தமிழ்கூறும் நல்லுலகெங்கும் தனது நாவன்மையால் பெரும்புகழ் பெற்ற தமிழறிஞரும் ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவாளருமாகிய தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் தாம் காரை.இந்துவில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்களையும்,; தமது முன்னேற்றத்தில் காரை.இந்து அன்னையின் பங்களிப்புக் குறித்தும் பதிவு செய்து ஓர் கட்டுரையினை வரைந்திருந்தார். காரை.இந்துவின் 125வது ஆண்டு விழா மலராக வெளியிடப்பெற்றிருந்த சயம்பு மலரில் ‘ஆசிரியனாய் நடை பயிற்றிய அன்னை’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இவரது கட்டுரையில் சிவகுமாரன் அவர்கள் பதிவிட்டுள்ள சில முக்கியமான விடயங்கள் வருமாறு:
காரை.இந்து அன்னையே என்னை ஆசிரியனாய் நடை பழக்கி இனம் காட்டியது.
எனது ஆளுமையை வளர்த்த கல்லூரிகளின் வரிசையில் காரை.இந்துவிற்கே முதலிடம் உண்டு
காரை.இந்துவின் விளையாட்டுத் துறையில் ஈடுபட்ட அனுபவம் பின்னாளில் பெரிதும் கைகொடுத்தது.
நான் சமய, இலக்கிய சொற்பொழிவாளராக மிளிர்வதற்கு மிக அரிய விடயதானங்களைத் தந்தது கல்லூரியின் அரிய பொக்கிசமாக விளங்கிய காரை.இந்துவின் நூல்நிலையமாகும்.
காரை.இந்து என்ற கலைக்கோயிலை என் வாழ்வில் மறக்கமுடியாது என்பதுடன் எப்போது நினைத்தாலும் என் மனசு நிறையும்.
சிவகுமாரன் அவர்களின் முழுமையான கட்டுரையை கீழே வாசிக்க முடியும்:
ஆசிரியனாய் நடை பயிற்றிய அன்னை.
– தமிழருவி த.சிவகுமாரன் –
காரை.இந்துக் கல்லூரி என் வாழ்வில் மறக்கமுடியாத கல்லூரி. ஆசிரியனாய் என்னை இனம் காட்டிய கல்லூரி. என் ஆளுமையை யாழ்.இந்துக் கல்லூரி கண்டு பிடித்தது என்றால் அதை வளர்த்த கல்லூரிகளின் வரிசையில் முதலிடம் காரைநகர் இந்துக் கல்லூரிக்குத்தான். இந்தக் கலைக் கோயிலை எப்பொழுது நினைத்தாலும் மனசு நிறையும்.
யாழ்.இந்துவில் க.பொ.த.உயர்தரம் முடித்துவிட்டு ஊரில் வந்து நின்றோம். இயல்பாகவே ஸ்போட்ஸில் இருந்த விருப்பத்தால் கோவளத்தில் விளையாட்டுக் கழகம் தொடங்கி நடத்தி வரும்பொழுது சோலையான் விளையாட்டுக் கழகத்தின் போசகரும் ஆலோசகருமான துரைச்சாமி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. இவரது அழைப்பும், அப்பொழுது காரை.இந்துவின் அதிபராக இருந்த புகழ்பூத்த பேராசான் பத்மநாதன் அவர்களின் அனுமதியும் சேர நானும் என் நண்பனான வேதரடைப்பைச் சேர்ந்த செல்வச்சந்திரன்(நேரு) அவர்களும் காரை.இந்துவின் தொண்டர் ஆசிரியர்களாகக் கற்பிக்கத் தொடங்கினோம். சுகாதாரம், விஞ்ஞானம் இவையே தான் அதிகம் கற்பித்த பாடங்கள். ஆசிரியர் வராத வகுப்புக்கள் எங்களுக்கு ஆரம்பத்தில் தரப்பட்டாலும் பின்பு நிரந்தர நேரசூசியும் கிடைத்தது.
