கருங்காலி, காரைநகரைச் சேந்தவரும் லண்டனை வதிவிடமாகக் கொண்டவருமான அமரர் திருமதி புவனேஸ்வரி தனபாலன் ஞாபகார்த்தமாக அன்னாரது நண்பர்களின் முழுமையான அனுசரணையில் வியாவில் ஜயனார் தேவஸ்தானம் ஊடாக, கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், அந்த மாணவர்கள் உயர் கல்வியினைத் தொடர்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கும் சென்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஓய்வுநிலை மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.ப.விக்னேஸ்வரன் அவர்களின் ஆலோசனையிலும், திட்டமிடலிலும் ஏற்பாடு செய்யப்பட்டு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமை வகித்திருந்தார்.
அண்மையில் லண்டன் நகரில் மறைந்த திருமதி புவனேஸ்வரி தனபாலனும் மற்றும் அன்னாரது குடும்பத்தினரும் சமூக, சமய உணர்வு மிக்கவர்கள் என்பதுடன் ஊர் சார்ந்த பல பொதுப் பணிகளிற்கும், கல்விப் பணிகளிற்கும் உதவி வருபவர்கள். சிறப்பாக கருங்காலி முன்பள்ளி அபிவிருத்தி, கருங்காலி முருகமூர்த்தி ஆலய திருப்பணி ஆகிவற்றில் இவர்களின் பங்களிப்பு குறிப்பிடப்படக்கூடியது என்பதுடன் வாழ்வாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் பல்கலைக்கழகக் கல்விக்கு உதவி வருபவர்கள். அந்தவகையில் அமரர் திருமதி புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் விருப்பத்தினை நிறைவுசெய்யவேண்டும் என எண்ணிய அன்னாரது நண்பர்கள் இணைந்து மாணவர் கௌரவிப்பிற்கான அனுசரணையை வழங்கியிருந்தனர். இது குறித்து நிகழ்வில் சமூகமளித்திருந்தவர்களிற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அமரர் திருமதி புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் எழுந்து நின்று மௌன வணக்கம் செலுத்தியிருந்தனர்.
இந்த நிகழ்வில் வியாவில் ஜயனார் தேவஸ்தான அறங்காவலர் ‘மகாராணி’ கா.சோமசேகரம், ஓய்வுநிலை மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ப.விக்னேஸ்வரன், கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.திவாகர் கனகரத்தினம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களைக் கௌரவித்ததுடன் அவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தனர்.
காரைநகரின் இரு பிரதான கல்லூரிகளான இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 53 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் சிலருக்கும் மாதாந்த உதவு தொகை வழங்கப்பட்டது. பல்கலைக் கழகக் கல்வியைத் தொடரும் குறிப்பிட்ட மாணவர்களுக்கான மாதாந்த உதவு தொகை தொடர்ந்து ஜயனார் தேவஸ்தானத்தால் மாதாந்தம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரு.விக்னேஸ்வரன் அவர்கள் நீண்டகாலம் ஆசிரியப் பணியில் இருந்தவர் என்ற வகையிலும் கல்வி நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தவர் என்ற வகையிலும் கற்றலின் முக்கியத்துவம், தற்போதய கல்வி முறை ஆகியன சார்ந்து மாணவர்களிற்குப் பயன்படக்கூடிய முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கி தெளிவான விளக்க உரையை வழங்கியிருந்தார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
