யாழ்ப்பாணம் மேற்குத்திசையில் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட காரைதீவு பொன்னாலைப் பாலம் மூலம் பெருநிலப்பரப்புடன் இணைக்கப்பட்டு காரைநகர் எனப் பெயர் பெற்ற கிராமமாகும்.
உலகப் பிரசித்திபெற்ற தொன்மை புகழ் ஈழத்துச் சிதம்பரம் இயற்கை எழில் கொஞ்சும் கசூரினா கடற்கரை ஆகியவற்றால் இக்கிராமம் ஒரு வணக்கத்திற்குரிய ஸ்தலமாகவும் சுற்றுலா மையமாகவும் திகழ்கின்றது.இங்கு பல பள்ளிக்கூடங்கள் காணப்படுகின்ற போதிலும் காரைநகர் இந்துக் கல்லூரியே திலகமாக அமைந்துள்ளது.பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட முன்னர் இந்துக் கல்லூரி சபையினால் நிர்வகிக்கப்பட்டு ஒரு உதவி பெறும் பாடசாலையாகவிருந்தது.
இந்துக் கல்லூரி சபையினால் நான் இக்கல்லூரிக்கு ஓர் உயிரியல் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன்.நான் இவ்வூரைச் சேர்ந்தவரோ அன்றியும் இக்கல்லூரியின் பழைய மாணவரோ அல்லள்.இருப்பினும் நூற்றாண்டைக் கடந்து அளப்பரிய கல்விச் சேவையை வழங்கிவரும் பெருமை மிக்க பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டுள்ள அதன் வளர்ச்சிப் பாதையில் ஏறத்தாழ ஒரு தசாப்த காலம் சேவையாற்றியதன் மூலம் அதன் செழுமையான வரலாற்றில் சிறிய இடத்தைப் பெற்றுள்ளேன் என்ற வகையில் சயம்பு மலருக்கு ஒரு ஆக்கத்தை வழங்குவதற்கு தகுதி பெற்றுள்ளேன் என கருதுகின்றேன்.எனது எண்ணங்களை எழுத்துருவில் வடிக்கவிழைகின்றேன்.
1957ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதி எனது வாழ்நாளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தினமாகும். யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஓர் குறிகிய காலம் தற்காலிக ஆசிரியராக கடமையாற்றிய பின்னர் முதன்முதலாக பெற்ற நியமனம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.இக்கல்லூரியில் நான் வைத்த முதல் காலடி பின்னர் யாழ்ப்பாணப் பெண்களுக்கான ஒரேயொரு தேசியபாடசாலையான யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் அதிபராக பதவி உயர்வு பெற்றமைக்கு அடிநாதமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
நான் ஊருக்கும் கல்லூரிக்கும் புதியவர் என்பதால் இங்குள்ள மக்களுக்கு ஏற்புடையவராக இருப்பேனோ என்ற பயவுணர்வுடன் கல்லூரிக் காரியாலயதிற்குள் எனக்கு கல்வியூட்டிய எனது அருமைத் தந்தை சகிதம் நுழைந்தேன்.எனது எதிர்பார்ப்பிற்கு மாறாக அன்றய அதிபர் திரு.ஆ.தியாகராசா அவர்கள் என்னை இன்முகத்துடன் வரவேற்றதுடன் கல்லூரி வளாகத்திற்கு அழைத்துச் சென்று ஆசிரியர்கள் மாணவர்களிற்கு அறிமுகஞ் செய்து வைத்தார்.அவர்களளின் புன்னகை அவர்களால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டேன் என்பதை உணர்த்துவது போல அமைந்திருந்தது.எனது மனதை கௌவிக்கொண்டிருந்த அச்சம் விட்டகன்று ஒரு நம்பிக்கை பிறந்தது.இந்த நம்பிக்கைதான் இக்கல்லூரியில் 1957முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளிற்கு சேவையாற்ற உறுதுணையாகவிருந்தது எனலாம்.
யாழ்நகரில் எனது இல்லம் அமைந்திருந்த விக்ரோறியா வீதியிலிருந்து தினமும் கடமைக்கு சென்று திரும்புவேன்.பேரூந்து வசதிகள் இருந்த போதிலும்(ஒரு வழிக்கட்டணம் 40 சதம்)இவ்வூரைச் சேர்ந்தவரும் யாழ்நகரில் வசித்தவருமாகிய திரு.ரி.நவரட்ணம் ஆசிரியரின் EY3640 என்ற கார் எனது போக்குவரத்து வசதியை இலகுவாக்கியது.திரு.என்.சபாரத்தினம் திரு.எம்.இளையதம்பி திரு.எஸ்.கோபாலசிங்கம்(இவர்கள் இப்போது இல்லை)ஆகியோரும் உடன் வருவார்கள்.இது ஒரு நீண்ட பயணமாக இருந்தபோதிலும் கல்லுண்டாய் வழியாகச் செல்லும்போது மருதம் நெய்தல் நிலப்பரப்புக்களை இரசித்தவண்ணம் பயணிப்பேன்.குறிப்பாக பொன்னாலைப் பாலம் வந்ததும் காட்சிகள் மாறும்.அந்த இனிய நாட்களை மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.
