காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரும், ஓய்வுநிலை தபாலதிபரும், காரை.இந்துவின் மகிமை பொருந்திய பழைய மாணவனுமாகிய திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது.
சமூக அக்கறையும், சிறந்த கல்விப் பின்புலமும் மிக்க புகழ்பெற்ற குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்த வி.கேதீஸ்வரதாசன் அவர்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரி ஊட்டி வளர்த்த, ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகள் இவர் பொது வாழ்வில் ஈடுபட்டு மக்களிற்கான மகத்தான பணிகளை முன்னெடுக்க ஆதார தளமாக இருந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம்.
திரு.வி கேதீஸ்வரதாசன் அவர்கள் இளமைப் பராயத்திலிருந்தே ஊரின் பல்வேறு அமைப்புக்களிலும் அங்கம் வகித்து மக்களின் நலன்பேண அயராது உழைத்தவர். சிறப்பாக இவர் பிறந்த குறிச்சியான நீலிப்பந்தனையையும் அதனைச் சூழவுளள்ள குறிச்சிகளையும் சேர்ந்த மக்களது சமூகம், சமயம், ஆன்மீகம், விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளிலும் மேம்பட்டு விளங்க பணியாற்றிய பெருந்தகை. காரைநகரில் மக்களிற்கான சேவை சார்ந்து சிறந்த அமைப்புக்களாகக் கருதப்பட்ட நீலிப்பந்தனை சனசமூக நிலையத்தின் தலைவராகவும், நீலிப்பந்தனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து ஆற்றிய மக்கள் பணிகள் பலவாகும். காரைநகரில் கிராம சபை என்ற நிர்வாக முறைமை இருந்த காலத்தில், காரைநகர் கிராம சபைக்கு தற்போது உறுப்பினராகத் தெரிவான இதே வட்டாரத்தின் (அப்போது 9ஆம் வட்டாரம்) உறுப்பினராக 1967ஆம் ஆண்டு திரு.வி கேதீஸ்வரதாசன் அவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு சேவையாற்றியிருந்தவர் என்பது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும். காரைநகர் மணிவாசகர் சபையில் உப தலைவராகப் பணியாற்றி 1979ஆம் ஆண்டு சபையின் வெள்ளி விழாவை சிறப்பாக அமைப்பதற்கு பெரும் பங்காற்றியவர்.
நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் ஊர் மக்களிற்கான தனது சேவையை தொடரவேண்டும் என்ற ஆவலும், அக்கறையும் கொண்டவராக தவிசாளர் பதவி ஊடாக இறுதிமூச்சு வரை உழைத்து காரைநகர் மக்களது மனங்களில் நிலைபெற்றுள்ளார்.
எமது சங்க நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் அன்னாரது புதல்வியான திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்கள் சங்கத்தின் அனைத்துப் பணிகளிலும் தீவிர ஈடுபாடுகொண்டு மிகுந்த அக்கறையுடன் தந்தையின் வழியில் செயலாற்றி வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் இழப்பினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “காரை.இந்துவின் மகிமை மிக்க புதல்வனான பிரதேச சபைத் தவிசாளர் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.”