2019ஆம் ஆண்டு நiடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒன்பது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்டமை குறித்த செய்தி முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. தற்போது காத்திருப்போர் பட்டியலிலிருந்து மேலும் ஒரு மாணவிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
முகாமைத்துவக் கற்கைநெறிக்கு ABC என்ற பெறுபேற்றினைப் பெற்று காத்திருப்போர் பட்டியலில்(Waiting List) வைக்கப்பட்டிருந்த செல்வி உசாந்தினி சோதிநாதன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் அறியத்தந்துள்ளார்..
திறமை மிக்க மாணவியான செல்வி உசாந்தினி சோதிநாதன் அவர்கள் தந்தையை இழந்து விட்ட வாழ்வாதார வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது கற்றலுக்கான உதவி வழங்கப்படுமானால் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வார் என முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் பரிந்துரை செய்ததற்கமைய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளராகப் பணியாற்றி வருகின்ற திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் செல்வி உசாந்தினி பரீட்சைக்குத் தோற்றும் வரையுள்ள இரண்டு ஆண்டுகளிற்கு கற்றல் செயற்பாடுகளிற்கு உதவி செய்து வந்துள்ளதுடன் இவரது பயன்பாட்டிற்காக துவிச்சக்கர வண்டி ஒன்றும் திரு.கனகசபாபதி அவர்களினால் உதவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொண்ட செல்வி உசாந்தினி சோதிநாதன் அவர்களையும் இவர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள தயார்படுத்தி விட்ட ஆசிரியர்களையும், நெறிப்படுத்தி ஊக்குவித்த முன்னாள் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் உதவியளித்து ஊக்குவித்த திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் சேவையைப் பாராட்டி உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
செல்வி உசாந்தினி சோதிநாதன் அவர்களிற்கான முதலாவது உதவிக் கொடுப்பனவும், துவிச்சக்கர வண்டியும் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் வழங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
No Responses to “காரை.இந்துவிலிருந்து மேலும் ஒரு மாணவிக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.”