இன்று ஈழத்து எழுத்துத் துறை உலகில் பிரகாசம் பெற்று வருகின்ற முன்னணி இளம் எழுத்தாளராக சடையாளி, காரைநகரைச் சேர்ந்த திரு.திருச்செல்வம் தவரத்தினம் அவர்கள் விளங்கி வருகின்றார். காரை.இந்துவின் பழைய மாணவனான இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரி என்பதுடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் மீன்பிடித்துறையில் டிப்ளோமா கற்கை நெறியினையும், பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கற்கைநெறியினையும் பூர்த்தி செய்துள்ள இவர் தற்போது அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றி வருகின்றார்.
ஆன்மீகம், சோதிடம், சூழலியல் ஆகியவற்றில் மிகுந்த புலமையைப் பெற்றுள்ள இவர், இவை சார்ந்து இதுவரைக்கும் 58க்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். இவரால் எழுதப்பட்ட சில நூல்கள் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் சிறந்தவையாகத் தெரிவு செய்யப்பட்டு மூன்றுமுறை விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் ஒரு கலைப் பட்டதாரியாக இருந்த போதிலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியன சார்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு வருகின்றமை இவரது ஆற்றல் குறித்து வியப்பளிப்பதாகவுள்ளது. சிறுவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பயன்படக்கூடிய நூல்களையும் வெளியிட்டு கல்வி உலகின் பாராட்டிற்குரியவராக விளங்குகின்றார். காரைநகர் பிரதேச செயலகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெற்று வருகின்ற தமிழ் இலக்கியப் போட்டிகளில் கடந்த ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிபெற்று தமது எழுத்துத் திறமையை நிரூபித்து வருபவர். திருச்செல்வம் அவர்கள் தாம் எழுதிய நூல்களை வெளியிட்டு வைப்பதில் புதுமையைக் கையாண்டு வருபவர். கடலிலும், மரங்களிலும், வரலாற்றுப் முக்கியத்துவம் மிக்க இடங்களிலும் மேடைகளை அமைத்து அவற்றில் நூல்களை வெளியிட்டு வருவது அனைவரதும் கவனத்தையும் ஈர்ப்பதாகவுள்ளது.
எழுத்துத்துறையில் மட்டுமல்லாது ஆன்மீகம், சோதிடம் ஆகிய துறைகளிலும் இவருக்குள்ள ஆழமான அறிவும், ஈடுபாடும் போற்றிப் பாராட்டுதற்குரியதாகும்;. ஈழத்திலும், தமிழகத்திலும் உள்ள திருத்தலங்களிற்கு ஆன்மீகச் சுற்றுலாச் சென்று வரும் இவர் பல அருளாளர்களையும், சித்தர்களையும், மத பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்தித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக்கொண்டவர். கதிர்காமக் கந்தன் மீது அளவிலா பக்தி கொண்ட இவர் ஆண்டுதோறும் பாதயாத்திரையாகச் சென்று கதிர்காமக் கந்தனை வழிபட்டு வருகின்ற வழமையைக் கொண்டுள்ளவர். சோதிடத்திலே இவர் செய்து வருகின்ற ஆராய்ச்சியும், புலமையும் பெரு வரவேற்பினைப்பெற்று விளங்குவனவாகும்.. சோதிட அறிஞர்கள் பலரும் இவருடன் தொடர்புகளைப் பேணி இவரது சோதிட அறிவினைப் பகிர்ந்து கொண்டு வருகின்றமை இவரது சோதிட ஆற்றலுக்கு சான்று பகர்வதாகவுள்ளது.
எமது மூதாதையர்கள் மூலிகைகளை உணவாகவும், உணவில் சேர்த்தும் பயன்படுத்தி வந்ததன் மூலம் நீண்ட ஆயுளையும, நோயற்ற வாழ்வினையும் கொண்டு விளங்கினர். அத்தகைய மூலிகைகள் தொடர்பிலும் மிகுந்த அறிவினைக் பெற்று விளங்கும் திருச்செல்வம் அவர்கள் இம்மூலிகைகளின் பயன்பாடு; தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகநூல் ஊடான பதிவுகளை இட்டு வருவதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து அரும் பணியாற்றி வருபவர்.
இத்தகைய ஆற்றலும் சிறப்பும் பொருந்திய தவரத்தினம் அவர்கள், காரை இந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த புதல்வன் என்பதையிட்டு பேருவகையடைகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரது துறைகளில் மேன்மை பெற்று விளங்கவும் தமது ஆற்றல்களை சமூகத்தோடு பகிர்ந்து வருகின்ற அவரது பணிகள் தொடரவும் உளமாரப் பாராட்டி வாழ்த்துகின்றது.
திரு.தவரத்தினம் அவர்களின் எழுத்துத்துறை தொடர்பிலான சில நிழற்படப் பதிவுகளை கீழே பார்வையிடலாம்:
வட மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் சிறந்த நூலாகத் தெரிவுசெய்யப்பட்ட ‘வன வளம்’ என்ற ஆய்வு நூலுக்கான விருதும் சான்றிதழும் பெற்றமை. (2018) வட மாகாண சபையினால் சிறந்த நூலாகத் தெரிவுசெய்யப்பட்ட ஆன்மீக நூலான ‘சந்திர வழிபாடு’ என்ற நூலுக்கான விருதும் சான்றிதழும் பெற்றமை.(2019)
‘கோபெருஞ்செல்வம்’ என்ற நூலை எழுதியமைக்காக வடமாகாண கால்நடைகள் விவசாயத்திற்கான முன்னாள் அமைச்சர் சிவநேசன் அவர்களால் மதிப்பளிக்கப்படுதல்.
கசூரிணா கடற்கரையில் நடைபெற்ற நூல் வெளியீடு.
பிரதேச இலக்கியப் போட்டியில் வெற்றிபெற்றமைக்கான சான்றிதழ்களையும், பரிசில்களையும் பெற்றுக்கொண்டமை.(2020)
No Responses to “எழுத்துத் துறையில் புதுமையும், சாதனையும் படைத்து வரும் காரை.இந்து அன்னையின் புதல்வன் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறது.”