திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி உரை, பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி உரை, பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை, திருவாசக ஆராய்ச்சி உரை ஆகிய அரும் பொக்கிசங்களை செந்தமிழுலகிற்குத் தந்த காரை.மண்ணின் பேரறிஞர் ‘சங்கநூற்செல்வர்’ பண்டிமணி; சு.அருளம்பலவனார் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அன்னாரின் பெயர் சூட்டப்பட்ட வீதி ஒன்று நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேரறிஞரின் வாழ்ந்து வந்த வதிவிடம் ஊடாகச் செல்லுகின்றதும் கணக்கனார் கண்டிக்கும், சம்பந்தர்கண்டிக்கும் இடைப்பட்ட வீதியே, நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டதாகும்.
பிள்ளையார் சனசமூகநிலையத் தலைவர் திரு.நா.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் வீதித் திறப்புரை நிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: சான்றோர்கள் ஊருக்கு சிறப்புச் செய்பவர்கள். அவர்களை கௌரவித்து நினைவுகூரும் வகையிலான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும். அந்த வகையில் எம்மண்ணிற்கு பெரும் கீர்த்தியை ஏற்படுத்தித் தந்த பண்டிதமணி அருளம்பலவனாரின் பெயரில் வீதி திறந்து வைக்கப்பட்டமை போற்றுதற்குரிய பணியாகும். ஆராய்ச்சி உரை எழுதுவது என்பது சாதாரண விடயமல்ல. பல நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிஞராலேயே ஆராய்ச்சி உரைகளை எழுதமுடியும். இங்கு பண்டிதமணி அவர்கள் நான்கு முக்கியமான நூல்களிற்கும் ஆராய்ச்சி உரைகளை எழுதியது மட்டுமல்லாது அவர் எழுதிய ஆராய்ச்சி உரைகள் ஈழத்து அறிஞர்களினதும் தமிழக அறிஞர்களினதம் பெரும் பாராட்டினைப் பெற்றவையாக விளங்குவனவாகும். அத்துடன் இவ் ஆராய்ச்சி நூல்கள் தமிழகத்திலும் சிறிலங்காவிலும் உள்ள பல்கலைக் கழகங்களினால் பாடநூல்களாகப் பயன்படுத்தப்பட்டு வருபவை அன்னாரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும் என பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டார்.
ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சமூகச் செயற்பாட்டாளருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்டோர் பேரறிஞரின் வதிவிடம் அமைந்துள்ள வளாகத்தினுள் மலர்கள் தூவி மதிப்பளித்திருந்தனர். யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்கள் நன்றிகூறி உரையாற்றினார். வீதியை திறந்து வைத்ததன் மூலம் பொதுமக்களின் நீண்டகால விருப்பத்தினை நிறைவேற்றி வைத்து உதவிய காரைநகர் பிரதேச சபைக்கும், வீதித் திறப்பிற்கான முன்முயற்சிகளை எடுத்து இறுதிவரை உழைத்திருந்த சமூக, சமய உணர்வாளர் திரு.செல்லையா கெங்காதரன்(கெங்கா) அவர்களிற்கும் சிறப்பு நன்றியைத் தெரிவித்திருந்தார்.
பேரறிஞருக்கு பெருமைசேர்த்த ‘சங்கநூற்செல்வர்’ என்ற பட்டம் 1961ஆம் ஆண்டு காரைநகர் இந்துக் கல்லூரியில் அன்னாரைப் பாராட்டி நடைபெற்ற பெருவிழாவின்போது வழங்கப்பட்டிருந்ததாகும். காரைநகர் இந்துக் கல்லூரியின் பிரதான ஊட்டப் பாடசாலையாக விளங்குவதும், முன்னர் இக்கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக இயங்கியதுமாகிய சுப்பிரமணிய வித்தியாசாலையில பேரறிஞர் கல்வியைப் பயின்றவர் என்பதுடன் இப்பாடசாலையில் ஏழு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டிதமணி அருளம்பலவனாரின் புதல்வனான ஓய்வுநிலை ஆசிரியர் திரு.சிவானந்தநாதன் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினராக இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருபவராகும்.
‘ ‘சங்கநூற்செல்வர்’ பண்டிதமணி சு.அருளம்பலவனார்
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. புகைப்பட உதவி: சிந்துஜா போட்டோ.
No Responses to “காரை.மண்ணிற்கு சிறப்புச் சேர்த்த பேரறிஞர் ‘சங்கநூற்செல்வர்’ பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் பெயர் சூட்டப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.”