வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (சடையாளி பள்ளிக்கூடம்) நீண்டகாலம் ஆசிரியப்பணியாற்றி பின்னர் அதிபராகவும் (1988-2006) சேவை புரிந்து ஓய்வு பெற்ற திருமதி. த.நாகரத்தினம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களுக்கு காரை இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ஆசிரியமணி திருமதி. த.நாகரத்தனம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழா கடந்த சனிக்கிழமை(25-05-2013) அன்று மேற்படி பாடசாலையில் அதிபர் செல்வி. விமலாதேவி விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தார். காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, மெய்கண்டான் வித்தியாசாலை அதிபர் திருமதி.பு.சந்திரராசா, புலவர்.வே.குமாரசாமி, காரை இந்து முன்னாள் அதிபர் பண்டிதர்.சு.வேலாயுதபிள்ளை, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.அ.கமலாகரன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு.ஆ.பலராமன் மத்திய வங்கி முகாமையாளர் திரு.பா.சிவதீபன், கிராம சேவையாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
காரைநகர் மக்களால் அன்போடு ‘ராசாத்தி ரீச்சர்’; என்று அழைக்கப்படும் ஆசிரியமணி திருமதி. த.நாகரத்தனம் அவர்கள் காரை இந்துவின் பழையமாணவி என்பதுடன் தனது நீண்ட ஆசிரிய சேவையில் நல்மாணக்கர் பலரை உருவாக்கியிருந்தார். ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற பொன்மொழிகள் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவனவாகும.; ஆசிரியமணி அவர்களிடம் ஆரம்பக் கல்வி பயின்ற மாணவர்கள் தமது இடைநிலை, மேல்நிலைக் கல்வியை காரை இந்துவிலேயே தொடர்ந்தனர் என்பதுடன் இவர்களுள் பலர் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் காரை இந்து கல்வி சமூகமும் ஆசிரியமணி அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறது.
வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையின்; (சடையாளி பள்ளிக்கூடம்) தற்போதயை அதிபர் செல்வி.விமலாதேவி விசுவநாதன் அவர்கள் காரை இந்துவின் பழைய மாணவி என்பதுடன் கல்லூரி அபிவிருத்தி சபை உறுப்பினராக பணியாற்றிவருவதுடன் கல்லூரியின் அனைத்து நிகழ்வுகளிலும் அக்கறையுடன் பங்குகொண்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியமணி. திருமதி. த.நாகரத்தனம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களிற்கான சேவை நலன் பாராட்டு விழாவினை சிறப்புற ஒழுங்கமைத்த அதிபர் செல்வி.விமலாதேவி விசுவநாதன் அவர்களும் அனைவரினதும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவராக விளங்குகின்றார்.
No Responses to “நல் மாணாக்கர்களை உருவாக்கிய திருமதி. த.நாகரத்தினம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களை காரை இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது”