பெரியமணல், காரைநகரைச் சேர்ந்த செல்வி சதுர்த்திகா செல்வநாயகம் தனது குடும்பத்துடன் ஸ்காபுறோ, கனடாவில் 2016ஆம் ஆண்டு முதல் குடியேறி வசித்து வருபவர். வேம்படி பெண்கள் உயர் கல்லூரியில் 7ஆம் தரம் வரைக்கும் கல்வியை மேற்கொண்டிருந்த சதுர்த்திகா கனடாவில் Albert Campbell Collegiate Institute உயர்தரக் கல்லூரியில் சேர்ந்து கல்வியை மேற்கொண்டு தற்போது 12ஆம் தரத்தில் இருப்பவர். இப்பாடசாலையில் பயின்ற காலத்தில் கல்வியிலே இவர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஏற்படுத்திய சாதனைகளும் காரணமாக பாடசாலை மட்டத்தில் மிகுந்த பாராட்டினைப் பெற்றவராக விளங்குகிறார். மாணவர் தலைமைத்துவத்திற்கான ஒன்ராறியோ அதிபர்கள் சங்கத்தின் விருதினை 2017ஆம் ஆண்டில் சதுர்த்திகா பெற்றுக்கொண்டமை சிறப்பானதாகும். இவ்விருதினை புதிய குடிவரவாளர்கள் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றது எனக் கருதப்படும் நிலையில் சதுர்த்திகாவிற்கு இதனை வழங்கி அவரது திறமைகளை பாடசாலை அங்கீகரித்திருந்தமை பெருமையளிப்பதாகும். உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றுக்கொண்டைமையால் தனது சக மாணவர்களிற்கு கற்பிக்கின்ற வாய்ப்பு இவரது ஆசிரியையால் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாய்ப்பானது ஒன்ராறியோ விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தில், சதுர்த்திகா உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. சதுர்த்திகாவினால் எழுதப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று விஞ்ஞான ஆசிரியர்கள் தமது கற்பித்தல் வளமாகப் பயனபடுத்தும் வகையில் ஒன்ராறியோ விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையானது சதுர்த்திகாவின் அபார திறமைக்கு சான்று பகர்வதாகவுள்ளது. 9ஆம் தரம் பயின்றுகொண்டிருந்தபோது பாடசாலையின் தரத்தை நிர்ணயிக்கின்ற EQAO பரீட்சைக்குத் தோற்றி 100 மதிப்பெண்களைப் பெற்றுக்கொண்ட ஒரே மாணவியாக சதுர்த்திகா விளங்கி தான் கற்ற பாடசாலைக்கு புகழ்தேடிக்கொடுத்தவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சதுர்த்திகாவிடம் காணப்படும் திறமையை அடையாளம் கண்டுகொண்ட யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினர் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்களின் ஆங்கிலமொழி அறிவினை மேம்படுத்தும் வகையில் செல்வி சதுர்த்திகா மூலமாக இணையவழியில் ஆங்கிலக் கல்வியை போதித்து வருகின்றனர்.
செல்வி சதுர்த்திகாவின் கல்விச் சாதனைகளில் உச்சத்தை தொட்ட சாதனையாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விதம் அமைந்துள்ளது. கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அனுமதிக்கான விண்ணப்பங்களிலிருந்து ரொறன்ரோ பல்கலைக்கழகத்தால் தெரிவுசெய்யப்பட்ட முதல் 50 விண்ணப்பதாரிகளில் செல்வி சதுர்த்திகா இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாது, மதிப்பு மிகுந்த உயரிய புலமைப் பரிசிலாகக் கருதப்படும் President Scholars of Excellence என்கின்ற புலமைப் பரிசிலை பெற்றுக்கொள்வதற்கான தகமையையும் பெற்று சாதனை படைத்துள்ளார். வேலைவாய்ப்போடு கூடிய நரம்பியல் கற்கைநெறிக்கு(Neuroscience Program with CO-OP) அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வி சதுர்த்திகாவின் சாதனையைப் பாராட்டுகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவர் கல்வியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி சிறப்புற்று விளங்கவேண்டும் என உளமார வாழ்த்துகின்றது.
சமூக உணர்வாளரான செல்வி சதுர்த்திகாவின் தந்தையார் திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் என்பதுடன் பலதரப்பட்ட திறமைகளையும் கொண்டு விளங்குபவர். முன்னாள் படவரைஞரான(Draftsman) திரு. செல்வநாயகம் அவர்களே, காரைநகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள அழகிய வரவேற்புக் கோபுரத்தினை வடிவமைப்புச் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சதுர்த்திகாவின் தாயாரான திருமதி டர்முதா செல்வநாயகம் அவர்களும் காரை.இந்துவின் பழைய மாணவியாவார்.
No Responses to “காரை.இந்துவின் கல்விப் பராம்பரியத்திலிருந்து வந்த செல்வி சதுர்த்திகா செல்வநாயகத்தின் கல்விச் சாதனையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”