ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையினை ஏற்படுத்தும் நல்ல கைங்கரியத்திற்கு உதவும் நோக்குடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிதி சேகரிப்புத் திட்டத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளது. நிதி சேகரிப்புக் குறித்த அறிவிப்பு இவ்விணையத்தளம் ஊடாக வெளியிடப்பெற்ற குறுகிய காலத்திலேயே நாம் எதிர்பார்த்த தொகைக்கு மேலான தொகையினை ஒரு சில அனுசரணையாளர்களும், உறுப்பினர்களும் தாமாகவே முன்வந்து வழங்கிய பங்களிப்புடன் பெறமுடிந்துள்ளமையானது தமிழ் இருக்கை என்கின்ற அரும் பணியின் அவசியத்தினையும் தமிழ் மொழி மீதும், காரை.இந்து அன்னை மீதும் உள்ள பற்றினையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் காரணமாக மக்களிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை புரிந்து கொண்டுள்ளோம். ஆயினும் எத்தகைய துன்பங்கள், சோதனைகள், தடைகள் நேர்ந்தாலும் அனைத்தையும் தாண்டி தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் எம் தமிழ் மக்கள் என்ற வகையில் எமது வேண்டுகோளின் அவசியத்தன்மையை ஏற்றுக்கொண்டு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். எவ்வாறாயினும்; உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து சிரமத்தினைத் தர விரும்பவில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கமைய குறைந்தது 20.00 டொலர்களையோ அல்லது மேற்பட்ட தொகையினையோ நீங்களாகவே முன்வந்து வழங்கி உதவுகின்ற நன்கொடையினை ஏற்றுக்கொண்டு சேரும் தொகையினை தமிழ் இருக்கைச் செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க எண்ணியுள்ளோம்.
இதன் மூலமாக ‘தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்’என்கின்ற பாரதியின் கனவினை நனவாக்கிட பழம்பெரும் கல்வி நிறுவனமாகிய காரை இந்துவின் பெயரால் நாமும் பங்களிப்புச் செய்தோம் என்கின்ற மனநிறைவையும், பெருமையையும் பெற்றவர்களாக விளங்கிடுவோம்.
எம் தாய்த் தமிழ்மொழி வாழவேண்டும், எமது எதிர்காலச் சந்ததி தமிழைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும், தமிழின் பெருமையும் தொன்மையும் உலகறியச் செய்யவேண்டும் என்பவற்றிற்காக எம்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளின் வரிசையில் ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையானது மைல்கல்லாக அமைந்து வரலாற்றுப் பெரும் பணியாகக் கருதப்படக் கூடியதாகும் என்ற வகையில் இப்பணிக்கு விரைந்து உதவிட வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.
கனேடிய வருமானவரித்துறையின் வரிவிலக்கினைக் கொண்டுள்ள உங்கள் நன்கொடைக்கான பற்றுச் சீட்டு ரொறன்ரோ பல்கலைக் கழகத்தினால் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
மேலதிக தொடர்புகளிற்கு: 416 8040587 அல்லது 416 7106180
நிர்வாகம், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
தமிழ் இருக்கை என்றால் என்ன, அது எவ்விதம் அமையவுள்ளது, அதன் உன்னதமான பயன்கள் எவை என்பது குறித்து விளக்கமான உரையினை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஆற்றி குறித்த பணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது உரையின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
.
No Responses to “ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஆதரவு தெரிவித்து கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளியும் பழைய மாணவர் சங்கத்தின் மீள் விண்ணப்பமும்.”