காரை.இந்துவின் பழைய மாணவனும், முன்னாள் ஆசிரியரும், யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் உப அதிபருமாகிய திரு.ஐயம்பிள்ளை தேவகிருபாகரன் அவர்கள் தனது 36 ஆண்டுகால கல்விச் சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுள்ளமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டியும், வாழ்த்தியும் செய்தி வெளியிட்டுள்ளது.
தேவகிருபாகரன் அவர்கள் காரை.இந்துக் கல்லூரியில் பயின்று (1973- 1980) பல்கலைக் கழகம் சென்று பௌதிகவியலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தினைப் (B.Sc.) பெற்றுக்கொண்டவர். பாடசாலையின் இடப்பெயர்வுக்கு முன்னரும் பின்னருமான காலப் பகுதியில் 15 ஆண்டுகளாக (1990-2005) ஆசிரியப் பணியாற்றி பௌதிகவியல் பாடத்தை சிறப்பான முறையில் உயர்வகுப்பு மாணவர்களிற்கு கற்பித்து வந்தவர். காரை.இந்துவில் 1997ஆம் ஆண்டு கணினி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கல்வித் திணைக்களத்தின் விசேட பயிற்சியினைப் பெற்ற திரு.தேவகிருபாகரன் அவர்கள் இக்கல்லூரியில் முதன்முதலாக கணினிக் கல்வியை போதித்த பெருமைக்குரியவர். கல்லூரியின் அதிபர்களாக (அமரர்) தேவநாயகி பாலசிங்கம், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோர் பணியாற்றிய காலத்தில் கல்லூரி முகாமைத்துவக் குழு உறுப்பினராக பணியாற்றி இவ்விரு அதிபர்களின் நிர்வாகங்களிற்கும் இவர் வழங்கியிருந்த அபரிதமான ஒத்துழைப்பு விதந்து போற்றுதற்குரியதாகும். கற்பித்தலில் தேவகிருபாகரன் காட்டிய ஆர்வமும், அர்ப்பணிப்பும் நிர்வாக விடயங்களில் ஆளுமையுடனான ஒத்துழைப்பும் கல்லூரியை மீளக் கட்டியெழுப்பியதில் பெரிதும் உதவியுள்ளது. காரைநகரைச் சேர்ந்த சிறந்த கல்விப் பராம்பரியத்திலிருந்து வந்த இவரது தந்தையார் (அமரர்) ஐயம்பிள்ளை அவர்களும், தாயார் (அமரர்) பாக்கியம் அவர்களும் நல் மாணாக்கர்கள் பலரை உருவாக்க உழைத்த சிறந்த ஆசிரியர்கள் என்பதுடன் இவரது சகோதரியான திருமதி வாசுகி பரமநாயகம் அவர்கள் காரை.இந்துவில் விஞ்ஞான ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியிருந்தமையும் இவரது துணைவியாரான பிரியதர்சினி அவர்கள் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியில் உப அதிபராக பணியாற்றிய தேவகிருபாகரன் அவர்கள் தனது 36ஆண்டு கால கல்விச் சேவையிலிருந்து அகவை அறுபதை அடைந்த 6-07-2021 தொடக்கம் ஓய்வு பெற்றுள்ளார்.வைத்தீஸ்வராக் கல்லூரிக்கான இவரது கல்விச் சேவையை கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்ற சேவைநலன் பாராட்டு மடல் ஒன்றினை இக்கல்லூரியின் அதிபரும், காரை.இந்துவின் பழைய மாணவியும், இந்துவின் முன்னாள் அதிபருமாகிய திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வாசித்து திரு.தேவகிருபாகரனிடம் இவரது இல்லத்தில் வைத்துக் கையளித்திருந்தார். இதன்போது தேவகிருபாகரன் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
காரை.இந்துவிற்கான தேவகிருபாகரன் அவர்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய அளப்பரிய கல்விச் சேவையை நன்றியோடு நினைவுகூர்ந்து அவரைப் பாராட்டி வாழ்த்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, அவரது ஓய்வு காலம் சிறப்புற்று மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விளங்க இறைவனைப் பிரார்த்திப்பதுடன் 60வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றது.
தொடர்புபட்ட புகைப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன:காரை.இந்துவின் முகாமைத்துவக் குழு (2005)- தேவகிருபாகரன் அவர்கள் வலது பக்க இறுதியில் காணப்படுகின்றார்.
No Responses to “36 ஆண்டுகளாக கல்விச் சேவையாற்றி காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்து மணிவிழாக் காணும் ஆசிரியர் தேவகிருபாகரன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”