கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டப அறை இலக்கம் 2 இல் (25-04-2015) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம் அவர்கள் தேவாரம் பாடி கடவுள் வணக்கத்துடன் தொடங்கி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டம் முன்னாள் இலங்கை பிரதி நிலஅளவையாளர் நாயகமும் சங்கத்தின் தலைவருமாகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இருபத்தைந்து வரையான சங்கத்தின் உறுப்பினர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து எமது பாடசாலைக்கு பெரும்புகழ் சேர்த்த மூத்த பழைய மாணவர் மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் பற்றி ஒரு சில வார்த்தைகளை சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதுடன் குருக்கள் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் ஏனைய எமது பாடசாலை சமூகத்தைச் சேர்ந்து அமரத்துவம் அடைந்தோரை நினைவு கூர்ந்தும் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
அடுத்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த ‘தாய் மலரடி பணிவோம்| எனத் தொடங்கும் கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று பாடசாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.
தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது தலைமை உரையில், கடந்த ஆண்டு தாய்ச்சங்கம் அனுப்பி வைத்த கோரிக்கைகளை நிறைவு செய்வதற்காக கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அதேபோல இவ்வாண்டு நிதிசேகரிப்புத் திட்டம் பற்றி புதிய நிர்வாக சபையில் ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் திருத்தங்களின்றி சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
பொருளாளர் திரு.ந.பிரகலாதீஸ்வரன் கடந்த நிதியாண்டிற்குரிய வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்து அவ்வறிக்கை தொடர்பான விளக்கத்தினையும் சபைக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வறிக்கையும் சபையால் ஏகமனமகதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டடிருந்த சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் நடத்தி வைத்தார். நிர்வாக சபையில் உள்ள பதினொரு வெற்றிடங்களுக்கும் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மூன்று வாரங்களிற்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது தலைவர், உப-தலைவர் ஆகிய இரு பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு உறுப்பினர் வீதம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்ததுடன் அவற்றின் விபரங்களையும் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இவ்விண்ணப்பங்கள் தொடர்பில் சபையிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காதமையினால் குறிப்பிட்ட பதவிகளிற்கு விண்ணப்பித்த அனைவரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவர், உப-தலைவர் ஆகிய இருபதவிகளிற்குமான தெரிவும் பொதுச் சபையில் சமூகமளித்திருந்தவர்களின் சம்மதத்துடன் ஏகமனதாக இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து கணக்காய்வாளர் ஒருவரையும் மொன்றியல் ஒட்டாவா ஜக்கிய அமெரிக்கா ஆகிய பிரதேசங்களிற்கான இணைப்பாளர்களையும் போசகர் ஒருவரையும் பொதுச் சபை நியமனம் செய்திருந்தது.
நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
தலைவர்: திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
உப-தலைவர்: திருமதி.அனுசூயா ஞானகாந்தன்
செயலாளர்: திரு.கனகசுந்தரம் சிவகுமாரன்
உப-செயலாளர்: திருமதி. செல்வா இந்திராணி சித்திரவடிவேல்
பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி
உப-பொருளாளர்: திரு. திரு. நடராசா பிரகலாதீஸ்வரன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திரு. நாகலிங்கம் குஞ்சிதபாதம்
திரு. திருவேங்கடம் சந்திரசோதி
திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்
திருமதி பிரபா ரவிச்சந்திரன்
திரு. மகானந்தன் சிவானந்தன்
போசகர்: சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம்
ஒட்டாவா பிரதிநிதி: திருமதி.சந்திராதேவி முத்துராசா
மொன்றியல் பிரதிநிதி: திருமதி.செல்வதி சிறிகணேசர்
ஜக்கிய அமெரிக்க இராச்சியம்: திருமதி இந்திராதேவி பரஞ்சோதி
கணக்காய்வாளர்: திரு.கந்தப்பு அம்பலவாணர்
தெரிவுகள் பூர்த்திசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைவராக தெரிவான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களை உறுப்பினர்கள் கரவொலி செய்து தமது மகிழ்ச்சியினை தெரிவிக்க பதவியை எற்றுக்கொண்டு உரையாற்றினார்.
சங்கத்தின் யாப்பிற்கு அலுவலக முகவரி, சங்கத்திற்கான இணை உறுப்பினர்கள் (Associate Members) ஆகியன தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருத்தங்கள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
திரு.தம்பிஐயா பரமானந்தராஜா, திரு.தீசன் திரவியநாதன் ஆகியோர் உட்பட சபையோரினால் கருத்துகள் பரிமாறப்பட்ட இந்தப் பொதுச் சபைக் கூட்டம் இறைவணக்கத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
கூட்ட நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்”