காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான திருமதி புஸ்பராணி சந்திரராசா அவர்கள் காரைநகர் மெய்கண்டான் வித்தியாலயத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் அரச நியமனத்தினைப் பெற்றுக்கொண்டு தனது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தவர். இதற்கு முன்னதாக பல ஆண்டுகள் தொண்டர் ஆசிரியராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மெய்கண்டான் வித்தியாலயத்தில் பணியாற்றத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளின் பின்னர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று ஏழு ஆண்டுகள் பணியாற்றிய இவர் அதிபராக பதவி உயர்வினைப் பெற்றுக்கொண்டு மீண்டும் மெய்கண்டான் வித்தியாலயத்தில் 2002ஆம் ஆண்டு முதல் அதிபராக சேவையாற்றி வந்தவேளையில் கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய அதிபராக 2015ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவர் ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றி 15-08-2021இல் அகவை அறுபதை அடைந்த நிலையில் ஓய்வுபெற்றுள்ளார். மிகுந்த அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த கல்விச் சேவையினை 31 ஆண்டுகளாக வழங்கிய திருமதி புஸ்பராணி அவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைச் சமூகங்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றுக்கொண்டவர். சிறப்பாக மெய்கண்டான் வித்தியாலயத்தில் பணியாற்றிய காலத்தில்; இவரின் வழிகாட்டுதலில் இப்பிரதேச மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் இடப்பட்ட அடித்தளமானது பலரும் உயர்நிலையை அடைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரியில் திருமதி புஸ்பராணி மாணவியாக இருந்த காலத்தில் கல்வியில் மட்டுமல்லாது கல்வி சாராச் செயற்பாடுகளிலும் சிறப்பாக விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆசிரியர்களின் பாராட்டினைப் பெற்ற ஆளுமை மிக்க மாணவியாக விளங்கியவர். கல்லூரியின் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வரும் இவர் அதன் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வருபவர். இவரது சமய ஈடுபாடும் போற்றுதற்குரியதாகும்.
தனது 31 ஆண்டு கால கல்விச் சேவையின் ஊடாக காரை.இந்து அன்னையை பெருமைப் படுத்திய திருமதி புஸ்பராணி சந்திரராசா அவர்களைப் பாராட்டுவதுடன் அவரது ஓய்வு காலம் மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விளங்க வாழ்த்தி இறைவனைப் பிரார்த்திப்பதாக பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவித்துள்ளது.
No Responses to “31 ஆண்டுகளாக சிறந்த கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள காரை.இந்து அன்னையின் புதல்வி திருமதி புஸ்பராணி சந்திரராசா.”