காரைநகர் இந்துக் கல்லூரியில் 15ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரிய மணிகள் குறித்த சுருக்கமான விபரங்கள் அவர்களது புகைப்படங்களுடன் 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த சயம்பு மலரில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்விணையத்தளமும் அவர்கள் அனைவரையும் கௌரவித்து நன்றிகூறுகின்ற வகையிலும் எமது வாசகர்களின் பயன் கருதியும் அவற்றினை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றது. தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சியில் பங்குகொண்ட ஆசிரிய மணிகள், உப-அதிபர்கள் குறித்த விபரங்களும் எடுத்து வரப்படவுள்ளன.
திருமதி பாலாம்பிகை இராசநாயகம் Special Trained Maths. (1965 -1990)
ஆரம்பத்தில் இப்பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். விசேட கணிதப் பயிற்சி பெற்று 1965இல் இப்பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றவர். கணித பாடத்தை சிறப்புடன் கற்பித்தவர். கண்டிப்பானவர். மாணவிகளின் ஒழுக்கம், விளையாட்டுச் செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டியவர். சக ஆசிரியர்களுடன் நட்புறவுடன் செயற்பட்டவர். ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு செலுத்தியவர்.
திரு.A.குமாரசாமி Sp. Trained Physical Ed. . (1963 – 1970, 1984 -1994)
அதிபர் தியாகராசா காலத்தில் நீண்ட காலம் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் நிரந்தரமாகி கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாய் விளங்கியவர். பழைய மாணவராகிய இவர் உதை பந்தாட்டக் குழுவின் தலைவராக(ஊயிவயin) விளங்கியவர். உடற் பயிற்சிக்கு பொறுப்பாக விளங்கிய இவர் விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சாதனைகள் செய்வதற்கு உறுதுணையாகவிருந்து உற்சாகப்படுத்தியவர். வருடந்தோறும் மெய்வல்லுநர் போட்டிகள் திறம்பட நடப்பதற்கு வழிவகுத்தவர்.
திரு.அ.சோமாஸ்கந்தன் Special Trained Science. (1965 – 1983)
வடமராட்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து பௌதிகவியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தவர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவிருந்து கல்லூரியின் விளையாட்டுத்துறையை உயர்த்துவதற்கு அயராது உழைத்தவர். அவரது காலத்தில் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். கல்லூரியின் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்றுவிப்பாளராக விளங்கியவர். இவரது மாணவர்கள் இன்றும் சர்வதேச நாடுகள் பலவற்றிலும் கழகங்களுக்கிடையேயான போட்டிகளில் பங்குபற்றி கல்லூரியின் பெயரை நிலைநாட்டி வருகின்றனர்.
திரு.R.A.கோவிந்தபிள்ளை English Teachers Certificate (1967 – 1987)
ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர். இவர் ஆங்கிலத்தை முதன்மையாகவும் தமிழ் சமயம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்தார். பாடசாலையில் நடக்கும் சமய சம்பந்தமான விடயங்கள் சகலதுக்கும் பொறுப்பாக இருந்து செயற்படுத்தியவர். இதனால் தமிழ், சமய உணர்வினை மாணவர்களிற்கு ஊட்டிய பெருந்;தகையாவார். காந்தி இல்லத்தின் பொறுப்பாசிரியராக பல ஆண்டு காலம் செயலாற்றியவர். ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் இவர் ஈடுபாடுகொண்டவர்.
திரு.B.M.தங்கராசா Special Trained Tamil. (1968 – 1984)
பண்டத்தரிப்பிலிருந்து வந்து கல்லூரிக்கு அரும்பெரும் சேவையாற்றிய ஆசிரியப் பெருந்தகை. வகுப்புப் பாடபோதனையோடு சியவஸ நூலகப் பொறுப்பையும் நேர்த்தியாக நிர்வகித்தவர். இல்ல விளையாட்டுப் போட்டிகள், கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் ஆகியன வெற்றிகரமாக நடந்தேற முன்னின்று உழைத்தவர். தமிழ். சுகாதாரம், குடியியல் ஆகிய பாடங்களை திறம்படப் போதித்தவர்.
திருமதி பாக்கியலட்சுமி சிவராஜதேவா (இராமுப்பிள்ளை) (1972 – 1988)
மாவடி வீதியிலிருந்து 786ஆம் இலக்க பேருந்தில் ஒழுங்காக வருகை தந்து விஞ்ஞான பாடத்தை மாணவர் கருத்தூன்றிக் கற்குமாறு முயற்சி எடுத்து போதித்த ஆசிரியை. மாணவர் மத்தியில் இராமுப்பிள்ளை ரீச்சர் என வாத்சல்யமாக அழைக்கப்பட்டவர். ஏனைய ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவர்.
