உலக புத்தக தினத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ் மாவட்ட எழுத்தாளர் சங்கம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. ஈழத்துக் கவிதைப் பரப்பில் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்தி வருபவரும், காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய கவிஞர் வடிவேலு வடிவழகையன் அவர்கள், யாழ்.மாவட்டத்தின் பல மூத்த எழுத்தாளர்களும், பல்கலைக்கழகத் தமிழறிஞர்களும் கலந்துகொண்டு தொடங்கப்பெற்றுள்ள இச் சங்கத்தின் பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டமையானது அவரது கவித்துவத்திற்கும், ஆளுமைக்கும் கிடைத்த சான்றாகவே கருதப்படுகிறது.
கவிஞர் வடிவழகையன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே கவிதை இயற்றக்கூடிய இயல்பான ஆற்றலைக் கொண்டு விளங்கியவர். பாடசாலைகளுக்கிடையிலான கவிதைப் போட்டிகளில் பங்குகொண்டு சாதனை படைத்து வந்துள்ளார். தமக்குள்ள கவியாற்றலை உணர்ந்துகொண்ட இவர், அதனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உந்தப்பெற்றவராக கிடைக்கும் நேரங்கள் அனைத்தையும் வாசிப்பிற்காகப் பயன்படுத்தத் தவறவில்லை. கவிதைத் துறையிலே தான் கொண்டிருந்த ஆர்வமும், அதிகமாக வாசித்தமையுமே தன்னை ஓர் கவிஞனாக சமூகத்திற்கு இனம் காட்டியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். முற்போக்குச் சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட வடிவழகையன் அவர்கள் சமூகத்தின் சமகாலம் சார்ந்தும் பகுத்தறிவுக் கருத்துக்களை உள்ளடக்கியும் தமது கவிதைகளை புனைந்து வருகின்ற அதேவேளை, படித்த மக்களை மட்டுமல்லாது பாமர மக்களையும் தமது கருத்துக்கள் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தோடு இலகு தமிழில் கவிதைகளை இயற்றிப் பணியாற்றி வருகின்ற சமூக சிந்தனை கொண்ட கவிஞராவார். ‘சமூகம் துன்புறும்போது எனது பேனா அழும்’ என ஓரிடத்தில் அவர் பதிவிட்டமையை இவரது சமூக அக்கறையின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். சஞ்சிகைகள், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள், இலங்கை வானொலி ஆகியவற்றின் ஊடாக தமது கவிதைகள் மக்களைச் சென்றடையும் வண்ணம் பணியாற்றி வருபவர். அது மட்டுமல்லாது பல முன்னணிக் கவி அரங்கங்களிலும் பங்குகொண்டு கவிதை புனைந்து வாசித்து வருபவர். இவரது முதலாவது அச்சுவழிப் படைப்பாக ‘முகிலெனக்குத் துயிலாகும்’ என்கின்ற கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. அகில இலங்கை ரீதியில் 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக இது தெரிவு செய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் உயரிய விருதான சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுக்கொண்டது. பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது அப்போதய அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாசா அவர்களினால் வடிவழகையன் அவர்கள் விருது வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தார். இதேவேளை வடமாகாண அரசினாலும் முதலாவது பரிசிலுக்குரிய சிறந்த நூலாக இந்நூல் தெரிவு செய்யப்பட்டு வடமாகாண பண்பாட்டுப் பெரு விழாவின்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். கவிஞர் வடிவழகையன் அவர்கள் காரை.மத்தியில் கிராம சேவை அலுவலராகப் கடமையாற்றி வருபவர். அந்தவகையில் அரச அலுவலர்கள் மத்தியில் இலங்கை அரசின் மரபுரிமைகள் அமைச்சினால் 2006ஆம் ஆண்டு தேசியரீதியாக நடாத்தப்பட்டிருந்த ஆக்கத்திறன் போட்டியில் ‘ஞானக்குயிலும் நானும்’ என்ற இவரது கவிதை 2வது இடத்தினையும், 2012ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டியில் ‘வலுவிழப்பு’ என்ற கவிதை 3வது இடத்தையும் பெற்றுக்கொண்டு பரிசில்களைத் தட்டிக்கொண்டவர். 2020ஆம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் இலங்கை அரசின் பௌத்தசாசன பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடலாக்கப் போட்டியில் ஆறுதல் பரிசாக பாராட்டுச் சான்றிதழும், ரொக்கமும் பரிசிலாகப் பெற்றுக்கொண்டவர். கவிதைகள் வாயிலாக மட்டுமல்லாது பொது அமைப்புக்களில் அங்கம் வகித்து தமது சேவையை வழங்கி வருகின்ற சேவையாளர். இலகடி, காரைநகரைச் சேர்ந்த இவர் சிவகௌரி சனசமூகநிலையத்தின் போசகராகவும், பெரியமணல் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து பொதுப் பணியும், தமிழ்ப் பணியும் ஆற்றி வருபவர். அவரது பொதுப் பணியைக் கௌரவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அகில இலங்கை சமாதான நீதிவானாக இவரை நியமித்து பெருமைப்படுத்தியது. தனது பெயரோடு ஊரின் பெயரையும் சேர்த்து காரையூர் கவிஞர் வடிவழகையன் என பயன்படுத்தி வருவதன் ஊடாக காரை.மண்ணையும் பெருமைப்படுத்தி வருபவர்.
பல்வேறு சிறப்புக்களைக் கொண்டு பொதுப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு சேவையாற்றி வருவதன் ஊடாக தாம் கற்ற பாடசாலையான காரை.இந்துவிற்கும் புகழ் சேர்த்து வருகின்ற காரை.இந்துவின் பழைய மாணவனான கவிஞர் வடிவழகையன் அவர்களை காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
கவிஞர் வடிவழகையன் பெற்ற கௌரவங்கள் தொடர்பிலான புகைப்படங்களும், காணொளியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட எழுத்தாளர் சங்கம் தொடக்கி வைக்கப்பட்ட கூட்டத்தில் பொருளாளராகத் தெரிவானபொழுதுமுகில் எனக்கு துகிலாகும் கவிதை நூலுக்கு வடமாகாண அரசின் விருது வழங்கப்பட்டபொழுதுமுகில் எனக்கு துகிலாகும் நூல் வெளியீட்டு விழாவின்பொழுது யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி சண்முகதாஸ் அவர்கள்.
சாகித்திய மண்டல விருதினை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கிவைத்தபொழுதின் காணொளி
No Responses to “யாழ் மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்ட காரை.இந்துவின் பழைய மாணவன் காரையூர் கவிஞர் வடிவழகையன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”