ஆழ்ந்த கணிதப் புலமையும், கற்பித்தல் திறனும் மிக்க நல்லாசிரியராகவும், ஆளுமை, அர்ப்பணிப்பு, நிர்வாகத் திறன், சேவையுணர்வு என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற ஆற்றல் மிகு அதிபராகவும் காரை.இந்துவில் பணியாற்றிய திரு.கே.கே.நடராஜா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது.
1953ஆம் ஆண்டு காரை.இந்துவின் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய திரு.நடராஜா அவர்கள் 1958ஆம் ஆண்டு வரை உள்ள ஐந்து ஆண்டுகளின் பின்னர் அயற் பாடசாலையான யாழ்ற்ரன் கல்லூரிக்கு இடமாற்றலாகிச் சென்று பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு காரை.இந்துவின் அதிபராக பணியை ஆரம்பித்த இவர் வட்டு.இந்துக் கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றி இப்பாடசாலைகளின் சமூகங்களின் பலத்த பாராட்டினையும் மதிப்பினையும் பெற்று விளங்கியவர்.
காரை இந்துவில் அதிபராகப் பணியாற்றிய நான்கு ஆண்டுகளில் கல்லூரிக்கு அளப்பரிய மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளார். கல்லூரியானது கல்வியிலும்;, பௌதிக வளங்களிலும் இவரது குறுகிய கால சேவையில் ஆச்சரியப்படத்தக்க அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இவரது காலத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புக்களின் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றமை வியக்கத்தக்கதும் கல்லூரியின் வரலாற்றில் பதிவுக்குரியதுமாகும். அக்காலத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்த புகழ்பெற்ற முன்னணி ஆசிரியர்களை காரை.இந்துவில் அரச ஆசிரியர்களாக பணியாற்ற வைத்த இவரது செயல் விதந்து போற்றுதற்குரியதாகும். இதனால் அயற் கிராமங்களிலுள்ள மாணவர்கள் நகர்ப் புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் புறத்திலுள்ள இக்கல்லூரியை நாடிவந்து பயின்ற வரலாற்றினை உருவாக்கிய பெருமைக்குரியவர். இக்கல்லூரியிலிருந்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிற்கும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர்.
கல்லூரியின் வடக்குப் பக்க முகப்பு இரு மாடிக் கட்டிடம், மாதிரி விஞ்ஞான ஆய்வுகூடம், மழைநீர் சேமிப்புத் தாங்கி, விளையாட்டு மைதான செப்பம், விளையாட்டு மைதான சுற்றுமதில், பாடசாலை சுற்றுமதில், நடராசா மண்டபத்தின் மேற்குப் பக்க நான்கு வகுப்பறைகள் யாவும் நடராஜா அவர்களால் குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயல்களாகும். கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரும், அப்போதய பாராளுமன்ற உறுப்பினருமாகிய அமரர் ஆ.தியாகராசா அவர்களின் அனுசரணையைப் பெற்று மேற்குறித்த பணிகளை சிறப்பாகச் செய்து முடித்த சாதனையாளர்.
கல்விப் பணியுடன் மட்டும் நின்றுவிடாது சமய, பொது நிறுவனங்கள் ஊடாக காரைநகர் மக்களிற்கான சேவைகளை வழங்கியவர். ஈழத்துச் சிதம்பர திருப்பணிச் சபையின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று தேர்கள் நிறுத்தவதற்கான தேர்முட்டிகளை-மாடம் நிர்மாணித்தவர். பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் திருப்பணியிலும் பல ஆண்டுகள் அருந்தொண்டாற்றிய பெருமகனாவார்.
இவரது துணைவியாரான அமரர் கமலாவதி அவர்கள் இக்கல்லூரியில் மூன்று தசாப்த காலத்திற்கு ஆசிரியப் பணியாற்றியவர். இவரது பிள்ளைகளான சர்வதேசப் பாடசாலை பிரதி அதிபர் அம்பிகா, ஆசிரியர் சிவகுமாரன், புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமாரன் ஆகிய மூவரையும் காரை.இந்து அன்னையின் அரவணைப்பில் கல்வியை பெற வைத்து அனைவரும் சமூகத்தின் மதிப்பு மிக்கவர்களாக உன்னதமான நிலையில் இருப்பது கண்டு அக மகிழ்ந்திருந்தவர். மொத்தத்தில் திரு.நடராஜா அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் காரை.இந்துவின் வளர்ச்சியிலும் அதன் புகழை மேம்படுத்தியதிலும் அளப்பரிய பங்களிப்பினை வழங்கியவர்கள்.
கல்லூரி வாழும்வரை அதன் வளர்ச்சியை ஏற்படுத்தித் தந்த திரு.நடராஜா அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்னாரின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபத்தினையும், ஆறதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் அதிபர் திரு.கே.கே.நடராஜா அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.”