திரு.K.M.செல்வரத்தினம் B.A.(London) (1972 -1999)
நவாலியை பிறப்பிடமாகக் கொண்ட இவ் ஆசிரியர் 1972இல் கல்லூரியில் ஆசிரிய சேவையை ஆரம்பித்து இங்கிருந்தே இளைப்பாறியவர். ஆங்கில ஆசிரியராக விளங்கிய போதும் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களை உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு சிறப்பாகக் கற்பித்தவர். சமஸ்கிருதம், பாளி போன்ற மொழிகளிலும் இவர் புலமை மிக்கவர். அமைதியும் அடக்கமான சுபாவமும் உடைய இவர் நடமாடும் நூல்நிலையம் என்று எல்லோராலும் போற்றப்பட்ட அறிவாளியாவார்.
திரு.K.நடராசா B.A. Dip.in.Education (1974 -1989)
சுழிபுரத்தை இருப்பிடமாகக் கொண்ட இவர் கல்லூரிக்கு ஒழுங்காக வருகை தந்து உயர்தர வகுப்புக்களில் பொருளியல் பாடத்தை திறம்படப் போதித்தவராவர். கீழ் வகுப்புக்களில் சமூகக்கல்வி போன்ற பாடங்களையும் போதித்து வகுப்பில் கட்டுப்பாட்டையும் பேணியவர். உயர்தர மாணவர் ஒன்றியத்தின் காப்பாளராகக் கடமையாற்றியவர். 1989இல் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தின் அதிபராகப் பதவியுயர்வு பெற்றுச் சென்றார்.
திரு.N.சத்தியமூர்த்தி B.Sc.(Lond.) (1974 – 1993)
உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். புகுந்த இடமான அராலியில் வசித்து வந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப் பிரிவில் பௌதிக விரிவுரையாளராக தனது பணியை ஆரம்பித்த இவர், இக்கல்லூரியில் பௌதிக ஆசிரியராக நீண்ட காலம் சேவை புரிந்தார். பாடசாலையின் எல்லாச் செயற்பாடுகளிலும் ஊக்கத்துடன் முன்னின்று பணியாற்றியவர். வெளிநாட்டில் உயர் கல்வி பெற்றமை இவரது பரந்த மனப்பான்மைக்கும் துணிவிற்கும் ஆளுமைக்கும் காரணமாக விளங்கியது. இவர் கிறிஸ்தவ போதனை மூலமும் அன்பினாலும் மாணவர்களை நல்வழிப்படுத்தியவராவார். மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். இடப்பெயர்வு காலத்தில் இடமாற்றம் பெற்று வட்டு.இந்துக் கல்லூரிக்குச் சென்றார்.
திரு.சு.சண்முகரத்தினம் B.A.Dip in Ed. (1975 – 1996)
கல்லூரியின் பழைய மாணவன். புவியியல், சமூகக்கல்வி, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சிறப்புடன் போதித்தவர். பதவிகளை விரும்பாத இவர் கல்லூரியின் வளர்ச்சி கருதி பகுதித் தலைவராகவும் உப அதிபராகவும் கடமையாற்றினார். தனது சேவைக் காலத்தில் நிர்வாகச் செயற்பாடுகளில் அதிபர்களிற்கு வலதுகரமாய் விளங்கியவராவர். கல்லூரியில் பணியாற்றிய அதிபர்கள் யாவரும் தமது திட்டங்களை இவரது ஆலோசனையைப் பெற்றே செயற்படுத்தினர். கல்லூரி நிர்வாகத்தின் மூளை எனப் பலராலும் போற்றப்பட்டவர். அமைதியும் சாந்தமான சுபாவமும் கொண்ட இவர் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க உறுதியான வழியைக் காட்டியவராவர்.
திரு.ச.சிவஞானம் B.Sc. Dip.in.Ed. . (1976 – 1990)
உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு இரசாயனவியல் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியரான இவர் பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியாவார். உயர்தர வகுப்பு மாணவர்களை நெறிப்படுத்துவதில் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவுகளில் கற்றதுடன் மருத்துவம், பொறியியல் துறைகளிற்கு பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர் காரைநகர் பல நோக்கு கூட்டறவுவுச் சங்க தலைவராகப் பல ஆண்டுகள் சமூக சேவை ஆற்றினார். கல்லூரி நிர்வாகத்திற்கும் ஏனைய செயற்பாடுகளிற்கும் உறுதுணையாக விளங்கியவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார்.
திருமதி சிவபாக்கியம் அருமைநாயகம் Special Trained Com. (1977 -1992)
இப்பாடசாலையில் வர்த்தகப் பிரிவு 1977இல் ஆரம்பிக்கப்பட்டது. உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு கணக்கியல், வர்த்தகம் ஆகிய பாடங்களைக் கற்பித்தவர். இடைநிலை வகுப்புக்களில் வர்த்தகம், சமயம், தமிழ், சமூகக்கல்வி போன்ற பாடங்களை போதித்தவர். தனது இனிய குரலால் மாணவரை வசப்படுத்தி சிறப்புடன் கற்பித்தவர். கலகலப்பான ஆசிரியர். சமயச் செயற்பாடுகள், பரிசளிப்பு விழா, விளையாட்டுத்துறை என்பவற்றிலும் மனையியல் துறையிலும் முன்னின்று உழைத்த நல்லாசிரியராவர். பாடத்திட்டத்தில் யோகாசனப் பயிற்சி இருந்த காலத்தில் மாணவர்களிற்கு யோகாசனம் பயிற்றுவித்த ஆசிரியருமாவார்.
