சைவத்தமிழ் வளர்ச்சிக்கு ஏழு தசாப்;தங்களிற்கு மேலாக அயராது அருந்தொண்டாற்றியவரும் காரை மண்ணின் பெருமைகளை வெளிக்கொணர உழைத்தவரும் காரை மண்ணிற்கு பெரும் புகழ் சேர்த்தவருமாகிய அமரர் சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி தத்துவக்கலாநிதி சிவத்திரு. க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.05.2015) அன்று கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் மண்டபத்தில் பிற்பகல் 3:30 இற்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கனடா வாழ் காரைநகர் மக்களும் சைவத்தமிழ் அன்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி ஆத்ம சாந்தி வழிபாடு மற்றும் நினைவு வணக்கக் கூட்டத்திற்கு கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமை வகித்து வழிநடத்தினார்.
கனடா வரசித்தி விநாயகர் பிரதம குரு சிவஸ்ரீ. விஜயகுமாரக் குருக்கள், சைவ சமய சேவையாளர் சிவஸ்ரீ.திருஞானசம்பந்தக் குருக்கள், குருக்கள் ஐயாவின் பெறாமகள் திருமதி.கௌரியம்பாள் தாமோதரஐயர் குடும்பத்தினர், கனடா இந்து சமயப்பேரவைத் தலைவர் கவிஞர் வி.கந்தவனம், செயலாளர் திரு.சிவ முத்துலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வே.இராசேந்திரம், கனடா-காரை கலாச்சார மன்ற முன்னைநாள் நிர்வாகத்தினர், கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நிர்வாகத்தினர் மற்றும் சைவத்தமிழ் அன்பர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மூதறிஞர் பண்டிதமணி க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் பெறாமகள் திருமதி.கௌரியம்பாள் தாமோதர ஐயர் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றியமையைத் தொடர்ந்து தத்துவக் கலாநிதி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட ‘ வைத்தீசுரவம் ‘ என்ற வழிபாட்டு மலரில் உள்ள பஞ்சபுராணம், சிவபுராணம், திருவாசகம் ஆகிய திருமுறைகளை சமூகமளித்திருந்த அனைவரும் இணைந்து பாடி வழிபாடு செய்தனர்.
இரண்டு மணித்துளி அகவணக்கத்தைத் தொடர்ந்து சபையோர் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் தனது தலைமையுரையில் குருக்கள் ஐயாவின் சைவத்தமிழ் பணிகளைக் குறிப்பிட்டதுடன் அவர் பதிப்பித்த அரும் பெரும் நூல்களான ‘ஈழத்துச் சிதம்பர புராணம்’ , ‘மணிவாசகர் சபை பொன் விழா மலர்;’ கார்த்;திகேயப் புலவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி, ஆண்டிகேணி ஐயனார் புராணம், ‘திக்கைத் திரிபந்தாதி’ என்பனவும், ‘சைவக் களஞ்சியம்’ போன்ற நூல்களையும்;, திரு. திருமதி தம்பிராசா அவர்கள் ஐயாவின் உதவியோடு பதிப்பித்த கார்திகேயப் புலவரின் ‘தன்னை யமக அந்தாதி;’ நூலையும், திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்கள் குருக்கள் ஐயாவிடம் பெற்று வந்த ‘திக்கைத் திரிபந்தாதி’ இன் ஏட்டுப் பிரதியையும் சபையோருக்குக் காண்பித்து உரையாற்றினார்.
அத்துடன் குருக்கள் ஐயா தமக்குப் பணித்த சில பணிகளில் இன்னமும் நிறைவேறாத ஒரு பணியாக ‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ச.அருணாசலம்’ என்ற நூலை மீள்பதிப்புச் செய்யும் பணி இருப்பதாகவும் அதனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.
சைவத்திற்கும் தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய வாழ்நாள் சாதனையாளரைப் போற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வரசித்தி விநாயகர் பிரதம குரு சிவஸ்ரீ விஜயகுமாரக் குருக்கள் அன்னாரின் ஆசியைத் தாம் பெற்றதாகவும் இந்த நிகழ்வில் தாம் கலந்து கொண்டமை தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் தெரிவித்தார்.
கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் உரையாற்றும்போது ‘வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் கற்றவர், கற்றபடி வாழ்வில் ஒழுகியவர், ஞானச் செருக்கு அற்றவர்’ என்றும் கூறினார்.
கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் தனது உரையில் சைவ சமய நாயன்மார்கள் அந்தக் காலத்தில் செய்த பணியைத் தற்காலத்தில் எங்களுடைய மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர் க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் செய்திருப்பதாகவும், எனவே நாயன்மாருக்கு அளிக்கும் மதிப்பை நாம் அவருக்கும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா அவர்கள் உரையாற்றும் போது வைத்தீசுவரக்குருக்கள் ஐயாவின் பணியை நாம் தொடர வேண்டுமாயின் எமது பிள்ளைகளுக்கு சைவ சமயக் கல்வியை போதிக்கும் சமய வகுப்புகளை நடத்த வேண்டும் இதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கனடா இந்து சமயப்பேரவைத் தலைவர் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் உரையாற்றும்போது 1973 ஆம் ஆண்டு மணிவாசகர் விழாவில் உரையாற்றுவதற்காக தம்மை குருக்கள் அழைத்திருந்ததாகவும் அப்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் ‘வைத்தீசுவரக் குருக்கள் காரைநகர் மண்ணில் பிறந்தமை காரைநகர் மண் செய்த தவம்’ என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் தனது உரையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சைவத்தைப் பாதுகாத்த தனிமனித பேரியக்கமான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் பணிகளையும் அண்மைக்கால அரசியல் சூழலில் சைவத்தமிழ்ப்பணி செய்த மாமனிதர் மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் பணிகளையும் ஒர் ஒப்பீடு செய்து உரையாற்றினார்.
கனடா இந்துசமயப் பேரவையின் செயலாளர் திரு.சிவ முத்துலிங்கம் அவர்கள் தமது உரையில் காரைநகர் மக்களின் சைவத்தமிழ்பற்று பற்றியும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றியும் காரைநகர் மணிவாசகர் சபையும் அதனைத் தோற்றுவித்த சிவத்தமிழ் வித்தகர் க.வைத்தீசுவரக்குருக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் செயலாளர் திரு.தீசன் திரவியநாதன் அவர்கள் உரையாற்றும்போது குருக்கள் ஐயா அவர்கள் தனது வரவை எதிர்பார்த்திருந்ததாகவும், அவரை தாம் சந்தித்தபோது யோகர் சுவாமிகளின் ‘எப்பவோ முடிந்த காரியம்’ என்ற கூற்றிற்கமைய தமது ஊர்ப்பணியும் ஊடகப்பணியும் தமது பேரனார் செய்த பணியே என்று தாம் அறிந்திராத செய்தியைத் தமக்குக் கூறி வாழ்த்தியதாகவும் கூறினார்.
சைவசமய சேவையாளர் சிவஸ்ரீ திருஞானசம்பந்தக்குருக்கள் அவர்கள் உரையாற்றும்போது வைத்தீசுவரக் குருக்களுடன் பழகும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கவில்லை என்றும் இருந்தபோதும் குருக்கள் ஐயாவைப்பற்றி அறிவதற்காகவே தாம் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்ததாகவும் மேலும் மனித வாழ்க்கையின் தத்துவங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
சைவத்தமிழ் ஆர்வலரான கலாநிதி.தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் தனது உரையில் ஈழத்தில் சைவ சமய வராலற்றினை கி.பி 1500 ஆம் ஆண்டளவிலான வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டு குருக்களின் நான்கு தலைமுறையினர் வரையிலான பரம்பரையையும் அவர்கள் செய்த பணியையும் குறிப்பிட்டுப் பேசியதுடன் தமது பரம்பரைக் கோவிலான ‘ களபூமி, தன்னைப் பிள்iளார்’ கோயிலுக்கான ‘தன்னை அந்தாதி’ நூலினைப் பதிப்பிக்க குருக்கள் ஐயா உதவியமையையும் நன்றியுடன் குறிப்பிட்டுப் பேசினார்.
காரைநகர் மணிவாசகர் சபை முன்னாள் செயலாளரும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் செயலாளருமாகிய திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நீண்ட காலம் குருக்கள் ஐயாவுடன் நெருக்கமாகப் பழகிப் பணி செய்தவர் என்ற வகையில் காரைநகர் மணிவாசகர் சபையின் தோற்றத்தையும் அதன் பணிகளையும் தனது இனிமையான நினைவுகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட ‘குருக்கள் ஐயாவின் திருத்தொண்டு பரவும் மலர்’ மற்றும் செய்தி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றையும் காட்டிப் பேசினார்
நினைவுரை நிகழ்த்திய அனைவரினதும் உரையில் மனிதருள் மாணிக்கமாக ஒரு நூற்றாண்டு வாழ்ந்து சைவத்திற்கும் தமிழிழுக்கும் அரும் பெரும் தொண்டாற்றிய வாழ்நாள் சாதனையாளரான சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் தத்துவக்கலாநிதி. பண்டிதமணி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் விட்ட பணிகளைத் தொடர்வதுடன் என்றும் அவரை நினைவு கூர்ந்து போற்றித் துதிக்கும் வழிவகைகளைச் செய்யும் கடப்பாடு எமக்கு இருக்கின்றது என்ற கருத்து தொனிக்கத் தவறவில்லை.
திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இராப்போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்.
No Responses to “கனடாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி தத்துவக்கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்தி வழிபாடும் நினைவு வணக்கக் கூட்டமும்”