கலைஞர்கள் தோன்றுகிறார்கள். மறைகிறார்கள். சிலர் பிறவிக் கலைஞர்களாகவே தோன்றுகிறார்கள். சிலர் தமது முயற்சியால் ஆற்றலால் ஆளுமையால் பார் போற்றும் கலைஞர்களாகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரே உச்ச நிலையை அடைகிறார்கள். மக்களின் மனதில் இடம் பிடித்துக்கொள்கின்றார்கள்.
இது அவர்களது கலைகளில் கண்ட தனித்துவம் திறமை ரசிகர்களை சுண்டியிழுக்கும் பாங்கு; மற்றது இங்கிதம் என்று கூறுவார்களே. கலைஞர்களிற்கு இது மிக அவசியமாகிறது. எத்துணை திறமையிருந்தும் அவரிடம் இங்கிதம் – மனிதனுடன் பண்பாக அன்பாக பழகும் பாங்கு இல்லாதவிடத்து அவர் ஒரு புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவார்.
இந்நிலையில் நாம் இங்கு நினைவுகூர வந்திருக்கும் நீத்தார் பெருமை கூறவந்திருக்கும் இசை அறிஞர் பூரண தகமைகளை கொண்டிருந்த இசை அறிஞர் என்றே கூறவேண்டும். இசைநாத மணி, இசைச்சக்கரவர்த்தி மறைந்த நாதஸ்வர வித்துவான் காரையம்பதி என்.கே.கணேசன் இசை உலகிற்கு அரும்பணியாற்றியவர். வாழும்பொழுதே கௌரவிக்கப்பட்டார். பல இளம் கலைஞர்களிற்கு உதாரணமாக இருந்தவர். இவர் பெருமை கூறி அஞ்சலி செலுத்துவது நமது கடமைப்பாடுகளில் ஒன்றாகும்.
இதனைத் தவறாது இவ்விசை வேள்வியில் சேர்த்துக்கொண்ட கம்பன் கழகத்தினை முதற்கண் பாராட்ட வேண்டும். நாதஸ்வர வித்துவான் என்.கே.கணேசன் அவர்களது இழப்பு இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இவ்வருடம்(2001ஆம் ஆண்டு) யூலை மாதம் 28ஆம் திகதி மரணமெய்தினார்.
காரைநகரையே பிறப்பிடமாகக் கொண்டவர் இவர். முதலில் தந்தையார் நல்லகண்ணு கம்பரிடமும் பின்னர் மூளாயைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் அமரர் ஆறுமுகம் அவர்களிடமும் பின்னர் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் அமரர் ரசா அவர்களிடமும் நாதஸ்வர இசையை முற்றாகவும் முறையாகவும் கற்றார்.
அளவையூர் நாதஸ்வர சக்கரவர்த்தி கலாசூரி என்.கே.பத்மநாதனை சம்பந்தியாக கொண்டார். இந்திய நாதஸ்வர தவில் வித்துவான்களோடு ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவ காலத்தில் இணைந்து வாசித்து பாராட்டைப்பெற்றவர். இவரது வாசிப்பு தனித்துவமானது. கேட்போர் மனதை கவரும் தன்மையது என்று கேள்விப்பட்டுள்ளேன். தமிழகத்தின் பிரபல தவில் மேதைகளான அரித்துவாரம் மங்களம் A.K.பழனிவேல் திருவானப்புத்தூர் T.A.கலியமூர்த்தி திருச்சேரை முத்துக்குமாரசாமி போன்றோரால் ஈழத்துச் சிதம்பரத்தில் பாராட்டப்பெற்றவர்.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் கூத்தபிரான் வீதியுலா வருங்காலத்தில் நாதஸ்வரம் வாசிப்பதை தமது முக்கிய கடமையாகக் கொண்டவர். அமரர் கணேசன் அவர்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் ஆஸ்தான வித்துவானாக நாதஸ்வர மாமேதையாக 40 ஆண்டு காலமாக இருந்தவர். நாடு போற்றும் நன் மக்களையும் பெற்று இன்று நாதஸ்வர மேதையாக பல பட்டங்களையும்பெற்று காரை மாதாவிற்கு புகழ் சேர்த்த என்.கே.கணேசன் அகவை 53 வரை வாழ்ந்தவர்.
நாதஸ்வர கலாநிதி நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனும் பல பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார். காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பிகையின் ஆஸ்தான வித்துவானுமாவார். இலங்கை வானொலிக் கலைஞராக பங்குபற்றியவர். இவரது பிள்ளைகளும் நாதஸ்வரம் தவில் வாய்ப்பாட்டில் புகழ்பூத்து நிற்கிறார்கள். சென்ற ஆண்டுகூட(2000ஆம் ஆண்டு) கம்பன் விழாவிற்கு வருகை தந்த மாம்பழம் சிவா குழுவினரை ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவத்திற்கு வாசிக்க வைத்த பெருமை அமரர் கணேசனையே சாரும்.
1975ல் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் வாசித்த பாராட்டைப் பெற்றவர். இந்தவகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வம்சத்து வழித்தோன்றலான திரு.நல்லக்கண்டு செல்லையா சம்பத்துவின் தம்பி நல்லக்கண்டு கயிலாயக்கம்பரின் மகனாகப் பிறந்து ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர் வரிசையில் இடம்பெற்று தனது தெய்வீக இசைமூலம் இசைப் பணியாற்றி ஈழத்துச் சிதம்பர ஆஸ்தான வித்துவானாகவிருந்த நாதஸ்வரமேதை அமரர் என்.கே.கணேசன் அவர்களது மறைவு தமிழ் மக்களிற்கும் கலைத்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
கொழும்பு கம்பன் கழகம (2-12-2001) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய இசை வேள்வியின்போது கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை.
நன்றி: மூதறிஞர் பண்டிதர் தத்துவகலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்
பதிப்பாசிரியர்: அருள்நெறித்தொண்டர் அமரர் கே.கே.சுப்பிரமணியம்
அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி(பரமா) கணேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்ளும்பொருட்டு கனடாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்புபட்ட தகவல்கள் கட்டுரைகள் இவ்விணையம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் மேற்குறித்த கட்டுரை முதலாவதாக எடுத்து வரப்படுகின்றது.
No Responses to “காரை மாதாவிற்கு பெரும் புகழ் சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் என்.கே.கணேசன்”