காரை.இந்துவில் இருபத்தைந்து ஆண்டுகள் வரை கணிதபாட ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலாம்பிகை இராசநாயகம் அவர்களின் மறைவிற்கு நேற்றைய தினம் 25-03-2021 வியாழக்கிழமை கல்லூரிச் சமூகத்தினால் அஞ்சலிக் கூட்டம் நடாத்தப்பட்டு அன்னாரது அர்ப்பணிப்பு மிக்க கல்விப் பணி உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்மசாந்திக்காக இரு நிமிட மௌனப் பிரார்த்தனையைத் தொடர்ந்து பாலாம்பிகை அவர்களின் சேவைக் காலத்தில் அவருடன் பணியாற்றியிருந்த முன்னாள் ஆசிரியரும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சலியுரை நிகழ்த்தியிருந்தார். திரு.முருகமூர்த்தி அவர்கள் தமது அஞ்சலியுரையில், அமரர் பாலாம்பிகை அவர்கள் கணிதபாடத்தை கற்பிப்பதில் காண்பித்த அர்ப்பணிப்பும், ஆற்றலும் தம்மை பெரிதும் கவர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டதுடன் அவரிடம் கற்று, நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் பரந்து வாழ்ந்து வருகின்ற சிறந்த நிலையிலுள்ள பழைய மாணவர்கள் அன்னாரது பெயரையும், கல்லூரியின் பெயரையும் விளங்க வைத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது தனித்துவம் மிக்க கற்பித்தல் செயற்பாடு, மாணவர்களது நலன்களில் அக்கறையுடன் செயற்பட்டமை, அவரது உன்னதமான நற்பண்புகள் என்பவற்றை திரு.முருகமூர்த்தி அவர்கள் தமது அஞ்சலி உரையில் விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதிபர் தமது இரங்கலுரையில் தான் பாலாம்பிகை ரீச்சரிடம் கணிதபாடத்தை கற்றுக்கொண்டமையை நினைவுகூர்ந்ததுடன், முன்னுதாரணமான சிறந்த ஆசிரியை என பலரது மதிப்பிற்கும், பாராட்டிற்குமுரியவராக விளங்கும் அவருடைய மாணவனாக இருந்தமை குறித்து பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “கல்லூரியின் மறைந்த முன்னாள் கணிதபாட ஆசிரியை பாலாம்பிகை இராசநாயகம் அவர்களிற்கு கல்லூரிச் சமூகம் நடாத்திய அஞ்சலிக் கூட்டம்.”