காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 20-04-2013 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு முன்னாள் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு. நமசிவாயம் அம்பலவாணர் அவர்கள் தேவாரம் பாடி கடவுள் வணக்கம் செய்து ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. கடந்த செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த மேற்படி சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டத்தினை முன்னாள் கல்லூரியின் உப அதிபரும், சங்கத்தின் தலைவருமாகிய திரு. சி. தம்பிராசா அவர்கள் தலைமை வகித்து வழிநடாத்தியிருந்தார்.
முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட அறுபதிற்கு மேற்பட்;ட சங்கத்தின் அங்கத்தவர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். வழமைக்கு மாறாக அதிக குளிரான காலநிலை அன்றைய தினம் நிலவியிருந்தபோதும் தொலைதூர நகரங்களான மிசிசாகா, ஓக்வில், மொன்றியல் ஆகிய நகரங்களிலிருந்தும் வருகை தந்தவர்களும் சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடவுள் வணக்கம், அக வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த தாய் மலரடி பணிவோம்| என ஆரம்பிக்கின்ற கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று இந்து அன்னைக்கு வணக்கம் செலுத்தியிருந்தமை உணர்வுபூர்வமாக அமைந்து பள்ளிக்கால நினைவுகளை ஏற்படுத்தியது.
தலைவர் திரு.சி.தம்பிராசா அவர்கள் தமது தலைமை உரையில், ஒப்பற்ற சேவையாளர் முத்து சயம்பு அவர்களின் சிந்தனையில் 125 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி இன்று பெரு விருட்சமாக வியாபித்திருக்கும் இந்துக் கல்லூரி தளராது ஆற்றி வருகின்ற உன்னதமான கல்விப் பணி காரைநகரின் சமூக வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டதுடன், இக் கல்லூரியில் அர்ப்பணிப்புடனான சேவை புரிந்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து அவர்களைப் பாராட்டி நன்றி கூறினார். மிகுந்த கரிசனையோடு கல்லூரியினை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கின்ற அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களிற்கு எமது கிளை அமைப்பு தம்மாலான ஒத்துழைப்பினையும் உதவியையும் வழங்கும் எனவும் மேலும் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் அவர்கள் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் திருத்தங்களின்றி சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் வருடாந்த வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்து அவ்வறிக்கை தொடர்பான விளக்கத்தினையும் சபைக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வறிக்கையும் சபையால் ஏகமனமகதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போதய நிர்வாகத்தின் பதவிக்காலத்தினை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு பொதுச் சபையின் அங்கீகாரத்தினை கோரும் பிரேரணை நிர்வாக சபையின் சார்பில் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பான விளக்கம் சங்கத்தின் போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது. சபையின் அனைத்து உறுப்பினர்களும் இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிர்வாகத்தின் சேவை அடுத்த ஆண்டு ஏப்பிரல் வரை தொடர அங்கீகாரமளித்திருந்தனர்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (தாய் சங்கம்) முன்னாள் செயலாளரும், முன்னாள் உதை பந்தாட்ட அணியின் தலைவரும், பயிற்சியாளராகக் கடமையாற்றியிருந்தவருமாகிய திரு. அருணாசலம் செல்வரத்தினம் அவர்கள் கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான திட்டம் ஒன்றினைச் சமர்ப்பித்து இத்திட்டத்தினை கனடாக் கிளை பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் என்;ற பிரேரணையினை முன் மொழிந்திருந்தார்.இப்பிரேரணை குறித்து நிர்வாகத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த செயலாளர் திரு. கனக. சிவகுமாரன், விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விரிவானதிட்ட முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டு அதனை அமுல் செய்வதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் சில ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் தாய்ச் சங்கத்தின் போசகர் திரு. எஸ். கே. சதாசிவம் அவர்களினால் அனுப்பப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து தாய்ச் சங்கத்திலிருந்து கிடைக்கப்பெற்ற திட்டமுன்மொழிவினை இணையத்தளம் வாயிலாக அங்கத்தவர்களிற்கு தெரியப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் தாய்ச் சங்கத்துடன் கலந்து பேசி திட்டத்தின் செயலாக்கத்திற்கு உதவுவது குறித்து நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும் என்கின்ற முடிவினை சபை ஏற்றுக்கொண்டது.
சங்கத்தினால் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவினை கனடாவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டபோது கனடா-காரை கலாச்சார மன்றத்தையும் இதில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆலோசனை திரு. பிரமேந்திரதீசனால் முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கூட்டத்தில் சமூகமளித்திருந்த மன்றத்தின் செயலாளர் திருமதி. கருணாவதி சுரேந்திரகுமார் கருத்துக் கூறுகையில், தனிப்பட்ட முறையில் தான் குறிப்பிட்ட ஆலோசனையை ஆதரிப்பதாகவும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சார்பாக நிர்வாகசபை மட்டும்தான் இறுதி முடிவினை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் கல்லூரி மேம்பாட்டில் பங்கு கொள்ளவேண்டும் என்கின்ற ஆவலுடன் மொன்றியல் நகரத்திலிருந்து வருகைதந்திருந்த முன்னாள் புகையிரதப் பகுதி தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு சங்கரப்பிள்ளை ஜெகசோதி சங்கத்தின் குறுகியகால பணிகளை பாராட்டிப் பேசியிருந்தார்.
கல்லூரியில் நீண்ட காலம் சேவையாற்றிய ஆசிரியை அமரர்.நாகபூசணி தியாகராஜா அவர்களின் புதல்வி திருமதி. யசோதை சிறிதரன் அவர்கள் சங்கத்தின் பணிகளைக் கண்டு தான் மகிழ்வதாகவும், தாம் தாயகம் செல்லும்போது கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.
கல்லூரியில் சேவையாற்றிய முன்னாள் ஆசிரியர்களின் விபரங்கள், கல்லூரியில் இருந்து பல்கலைக் கழக அனுமதி பெற்ற பழைய மாணவர்களின் விபரங்கள் என்பன இணையத்தளத்தில் பிரசுரித்தல், மற்றும் தற்போது கல்லூரியில் சேவையாற்றிவரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் திட்டம்
ஆகியன உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களும், ஆலோசனைகளும் பல அங்கத்தவர்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தன. அங்கத்தவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்து கருத்துக்களும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகளும், தீர்வுகளும் மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தின் சார்பில் செயலாளரினால் பதிலளிக்கப்பட்டிருந்தது.
S.P.S என கரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட அமரர் S.P. சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் திரு. அரிகரன் அவர்கள் தந்தையார் S.P.S. ஞாபகார்த்தமாக ஐம்பதினாயிரம் ரூபாவினை வழங்கவுள்ளதாக அறிவித்தபோது சபை கரவொலி செய்து வரவேற்று நன்றியையும் தெரிவித்திருந்தது. இவர் வழங்குவதாக உறுதியளித்த ஐம்பதினாயிரம் ரூபா உள்ளிட்டு ஒன்றேகால் இலட்சம் ரூபாவரை நிதி நன்கொடையினை இன்று வழங்கி பல பழைய மாணவர்களும் கல்லூரி மீதான தமது நன்றியுணர்வினை வெளிப்படுத்தியிருந்தனர்.
பயனுள்ள பல கருத்துக்கள் பரிமாறப்பட்ட இந்தப் பொதுச் சபைக் கூட்டம் கல்லூரி வளர்ச்சியில் தொடர்ந்து உறுதியாக உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் இனிதே நிறைவு பெற்றது.
கூட்ட நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தற்போதைய நிர்வாகத்தின் சேவை மேலும் ஒரு வருடத்திற்கு தொடர பொதுச் சபை அங்கீகாரம்”