மக்கள் நலம்பேணும் நோக்குடன் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி புலம்பெயர்ந்த உறவுகளின் நன்கொடையுடன் ஏற்படுத்தப்பட்டதே வழக்கம்பரை அம்மன் அறக்கட்டளையாகும். இவ் அறக்கட்டளைக்கு கிடைத்து வரும் நன்கொடைகளிலும் ஊக்குவிப்பிலும் ஐக்கிய அமெரிக்கா, உவாசிங்டன் DC(Washington DC)முருகன் ஆலய அடியார்கள் பெரும் பங்களிப்பினை செய்து வருவதாக அறியப்படுகிறது. ஊர்கள் தோறும் உள்ள ஆலயங்களில் அறக்கட்டளைகளை நிறுவி மக்கள் நலச் சேவைகளை முன்னெடுக்கவேண்டும் என்ற வழக்கம்பரை அம்மன் அறக்கட்டளையின் முக்கியமான நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு ஊர்களின் ஆலயங்களிலும் ஏற்படுத்தப்பட்ட 17 அறக்கட்டளைகள் வரிசையில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டதே சடையாளி ஞானவைரவர் அறக்கட்டளையாகும் என்பது சிறப்பானதாகும்.
இவ் அறக்கட்டளையை நிறுவுவதில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரான திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் பெரு முயற்சி எடுத்திருந்தார் என்பதுடன் அதன் போசகராகவும் இருந்து பணியாற்றி வருகின்றார். கோவிட் நெருக்கடியின் காரணமாகப் பாதிக்கப்பட்ட வறிய 25 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் சென்ற ஏப்பிரல் மாதத்தில் இவ் அறக்கட்டளையினால் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் சென்ற விஜயதசமி அன்று 200 குடும்பங்களிற்கு குறுகிய காலத்தில் பயன்தரக்கூடிய தென்னம்பிள்ளைகளும் விநியோகம் செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட சேவைகளை வழங்கும் பொருட்டு வழக்கம்பரை அம்மன் அறக்கட்டளை இரண்டு இலட்சம் ரூபாவினை ஞானவைரவர் அறக்கட்டளைக்கு உதவியிருந்;தது. ஞானவைரவர் அறக்கட்டளையினது மக்களிற்கான சேவையின் தொடர்ச்சியாக அண்மையில் காரை.இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் உயர்தரப் பிரிவில் பயிலும் தலா ஒரு மாணவனுக்கு கல்விக்கான உதவி வழங்கிவைத்திருந்ததுடன் சிவகாமி அம்பாள் முதியோர் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களிற்கு காலை உணவு வழங்குவதற்கான மாதாந்த உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சடையாளி ஞானவைரவர் அறக்கட்டளை நிர்வாகிகள் விபரம் வருமாறு:
தலைவர்: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை
இணை உப தலைவர்கள்:திரு.வி.பிரேமதாஸ்குமாரசிறி
செல்வி வி.விமலாதேவி
செயலாளர்: திரு.தி.தவரத்தினம்
உப செயலாளர்: திரு.ந.ஐங்கரன்
பொருளாளர்: திரு.பா.சண்முகரூபன்
குழு உறுப்பினர்கள்: திரு.க.ஜெயந்தன்
திரு.க.சிறீதரன்
திரு.த.குகதாசன்
திரு.தே.யதீஸ்குமார்
திருமதி அ.ஜெயரூபி
போசகர்கள்: திரு.வி.கேதீஸ்வரதாசன்
திரு.வே.சாம்பசிவம்
திரு.அ.நமசிவாயம்பிள்ளை
கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம்
கணக்காய்வாளர்: திரு.அ.தனபாலசிங்கம்.
‘மற்றவரின் நலத்தை நீ கவனித்தால்
உன் குடும்பத்தை இறைவன் காப்பான்’
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’
ஆகிய ஏட்டில் படித்த வாக்கியங்களை உண்மையாக்குகின்ற வகையில் ஆலயங்கள் தோறும் அறக்கட்டளைகளை நிறுவி மக்கள் நலச் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற முன்னுதாரணமான செயற்பாட்டினை ஏனையோரும் பின்பற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பது மக்கள் நலன் விரும்புவோரது எதிர்பார்ப்பாகவுள்ளது.
ஞானவைரவர் அறக்கட்டளையினால் உதவிகள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “சடையாளி ஞானவைரவர் அறக்கட்டளையின் மக்கள் நலம் பேணும் சேவைகள் வரிசையில் காரை.இந்துவின் மாணவனுக்கும் கல்விக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது.”