு பெற்றவர்கள். இக்கல்லூரியில் சேவையைத் தொடங்கி இக்கல்லூரியிலேயே சேவையை நிறைவு செய்தவராவர்.
No Responses to “காரை இந்துவில் 15 ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரிய மணிகள். பகுதி I”