கருங்காலி, காரைநகரைச் சேர்ந்தவரும், லண்டனை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமாகிய சமய, சமூக உணர்வாளர் அமரர் புவனேஸ்வரி தனபாலன் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது துணைவரான திரு.தியாகராசா தனபாலன் அவர்களது அனுசரணையில் கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து தோற்றி சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இவர்கள் மேற்கொண்டு கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கும் சென்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ற்றரன் கல்லூரியின் அதிபர் திரு.மதிவதனன் அவர்களின் தலைமையில் இந்துக் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் சைவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்களை உள்ளடக்கிய குழுவின் திட்டமிடலிலும், மாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலை உதவிச் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் ஆலோசனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திரு.மதிவதனன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். இந்நிகழ்வின் இணைப்பாளராக யாழ்ற்ரன் கல்லூரியின் ஆசிரியர் திரு.சி.பிரபாகரன் சிறப்பாகப் பணியாற்றியிருந்தார்.
காரை.மண்ணைச் சேர்ந்தவரும், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.கனகசபை சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இந்துவின் அதிபர் அ.ஜெகதீஸ்வரன், உப அதிபர் திருமதி அரூபா ரமேஷ், வியாவில் சைவ வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. கௌ.அருள்மொழி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம், ஓய்வுநிலை அதிபர்களான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, திரு.வே.முருகமூர்த்தி மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான திரு.க.நாகராசா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்விற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர்.
அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் வரவேற்புரையினையும் அறிமுகவுரையினையும் நிகழ்த்தியிருந்தார். கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்கள் ஆங்கிலம் கற்றலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமான உரையை வழங்கியிருந்தார்.
திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: உயர்தரம் கற்கத் தகமையைப் பெற்ற மாணவர்கள் கல்வியை தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் கற்றல் தொடர்பில் ஏதாவது கஸ்டங்கள் இருப்பின் அதிபர்களை அணுகி அவற்றினை நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கும் மற்றும் பல உயர்கல்விக் கற்கை நெறிகளிற்கும் வேலைவாய்ப்புக்களுக்கும் ஆங்கிலக் கல்வியில் சித்தி அல்லது திறமைச் சித்தி பெற்றிருத்தல் அவசியமானதாகும். எனவே ஆங்கில பாடத்தில் சித்தியடையத் தவறிய மாணவர்கள் அக்கறையெடுத்து அதனைக் கற்று சித்தி பெற முயற்சிக்கவேண்டும். உயர் கல்வியை மேற்கொள்கையில் முதல் தெரிவாக உயிரியல் விஞ்ஞானத்தை தெரிவு செய்வதன் மூலம் பல அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். பல்கலைக்கழகங்களில் உயிரியல் விஞ்ஞானம் சார்ந்து பல கற்கை நெறிகள் உள்ளன என்ற வகையில் பல்கலைக்கழக அனுமதியையும் வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. இரண்டாவது தெரிவாக பொறியியல் துறையினையும், மூன்றாவது தெரிவாக தொழில்சார் கற்கை நெறிகளையும் தெரிவு செய்வது சிறப்பானது என்பதுடன் மேற்குறித்த துறைகளைத் தெரிவு செய்வதற்கு சாத்தியப்படாதவிடத்து மாத்திரம் இறுதித் தெரிவாக கலைத் துறையை தெரிவு செய்யலாம் என திரு.விக்கினேஸ்வரன் தனது உரையில் குறிப்பட்டார்.
அமரர் புவனேஸ்வரி தனபாலன் அவர்கள் சமூகம், சமயம் சார்ந்து ஆற்றியிருந்த பணிகளை திரு.விக்கினேஸ்வரன் நினைவுகூர்ந்ததைத் தொடர்ந்து அன்னாரது ஆத்ம சாந்திக்காக சபையினர் எழுந்துநின்று மௌனப் பிரார்த்தனை செய்திருந்தனர்.
சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து ஊக்குவிப்புப் பரிசில்கள் ரொக்கமாக விருந்தினர்களினால் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட நான்கு பாடசாலைகளிலிருந்தும், சென்ற ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்த நிகழ்வும், வழிகாட்டல் கருத்தரங்கும் அமரர் புவனேஸ்வரி தனபாலன் அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது நண்பர்களின் அனுசரணையில் சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “காரை.இந்துவில் சிறப்பாக நடைபெற்ற அமரர் புவனேஸ்வரி தனபாலன் ஞாபகார்த்த மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் வழிகாட்டல் கருத்தரங்கும்.”