தரம் 6இல் இருந்து 11வரை படிப்பித்த அந்த இனிய நாட்கள் அழகானவை. எமக்கு கற்பித்தல் நேரத்தை விட நூலகத்தில் இருந்த, இருத்தப்பட்ட நேரங்கள் அதிகமானவை. துரைச்சாமி சேர் நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். நான் ஏறத்தாழ துணை நூலகராகவே இருந்தேன். இவையெல்லாம் 1982ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தவை. காரை.இந்துவின் நூலகம் ஓர் அற்புதமான பொக்கிசமாக அப்பொழுது விளங்கியது. மிகப் பழைய தமிழ் இலக்கிய, சமய நூல்கள் ஏராளம் அங்கு இருந்தன. அந்த நூலகத்தில் நான் கற்றவை, பாடமாக்கியவை மிக அதிகம். பின்னாளில் நான் சமய, இலக்கிய சொற்பொழிவாளராக மிளிர்வதற்கு மிக அரிய விடயதானங்களை தந்த அந்த நூலகத்தையும், கல்லூரியையும் எப்பொழுதும் நன்றியுடன் நினைவுகூருவேன். ஒரு நாள் துரைச்சாமி சேருடன் நடந்த ஒரு ஆக்கபூர்வமான போட்டியில் ‘முத்தைத்தரு பத்தித்திருநகை’ திருப்புகழை அந்த நூலகத்திலிருந்து கல்லூரி முடிவதற்குள் பாடமாக்கி முடித்து துரைச்சாமி சேரின் பாராட்டைப் பெற்றேன். அவர் ஓர் அற்புதமான ஆசிரியர், ஆலோசகர், வழிகாட்டி.
பத்மநாதன் சேர் அதிபராக இருந்த காலமும் ஓர் சிறந்த காலமே. இயல்பாகவே தோற்றப் பொலிவும், ஆசிரியத்துவமும், நிர்வாகத் திறமையும் கொண்ட அதிபர் பத்மநாதன். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலிருந்து காரை.இந்துவிற்கு அதிபராக வந்தவர். கண்டிப்பானவர். அவரைக் கண்டாலே மாணவர்களிற்கு கெடிக்கலக்கம். நல்லவர். என்னில் அன்பு கொண்டவர். தன்னுடைய நேரசூசியை எனக்குத்தந்து கற்பிக்கச் சொன்னார். அதனால் பாடங்கள் அதிகமாகின. சுகாதாரம் பிரதான பாடம். சுகாதாரம் கற்பித்தாலும் அதனுடன் சேர்த்து தமிழ் இலக்கியத்தையும், நல்ல தமிழ்ப் பாடல்களையும் வகுப்புக்களில் கற்பிப்பது எனது வழக்கம். இதனால் மூத்த தமிழ் ஆசிரியையுடன் சிறு முரண்பாடும் அங்கு ஏற்பட்டதுண்டு. விடயம் அறிந்த பிறகு அவர்களும் என்னை, என் தமிழ் ஆர்வத்தை புரிந்துகொண்டார்கள். அவர்கள் தான் திருமதி நாகபூசணி ரீச்சர்.
பத்மநாதன் சேர் காலத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு விழா மறக்க முடியாத ஒன்று. மிகப் பெரியளவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாரதி விழாவை நடாத்தினர்.
அதன் பின் அதிபராக வந்த ஏ.கே.சர்மா சேர் மகோன்னதமான மனிதர். தந்தையின் பாசத்துடன் அனைவருடனும் பழகுவார். கன்னத்தில் கையை சேர்த்து வைத்தபடியே பேசும் பாங்கு அவரது தனி மெனரிஸம். அவர் அதிபராகவிருந்த 1984இல் எனக்கு நிரந்தரமான ஆசிரியர் நியமனமும், அதற்கான பயிற்சியும் கிடைக்கப் பெற்று பொலநறுவை பயணமானேன். அப்பொழுது அவரும் ஆசிரியர்களும் என்னை வாழ்த்தியமை இன்னும் நினைவிருக்கிறது.
