தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளேன். தான் கற்ற காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவராக மார்க்கண்டு அவர்களைப் பார்க்கின்றேன். கல்லூரியின் வளர்ச்சிக்காக கொழும்பிலே பழைய மாணவர் சங்கத்தின் கிளையினை உருவாக்கவேண்டும் என விரும்பி கொழும்பு வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களை ஒன்று திரட்டி 1998ஆம் ஆண்டு இச்சங்கத்தினை உருவாக்கிய முக்கிய உறுப்பினர்களில் மார்கண்டு அவர்களும் ஒருவராக விளங்குபவர். அன்றில் இருந்து இன்று வரைக்கும் கொழும்புக் கிளையின் செயலாளராகச் செயற்பட்டு காரைநகர் இந்துக் கல்லூரியின் அபிவிருத்திக்கு தம்மாலான சேவைகளை வழங்கி வந்துள்ளார். நான் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் அவர் உடல் தளர்ந்த நிலையிலும்கூட பாடசாலையை மூன்று தடவைக்கு மேலாக நேரில் தரிசித்தும், தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டும் பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். குறிப்பாக நான் அதிபராக கடமையாற்றியபோது பாடசாலைக்கு அவசியமாகத் தேவைப்பட்ட இரண்டரைப் பரப்புக் காணியை பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஊடாக கொள்வனவு செய்து கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அந்த வகையில் கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய செயலாளர் மார்க்கண்டு அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், கல்லூரிச் சமூகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திருமதி வாசுகி தவபாலன்
அதிபர்,
யா/வைத்தீஸ்வரா கல்லூரி
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்களின் மறைவு குறித்து காரை.இந்துவின் முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தி.”