காரைநகர் இந்துக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் வரை (1962 – 1972) ஆசிரியராகப் பணியாற்றியிருந்தவர் திரு.கு.குணபாலசிங்கம் அவர்கள். கலைத்துறைப் பட்டதாரியான இவர் உயர் வகுப்பு மாணவர்களிற்கு சரித்திரம், பூமிசாஸ்திரம் ஆகிய பாடங்களை திறம்படக் கற்பித்து வந்து பல மாணவர்களது மனங்களிலும் நிலைபெற்று விளங்குபவர். மாணவர்களது கல்வியில் மிகுந்த கரிசனை கொண்டுள்ள இவர் காரை. இந்துவில் கற்று வருகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவவேண்டும் என்ற தனது எண்ணத்தினை தம்மோடு தொடர்பில் இருந்து வருகின்ற இவரது மாணவனும், யாழ்ற்ரன் கல்லூரியின் முன்னாள் அதிபருமாகிய திரு.ந.பரமசிவம் அவர்களிடம் தெரிவித்திருந்தார். திரு.பரமசிவம் அவர்கள் உடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக திரு.குணபாலசிங்கம் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவினை கல்லூரிக்கு உதவியுள்ளார். இவ்வுதவித் தொகையினை வழங்கம்பரை, சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்தில் வைத்து காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் வியாழக்கிழமை அன்று வழங்கியிருந்தார். இதன்போது ஓய்வுநிலை அதிபர் திரு.பரமசிவம் அவர்களும் உடனிருந்தார். திரு.குணபாலசிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உதவித்தொகை ஐம்பதாயிரமும் இலங்கை வங்கியின் காரைநகர் கிளையில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு இதன் மூலமாகப் பெறப்படும் வட்டித்தொகையினை க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு ஊக்குவிப்பு உதவியாக வழங்கப்பட்டு வரவுள்ளதாக அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
காரை.இந்துவிற்கு சிறந்த கல்விச் சேவையினை வழங்கியிருந்தது மட்டுமல்லாது இக்கல்லூரியின் மாணவர்களது கல்வியில் அக்கறைகொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவியளித்த திரு.குணபாலசிங்கம் அவர்களை கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பாராட்டுவதுடன் உளமார்ந்த நன்றியையும் தெரிவிப்பதாகக் கூறிய அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்கள் நன்கொடையினைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி ஒத்துழைத்த ஓய்வுநிலை அதிபரும் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.ந.பரமசிவம் அவர்களுக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் திரு.குணபாலசிங்கம் அவர்களின் முன்னுதாரணமான செயலைப் பாராட்டி நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ளது.
நன்கொடையினை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “அரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையிலும் கற்பித்த கல்லூரியை மறவாது நன்கொடை வழங்கி உதவிய காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் குணபாலசிங்கம் அவர்களை கல்லூரிச் சமூகம் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றது.”