கற்க மறுப்பவன் வாழ மறுப்பவனாகவே கருதப்படுவான். கற்றல் என்பது இடையறாது தொடர்ச்சியாக நடைபெறவேண்டியதொன்றாகும். தாயின் கருவறையில் தொடங்குகின்ற கற்றலானது கல்லறை வரைக்கும் இடையறாது தொடர்ச்சியாக நடைபெற வேண்டியதொன்றாகும். தற்போதைய கல்வி முறைமை குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறிய திரு.விக்னேஸ்வரன், கல்வி என்பது தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்வாற்கான அடிப்படையை மட்டும் கொண்டிராது வளமான வாழ்விற்கு வழிகாட்டுவதாகவும் அமைய வேண்டும். க.பொ.த.உயர்தர வகுப்பில் சித்தியடைந்ததும் பல்கலைக் கழகம், கல்வியியற்கல்லூரி ஆகியனவற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைத் தவிர்த்து ஏனைய மாணவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கான பல வாய்ப்புக்கள் இருந்தும் தமது கல்வியை கைவிட்டு விடுகின்ற துர்ப்பாக்கிய நிலை இருந்து வருவது குறித்து தமது கவலையை வெளியிட்ட இவர் மாணவர்கள் பெற்றோர்களது அக்கறையின்மையும், முறையான வழிகாட்டல்களும், சரியான தெளிவூட்டல்களும் இல்லாமையுமே உயர் கல்வியை தொடரமுடியாமைக்கான காரணங்களாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார். முற்பட்ட காலம் போலல்லாது உயர் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்கான பல வாய்ப்புக்கள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. திறந்த பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் இணைந்து பல்கலைக் கழகத்திற்கு சமமான தகமையைக் கொண்டுள்ள கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட இவர் உயர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஆங்கிலம, கணினி ஆகியவற்றிலான அறிவு இன்றியமையாததாகும். கடந்த காலப் பேறுபேறுகளை நோக்கும்போது காரைநகர் மாணவர்களது ஆங்கிலக் கல்வியின் தரம் குறைந்து வருவது அவதானிக்கப்படுகிறது. அதனை மேம்படுத்தவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். காரைநகரில் இயங்கி வருகின்ற அரச நிறுவனங்களில் பொறுப்பான பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியிடத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கிடைக்கும் வாய்ப்புக்கள் அனைத்தையும் தவறாது பயன்படுத்திக்கொண்டு உயர் கல்வியைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்து உங்கள் ஊரின் அரச நிறுவனங்களில் நீங்களும் பணியாற்றுவதன் ஊடாக தற்போதய நிலையை மாற்றியமைத்து எமது ஊரினை வளமான எதிர்காலத்தினை நோக்கி நகர்த்துவதுடன் உங்கள் வாழ்வையும், சமூகத்தையும் வளம்பெறச் செய்தவர்கள் ஆவீர்கள் என திரு விக்னேஸ்வரன் தமது நீண்ட உரையில் குறிப்பிடார்.
கருங்காலி, காரைநகரைச் சேர்ந்தவரும் கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவருமான திரு.திவாகர் கனகரத்தினம் அவர்கள் இந்நிகழ்வில் ஆற்றிய உரையின் ஊடாக, இத்தொழில்நுட்பக் கல்லூரியில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் முறை, இங்குள்ள கற்கைநெறி குறித்த விபரம், கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த பின்னர் பெற்றுக்கொள்ளக்கூடிய வேலைவாய்ப்பு விபரம் என்பன குறித்து மாணவர்களிற்கு ஆர்வத்தினை தூண்டும் வகையிலான தெளிவுபடுத்தலை ஏற்படுத்தியிருந்தார்.
வியாவில் ஐயனார் தேவஸ்தான அறங்காவலர் “மகாராணி” கா.சோமசேகரம் ஐயனார் தேவஸ்தானமானது முன்னெடுத்து வருகின்ற சமூகப் பணிகளை சிறப்பாக கல்விப் பணிகளை தமது உரையின்போது பகிர்ந்துகொண்டிருந்தார்.
நிகழ்வின் நிறைவாக காரை.இந்துவில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் அதிசிறப்புச் சித்தியைப் பெற்ற செல்வி கம்சிகா தேவராசாவும் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிசிறப்புச் சித்தியைப் பெற்ற மாணவியும் நன்றியுரை வழங்கினர்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “அமரர் திருமதி புவனேஸ்வரி தனபாலன் ஞாபகார்த்த மாணவர் கௌரவிப்பு நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது.”