காரை.இந்துவில் நான் கற்பித்த வகுப்பறைக் கட்டிடங்களை நினைத்துப் பார்க்கிறேன். வீதியின் இரு புறங்களிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் அநேகமாக பாடம் நடத்தியுள்ளேன். மைதானத்தடி வகுப்பறை, பனஞ்சிராய் மட்டைகளால் வேலி அடைக்கப்பட்டிருந்த வகுப்பறை ஆகியனவும் அவற்றுள் அடங்கும்.
அந்த நாட்களில் அங்கு கற்பித்த ஆசிரியர்களில் இ.ஆ.கோவிந்தபிள்ளை முல்லைப்புலவிலிருந்து சைக்கிளில் வருவார். மெதுவாக வருவார். மெதுவாகப் போவார். மெதுவாகப் பேசுவார். அவர் எனக்கு சொல்லிய அறிவுரைகள் பலப்பல. வித்துவான்.மு.சபாரத்தினம் அவர்கள் ஓய்வுபெற்ற செப்ரெம்பர் 9இல் அவரை நான் வாழ்த்திப் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நாகபூசணி ரீச்சர், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை சேர் மிக அருமையான மனிதர்கள். என் அன்பிற்குரியவர்கள். ஆசிரியர் சோமாஸ்கந்தன், சர்மா சேர் மற்றும் திருப்புலியூர் சிங்கம் என பலரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
அங்கு என்னிடம் கற்ற மாணவர்கள் பலர். அவர்களில் சிலரை என்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அவர்களுள் ஆசிரியருக்கு கொடுக்கும் மரியாதையிலே மிக உயர்ந்து நின்ற மாணவியை நினைத்துப் பார்ப்பேன். அவர்தான் இன்று இக்கல்லூரியின் அதிபராக இருக்கும் வாசுகி. அதிபர் திருமதி வாசுகி தவபாலன் நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை. இன்று இந்த உயர்ந்த பதவியை வகிப்பதற்கு அன்றே இந்தபின்னணியில் பண்பாடு, பண்பு முளைவிட்டுக் காத்திருந்தது என நம்புகின்றேன். அவர் அதிபராக இருக்கும் காலத்தில் கல்லூரியன்னை 125வது ஆண்டு நிறைவைக் காண்பதும் பொருத்தமானதே.
விளையாட்டுத் துறையில் மிக ஈடுபாடுகொண்டு கல்லூரியின் விளையாட்டுப் போட்டிகளில் முன்னின்று பாடுபட்டேன். அந்த அனுபவம் எனக்குப் பின்னாளில் மிகவும் கைகொடுத்தது. காரை விளையாட்டுக் கழகம், கோவளம் இளைஞர் மன்றம், சோலையான் விளையாட்டுக் கழகம் என பல கழகங்கள் முட்டிமோதி நின்ற உயர்ந்த மைதானம் காரை. இந்துவின் விளையாட்டு மைதானம்.
இந்துக் கல்லூரியில் நான் பெற்ற நண்பர்கள் பலர். ஊடகவியலாளரும் ஆசிரியருமான என்.கணேசமூர்த்தி, ஆனந்தசற்குணராசா, தேவராசா, சதாசிவம் சேர் எனப் பலர். இப்படியே இந்த இனிய நினைவுகள் நீண்டுகொண்டே செல்லும். காரை.இந்துக் கல்லூரி ஒரு பெரிய விருட்சம். காரைநகர் மக்களின் சொத்து. அந்தத் தாய்க்கு என்றும் நாம் நன்றியுடையவர்களாய் இருப்போம். ஆசிரியனாய் என்னை நடை பழக்கிய அன்னையை என் இதயத்தில் என்றும் சுமந்து நிற்பேன்.
நன்றி: சயம்பு மலர் – 2013
No Responses to “காரை.இந்து அன்னையை நன்றியுணர்வோடு தமது இதயத்தில் சுமந்து நிற்பதற்கான காரணத்தை வெளியிட்ட புகழ்பூத்த தமிழறிஞர் தமிழருவி சிவகுமாரன்.”