திரு.ப.விக்கினேஸ்வரன் B.Sc. Dip.in.Ed., SLEAS. (1976 -1990)
புன்முறுவல் பூத்த வதனமும் சாந்தமான குணமும் வாய்ந்தவர். உயர்தர வகுப்புக்களில் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகிய பாடங்களை மாணவர் கருத்தூன்றிக் கற்க அரும்பாடுபட்டவர். இவரது காலத்தில் தூயகணித பாடத்தில் பல மாணவர்கள் சிறப்புச் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் விளையாட்டு மற்றும் முக்கிய நிகழ்வுகளில் முன்னின்று உழைத்தவர். உயர்தர மாணவர் ஒன்றிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவர். ஆசிரியர் கழகத்தின் செயற்பாடுகளில் பெரும் பங்காற்றியவர். பதவியுயர்வு பெற்று ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபராகப் கடமையாற்றியிருந்தார். பின்னாளில் தீவகம், யாழ்ப்பாணம், வலிகாமம் ஆகிய வலயங்களில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பின்னர் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராகப் பணியாற்றியதன் மூலம் இக்கிராமத்திற்கும் கல்லூரிக்கும் புகழீட்டித் தந்துள்ளார்.
புலவர் பூரணம் ஏனாதிநாதன் பயிற்றப்பட்ட ஆசிரியர் (1980 – 1995)
சிறந்த தமிழ்ப் புலவராகிய இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்தவர். கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தமிழ், தமிழ் இலக்கியம், சமயம் ஆகிய பாடங்களை மாணவர்கள் மனம்கொள்ளத்தக்க வகையில் நிபுணத்துவத்துடன் கற்பித்தார். அமைதியும் சாந்தமும் மிக்க இவர் மாணவரை கண்டிப்புடன் வழிகாட்டியவர். மாணவரது எழுத்தாற்றல், பேச்சுத் திறன், நடிப்புத் திறன் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர்.
திரு.S.துரைச்சாமி Special Trained Maths. (1981 – 1994)
கணிதம், தமிழ் ஆகிய இரண்டு பாடங்களிலும் விசேட பயிற்சி பெற்றவர். கணித ஆசிரியராகப் பெயர் பெற்றவர். கல்லூரியில் கணிதம், சமயம், தமிழ் ஆகிய பாடங்களை கற்பித்தவர். கல்லூரியின் பகுதித் தலைவராகக் கடமையாற்றி முகாமைத்துவக் குழுவில் ஒருவராக அதிபர்களின் நிர்வாகச் செயற்பாடுகளிற்கு பக்க பலமாக விளங்கியவர். நூல் நிலைய வளர்ச்சி தொடர்பாக கூடிய கரிசனை காட்டியதுடன் சில காலம் அதற்குப் பொறுப்பாகவும் செயற்பட்டவர். இடப்பெயர்வு காலத்தில் கல்லூரி தனித்துவமாக இயங்க முன்னின்று உழைத்தவர். அவ்வேளையில் மாணவர்களுக்குரிய தளபாடங்களை ஆக்குவதற்கு நிதி திரட்டி உதவியவர்.
செல்வி அ.வைரமுத்து B.Sc. Dip.in.Edu. . (1986 -2005)
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு இரசாயனவியல் பாடத்தையும் ஏனைய மாணவர்களிற்கு கணிதமும் கற்பித்தவர். இவர் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு பகுதித் தலைவராகவும் விளங்கியுள்ளார். மாணவர் ஒழுக்காற்றுச் சபையில் பல ஆண்டுகள் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டவராவர். தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள், பரீட்சை விண்ணப்பங்கள் ஆகியவற்றை தயாரித்தல் போன்றவற்றில் நிர்வாகத்திற்கு உறுதுணையாக விளங்கியவர்.
திருமதி மோகனாம்பாள் சிவகுமார் B.A.(Hons.) Dip.in.Ed. . (1990 – 2005)
இக்கல்லூரியின் பழைய மாணவியாகிய இவர் பொருளியல் சிறப்புப் பட்டதாரியாவார். இவர் பொருளியல் பாடத்தை உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு நீண்ட காலம் சிறப்புடன் போதித்தவர். இப்பாடத்தில் மாணவர்கள் உயர் பெறுபேறு அடையச் செய்துள்ளார். க.பொ.த.சாதாரண வகுப்புக்களில் சமூகக்கல்வி பாடத்தினையும் கருத்துடன் கற்பித்தவர். எளிமையும், சாந்த குணமும் கொண்டவர். உயர்தர வகுப்பு மாணவர் மன்ற பொறுப்பாசிரியராக இருந்து மாணவர்களிற்கு வழிகாட்டியவர்.
No Responses to “காரை இந்துவில் 15 ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரிய மணிகள். பகுதி II”