உலகப் புகழ் பெற்றதும், கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும் விளங்குகின்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையினை ஏற்படுத்துவதற்கான வரலாற்றுப் பெரும் பணியில் கனடாவிலுள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் முனைப்போடு ஈடுபட்டு வருவதை பலரும் அறிந்திருப்பீர்கள். தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படுவதன் ஊடாக உலகின் தொன்மை மிக்க, இலக்கிய வளம் கொண்ட மொழியான தமிழின் பெருமையை ஆய்ந்து, அறிந்து உலகத்திற்கு அற்புதமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் எமது அடுத்த தலைமுறையினர் எமது அடையாளமாக விளங்கும் தமிழ் மொழியினைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், தமிழரின் இருப்பினை தக்கவைப்பதற்கும் வழியேற்படுத்துவதாகவுள்ளது.
தமிழ் இருக்கையினை தொடக்கிவைப்பதற்குத் தேவைப்படும் 3.0 மில்லியன் டொலர்கள் என்கின்ற இலக்கில் தமிழ் மக்கள் வாரி வழங்கிவருகின்ற உதவிகளினால் 2.3 மில்லியன் டொலர்கள் என்ற தொகையினை எட்டியுள்ள நிலையில் மிகுதியாகத் தேவைப்படுகின்ற 0.7 மில்லியன் டொலர்களும் விரைவில் கிடைத்து தமிழ் இருக்கை என்ற கனவு நனவாகி அன்னை தமிழுக்கு அரியாசனம் அமைத்து அழகு பார்க்கின்ற தருணம் நெருங்கி வருவதான மகிழ்ச்சிகரமான செய்தியை அறியமுடிகிறது.
இந்தப் பின்னணியில் பழைய மாணவர் சங்கங்களின் உதவியையும் பங்களிப்பினையும் வேண்டிக்கொண்டு தமிழ் இருக்கை செயற்பாட்டுக் குழுவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு வரும் வரிசையில் இவ்வேண்டுதல் கடிதம் எமது சங்கத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரியானது தமிழ்மொழி சார்ந்து ஆற்றி வருகின்ற பணிகள் எம்மக்கள் மத்தியில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தி வருபவை. பல புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களையும், தமிழ்க் கலைஞர்களையும் உருவாக்கி வருவது மட்டுமல்லாது தமிழ்க் கலாசார ;பண்பாட்டு உணர்வினை வளர்த்துப் பாதுகாத்து வருவதில் இக்கல்லூரிக்குப் பெரும் பங்கு இருந்துவருகிறது என்பதையிட்டு நாமனைவரும் மிகுந்த பெருமிதம்கொள்ளமுடியும்.
‘தாய்மலரடி பணிவோம் நம் கல்லூரி
தமிழெனும் அமுதினை பருகிட நிலைகொண்ட’
என்கின்ற எமது கல்லூப் பண்ணின் முதலாவது வரியிலேயே எமது தாய்த் தமிழினை முதன்மைப் படுத்தியதன் ஊடாக எமது கல்லூரியானது தமிழுக்கு வழங்கிவருகின்ற முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ளமுடியும். இத்தகைய பெருமையைக் கொண்டுள்ள கல்லூரியின் பெயரால் கனேடிய மண்ணிலிருந்து பணியாற்றி வருகின்ற எமது சங்கமானது தமிழ் இருக்கை அமைத்தல் என்ற உன்னதமான பணியில் கனேடிய தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து கைகோர்ப்பது எனத் தீர்மானித்திருக்கிறது. எமது சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் தமிழ் உணர்வோடு இவ் அரும்பணிக்கான உதவியை வழங்கி எமது கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் எமது சங்க நிர்வாகம் இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
தாங்கள் உதவ விரும்புகின்ற நன்கொடை சிறிதோ, பெரிதோ அதனை பின்வரும் வழிகளில் ஐனவரி 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்கலாம் என்பதுடன் கனேடிய வருமானவரித்துவறையின் வரிச் சலுகையுள்ள இந்த நன்கொடைக்கான பற்றுச்சீட்டு ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் நன்கொடையாளர்களிற்கு தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும்.
சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி எண்களுள் ஒன்றினை அழைத்தோ அன்றி மின்னஞ்சல் வழியாகவோ அறியத்தரலாம்.
J/Karainagar Hindu College Old Students Association, Canada. என்ற பெயருக்கு எழுதிய காசோலையை பின்வரும் முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கலாம்.
3875, Sheppard Avenue East, Apt # 411, Scarborough, ON. M1T 3L6.
karaihinducanada@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் (E-Transfer) அனுப்பிவைக்கலாம்.
வங்கிக் கணக்கு விபரம்: TD Bank Account No: 5238995
Transit No: 00329
தொடர்புகளுக்கு: (416)804 0587 அல்லது (416)710 6180
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
நன்னொடையினை அனுப்பு வைப்பதில் சிரமங்கள் இருப்பின் குறிப்பிட்ட தொடர்பிலக்கங்கள் ஒன்றுடன் தொடர்புகொண்டால் அதனைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்து தரப்படும்.
தமிழ் இருக்கை குறித்த விளக்கம் காணோளி வடிவிலும் எழுத்து வடிவிலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காணொளி வடிவிலுள்ள விளக்க உரையினை வழங்கியிருப்பவர்: ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடா வளாகத்தின் தமிழ் விரிவுரையாளரும், தமிழ் இருக்கை செயற்பாட்டுக்குழுவின் உறுப்பினரும், ரொறன்ரோ கல்விச் சபையின் பன்மொழிக் கல்வித் திட்ட அலுவலரும் ஆகிய தமிழறிஞர் திரு.பொன்னையா விவேகானந்தன்.
நன்றி: தமிழ் இருக்கை செயற்பாட்டுக்குழு.
No Responses to “ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை(Tamil Chair)) ஏற்படுத்தும் வரலாற்றுப் பெரும் பணிக்கு உதவுமாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை விடுக்கின்ற அன்பான வேண்டுகோள்.”