பிரதேச செயலர் பிரிவு தோறும் ஒரு பாடசாலையை தேசியப் பாடசாலையாக தரம் உயர்த்தும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக காரைநகர் இந்துக் கல்லூரி உள்ளிட்ட யாழ் மாவட்டத்திலுள்ள பத்துப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதான செய்தி, ஊடகங்கள் வாயிலாக அண்மையில் வெளியிடப்பெற்றிருந்தது. இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவித்தலை எதிர்பார்த்திருக்கும் நிலையில், காரைநகர் இந்துக் கல்லூரியை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்துவதற்குப் பரிந்துரை செய்து அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவிய நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று சென்ற சனிக்கிழமை பிற்பகல் 5.30மணிக்கு கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.
காரை.இந்துவை தேசியப் பாடசாலையாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு உதவிய திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதில் திரு திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களுடைய காரைநகர் பிரதேச இணைப்பாளர் திரு.குருபரன் சுப்பிரமணியம், கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறையுடன் பணியாற்றி வருகின்ற பழைய மாணவன் திரு.மாணிக்கம் கனகசபாபதி, பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோரது பங்களிப்பும், கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களுடைய சிறந்த ஒத்தழைப்பும் பாராட்டப்படக் கூடியது என பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி விளையாட்டு மைதானத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள வைத்தியசாலை மதிலின் ஒரு பகுதி மைதானத்தை நோக்கி உள்வளைந்து காணப்படுவதனால் உதைபந்தாட்ட அணியின் முன்னணி வீரர்களிற்கு அச்சுறுத்தலாகவும், பல பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. வைத்தியசாலை வளவின் 3.2பேர்ச் அளவு பகுதி விளையாட்டு மைதானத்திற்கு விடுவிக்கப்படுமாயின் குறிப்பிடப்பட்ட அச்சுறுத்தலும், பாதிப்புக்களும் நீங்கப்பெறுவது மட்டுமல்லாது மைதானம் அமைப்பான வடிவத்தைப் பெற்று அழகுறக் காட்சியளிக்கும். அந்தவகையில் காணியை விடுவிப்பதற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையினை திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் முன்வைத்திருந்த அதிபர், அவரை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று குறிப்பிட்ட பகுதியையும் காண்பித்தார்.
விஜயம் தொடர்புபட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்துவிற்கு விஜயம் செய்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.அங்கஜன் இராமநாதன் கல்லூரிச் சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.”