அக்காலத்தில் யாழ் மாவட்டத்தில் குக்கிராமங்களில்கூட சிறந்த தரமுள்ள பாடசாலைகள் நிறுவப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தன.இதனால் நகர்ப்பாடசாலைகளிற்கு மாணவர்கள் படையெடுப்பது என்பது மிகமிக அரிதாகவே காணப்பட்டது.இருவேளைப் பாடசாலையாக இயங்கியமையால் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டது.ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஒரு நெருக்கமான உறவும் நன்மதிப்பும் காணப்பட்டது.இதனால் கற்றல் கற்பித்தல் சுமூகமாக நடைபெற்றன.மாணவர்கள் சிந்தித்து செயலாற்ற தூண்டப்பட்டனர்.இதனால் பிரத்தியேக வகுப்புக்களிற்கு செல்வது என்ற பேச்சிற்கே இடமில்லாத நிலை இருந்தது.
அவர்களுக்கு போதிய ஓய்வு நேரம் கிடைத்திருந்தது.இத்தகைய கல்லூரியை நிர்வகித்த அதிபர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகின்றது.அந்த வரிசையில் வந்த அதிபர்கள் அமரர்களாகியும் இன்றும் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கின்றது என்றால் அவர்களிற்கு ஒரு வரலாறு உண்டு என்பது புலனாகும்.காரைநகர் இந்துக் கல்லூரியின் பொற்காலம் அதிபராக பதவி வகித்த ஆ.தியாகராசாவின் நிர்வாகக் காலம் எனலாம்.அவர் அம்மண்ணின் மைந்தன் என்பதோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.கண்டிப்பான போக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உழைக்கக்கூடிய மனவலிமையும் ஆவலும் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இதனால் அவரின் நிர்வாகத்தில் பௌதிக மனிதவளம் மேம்பட்டிருந்தது.அடைவுகள் போற்றத்தக்கதாகவும் மாணவர்கள் நல்ல ஒழுக்கசீலர்களாகவும் பண்புடனும் பணிவுடனும் நடந்துகொண்டனர்.அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் ஆகியோரின் ஒத்துழைப்பும் நிறையவே காணப்பட்டது.அதிபர் தியாகராசாவின் உயர்ந்த சேவையை கருத்திற்கொண்ட கல்லூரிச் சமூகம் கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என நாமம் சூட்டி அழியாப் புகழை அவருக்கு தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகம்.
1991ல் ஏற்பட்ட இடப்பெயர்வு இக்கிராமத்தின் இயல்பு வாழ்க்கையை ஊடறுத்துச்சென்றது.மண் பற்றும் பாரம்பரியங்களில் தீவிர பற்றுறுதியும் கொண்ட காரைநகர் மக்கள் ஊரைவிட்ட நிலையில் அங்கு மயான அமைதி நிலவியதை அண்மையில் கல்லூரி விழா ஒன்றிற்கு சென்ற சமயம் என்னால் உணரமுடிந்தது.சைவத்தையும் தமிழையும் வளர்த்த சான்றோர்களையும் உழைப்பில் உயர்ந்த உத்தமர்களையும் கல்விமான்களையும் பல்துறை விற்பன்னர்களையும் உருவாக்கிய இக்கல்லூரியும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிய நிலை கவலைக்குரியதாகும்.இருப்பினும் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறைவையைப் போல இக்கல்லூரி படிப்படியாக வளர்ச்சியடைந்து சகல துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வருவதையிட்டு பெருமையடைகின்றேன். 2004ஆம் ஆண்டு க.பொ.த.(சாதாரணம்)தர பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் 1AB பாடசாலைகளின் பெறுபேறுகளின் கணிப்பீட்டின்படி இக்கல்லூரியில் 57 வீதமானோர் சித்தியடைந்து தீவக வலயத்தில் முதலாம் இடத்தையும் யாழ் மாவட்டத்தில் 16வது இடத்ததையும் பெற்றுள்ளது பெருமைக்குரிய விடயமாகும்.இவர்களுக்கு கல்வி போதித்த அதிபர் ஆசிரியர்கள் ஆகியோரைப் பாராட்டுகின்றேன்.
ஸ்தாபகர் அமரர் முத்து சயம்பு உபாத்தியாயர் இக்கல்லூரியை நிறுவும்போது கொண்டிருந்த நோக்கங்களை நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.இப்பிரதேச மக்களிற்கு நிறைவான கல்விச்சேவையினை தொடர்ந்தும் வழங்கவும் கல்லூரி வளரவும் வாழ்த்துகிறேன்.
நன்றி:சயம்பு மலர்-2005
No Responses to “காரை இந்துவின் முன்னாள் ஆசிரியையும் பின்னர் யாழ் வேம்படி மகளிர் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் அதிபருமாகிய செல்வி இரத்தினேஸ்வரி இராஜரட்ணம்B.Sc,Dip-In-Ed ,SLPS-1அவர்களின் அனுபவப் பதிவுகள்”