காரைநகர் இந்துக் கல்லூரியில் 39 ஆண்டுகள் (1915-1954) அர்ப்பணிப்பு மிக்க கல்விப் பணியாற்றி மாணவர் நெஞ்சங்களில் நிலைபெற்று விளங்குபவர் ஆர்.கந்தையா மாஸ்டர் ஆகும். அவரது புதல்வியே திருமதி நடராசா சிவபாக்கியம் ஆவார். காரை.இந்துவின் பழைய மாணவியான இவர், காரை.இந்துவில் பல ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியிருந்தது மட்டுமல்லாது பல கல்விசார் நிறுவனங்கள் ஊடாகவும் ஆற்றிய மகத்தான கல்விப் பணியின் வாயிலாக காரை.இந்துவிற்கு பெரும் புகழ் சேர்த்தவர். இத்தகைய பெருமை பொருந்திய திருமதி நடராசா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது என திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் சிவபதம் அடைந்துள்ளமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆங்கிலத்தில் மிகுந்த புலமையைக் கொண்டு விளங்கிய திருமதி சிவபாக்கியம் அவர்கள் தமது கற்பித்தல் ஊடாக ; காரை.இந்துவின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியை சிறப்பான முறையில் முன்னெடுத்த நல்லாசிரியர் என்ற பெயரினைப் பெற்றவர். காரை.இந்து அன்னையின் விசுவாசம் மிக்க புதல்வியான இவர் தனது ஓய்வு காலத்திலும் ஆங்கிலக் கல்விச் சேவையினை இக்கல்லூரிக்கு வழங்கி உதவியவர். இக்கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு விளங்கிய இவர் கல்லூரியின் நிர்வாகங்களுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணி வந்ததுடன் அவ்வப்போது ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி ஊக்கிவித்து வந்துள்ளார். இவர் தமது தந்தையாரான அமரர் கந்தையா மாஸ்டர் அவர்களின் நினைவாக கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போது சிறந்த நல்லாசிரியர்களிற்கான விருதினை வழங்குவதற்கு உதவி வந்துள்ளார். 1997ஆம் ஆண்டில் வட-கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சில் கல்வி அபிவிருத்தி ஆய்வினை நோக்காகக் கொண்டு நிறுவப்பட்ட பிரிவானது, ஆங்கிலத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்களை பணிக்கமர்த்தி இவரது சேவையைப் பெற்றுக் கொண்டமையானது இவரது ஆங்கிலப் புலமைக்கும், நிர்வாக ஆற்றலுக்கும் சான்று பகர்வதாகவுள்ளது. அது மட்டுமல்லாது ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தின் (German Technical Cooperation-GTZ) திருகோணமலை அலுவலகத்தில் 1999ஆம் ஆண்டு முதலாக ஆங்கில பாடத்திற்கான பாடத்துறை நிபுணராக (Subject Specialist) நியமனம் பெற்று சிறப்பாகப் பணியாற்றியவர். நிறுவனத்தின் செயற்பாடுகளை அறிக்கையிடுவதிலும், நூலாக்கம் செய்வதிலும் பெரும் பங்காற்றியவர். சிறப்பாக, நிறுவனத்தின் செயற்பாட்டு அறிக்கைகளை தலைமை அலுவலகத்திற்கு உரிய காலங்களில் அனுப்பி வைத்ததன் மூலம் தலைமை அதிகாரிகளின் பாராட்டையும், மதிப்பையும் பெற்று விளங்கியவர். 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையுள்ள ஏழு ஆண்டுகள் காலப்பகுதியில் வன்னிக் கல்வி அபிவிருத்தித் திட்டம், ஆரம்பக் கல்வி அபிவிருத்தித் திட்டம், ஆரம்பக் கல்விக்கான பாதுகாப்புத் திட்டம் ஆகிய முக்கியமான திட்டங்களில் பெரும் பங்களிப்பினை வழங்கியவர். கல்வி, உளநல அபிவிருத்திக்காக 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிய ‘ஆறுதல்’ அமைப்பிலும் இவர் இணைந்து நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்தமையும் பதிவிற்குரியதாகும். இவருடைய சேவைக் காலத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டத்திற்கு முன்னின்று உழைத்தவர். முன்பள்ளிப் பிள்ளைகளின் ஆங்கிலக் கையேடுகளை தயாரித்ததிலும் இவரது பணி போற்றுதற்குரியதாகும்.
திருமதி நடராசா அவர்கள், காரைநகரில் முதன்முதலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ‘சங்கீதபூசணம்’ பட்டத்தினைப் பெற்றவராகக் கருதப்படும் பெருமைக்குரிய சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞரும், ஓய்வுநிலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளருமாகிய அமரர் நடராசா அவர்களின் துணைவியார் என்பதுடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அரசாங்க அதிபராகக் கடமையாற்றி மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற அமரர் பொன்னம்பலம் அவர்களின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல்வேறு உன்னதமான பண்புகளைக் கொண்டு விளங்கிய இவரிடத்தில் காணப்பட்ட மனிதநேயப் பண்பு விதந்து போற்றுதற்குரியதாகும். ஆங்கிலக் கல்வியில் ஆர்வம் கொண்ட பலரையும் தமது இல்லத்திற்கு அழைத்து இலவசமாக ஆங்கிலக் கல்வியை கற்பித்து வந்தது மட்டுமல்லாது உதவிகள் கேட்டு தம்மை நாடிவந்த பலருக்கும் நிதி உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிய சிறந்த மனிதநேயப் பண்பாளர்.
திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்கள் காரை.இந்துவிற்கு வழங்கியிருந்த அர்ப்பணிப்பும் ஆற்றலும் மிகுந்த சேவையினை நன்றியோடு நினைவுகூர்ந்த காரை.இந்துக் கல்லூரிச் சமூகம் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு இவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்ததுடன் நிறுவுனர் தின பேருரையையும் நிகழ்த்த வைத்திருந்தது. அத்தருணத்தில் சிவபாக்கியம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டிருந்த நிறுவுனர் தினப் பேருரையானது மிகுந்த பாராட்டைப் பெற்ற ஒன்றாக அமைந்திருந்தது.
அதிபர் பொன் சிவானந்தராசா அதிபராக கடமையாற்றிய காலத்தில் (2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டதன் ஊடாக கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவுனர் தினப் பேருரையில் திருமதி சிவபாக்கியம் நடராசா குறிப்பிட்டுள்ளமை இத்தருணத்தில் நாம் நன்றியோடு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்களின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
மேற்குறித்த அனுதாபச் செய்தியில் இடம்பெற்றுள்ள முக்கியமான தகவல்களை வழங்கி உதவிய ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களிற்கு எமது நன்றி.
திருமதி சிவபாக்கிம் நடராசா அவர்கள் 2015ஆம் ஆண்டு நிகழ்த்திய நிறுவுனர் தின பேருரை தொடர்பில் இவ்விணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியை கீழே உள்ள இணைப்பினை அழுத்தி பார்வையிடுவதன் மூலம் திருமதி சிவபாக்கியம் நடராசா அவர்களை நினைவுகூருவதுடன் அன்னாரினால் பதிவுசெய்யப்பட்ட கல்லூரியின் முக்கியமான வரலாற்றுத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்:
https://www.karaihinducanada.com/?p=3356
No Responses to “தந்தையாரின் வழியில் அரும் கல்விப்பணியாற்றிய திருமதி நடராசா சிவபாக்கியம் அவர்களின் மறைவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.”