பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற கர்நாடக இசை நிகழ்வு சார்ந்து எமது சங்கத்துடன் தொடர்பினைப் பேணி வந்தவரான ஈழமாதா பெற்றெடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞன் வர்ண ராமேஸ்வரன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது.
2015ஆம் ஆண்டு தற்போதைய யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் தலைவரான செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களை இசைக் கச்சேரி நிகழ்த்தும்பொருட்டு எமது சங்கம் அழைத்திருந்தமையை பத்திரிகை வாயிலாக அறிந்தவுடன் எம்மோடு தொடர்புகொண்ட வர்ண ராமேஸ்வரன் அவர்கள் எம்மை பாராட்டியிருந்தமையை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். அவரது இச்செய்கை ஊடாகவும், எம்மோடு பகிர்ந்து கொண்டிருந்த கருத்துக்கள் ஊடாகவும் ஈழத்துக் கலைஞர்களிற்கும் வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவித்து வளர்த்து விடவேண்டும் என்கின்ற உயரிய உணர்வு அவரிடத்தில் மேலோங்கி இருந்ததை உணர்ந்து கொண்டோம். செல்வி பரமேஸ்வரி அவர்களின் இசைக் கச்சேரி சிறப்பாக அமைய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ராமேஸ்வரன் அவர்கள் எமக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்பும், ஊக்குவிப்புமே நிகழ்ச்சியை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக மாற்றியமைக்க பேருதவி புரிந்தன என்பதை இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு குறிப்பிட விரும்புகின்றோம். ஆழமான கலை உணர்வு மிக்க இவரிடத்தில் காணப்பட்ட இன உணர்வு வியக்கத்தக்கதாகும். வாய்ப்பாட்டில் மட்டுமல்லாது பல்வேறு இசைக் கருவிகளை இசைப்பதிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கி “பல்கலை வித்தகர்” என்கின்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர். காந்தம் போன்று கவர்ந்திழுக்கும் இனிமையான குரலினாலும், இசை ஆற்றலினாலும் இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டு வந்த தனித்துவம் மிக்க அற்புதமான கலைஞனின் மறைவானது தமிழ் இசை உலகில் பெரும் அதிர்ச்சியையும் மிகப்பெரிய சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளமையைப் பார்க்கும்போது இக்கலைஞன் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை உணர்த்துகிறது. சிறு விளானைச் சேர்ந்த இசைப்பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த இக்கலைஞன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். கனடாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இவர் அரங்க நிகழ்வுகள் நடாத்தியும்,; அரங்கேற்ற நிகழ்வுகளிற்கு பின்னணி இசை வழங்கியும் பெரும் புகழ்பெற்று விளங்குபவர். வர்ணம் இசைக் கல்லூரியை நிறுவி பல இளம் கலைஞர்களை உருவாக்கிய பெருமையைக் கொண்டவர்.
மக்கள் கலைஞர் என்கின்ற தகுதியைப் பெற்று விளங்கும் ராமேஸ்வரன் அவர்கள் மறைந்தாலும் இவரால் பாடப்பெற்ற தமிழ்இன எழுச்சிப் பாடல்களும், தாய்மண் வாசைனை கமழும் பாடல்களும் தமிழிற்காகவும், தமிழ்க் கலைக்காகவும் வாழ்ந்து மறைந்த இக்கலைஞனை என்றென்றும் நினைவுகூர வைக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்னாரின் இழப்பினால் ஆற்றொணாத் துயரில் மூழ்கித் தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
“இசைக்கலைமாமணி” “சங்கீத வித்துவசிரோண்மணி” “இசைக்கலா வித்தகர்” வர்ண ராமேஸ்வரனால் பாடப்பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்களுள் ஒன்றான ‘மறந்துபோகுமோ மண்ணின் வாசைன’ என்ற பாடலின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “ஒப்பற்ற இசைக் கலைஞன் ‘இசைக்கலைமாமணி’ வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.”