நடுத்தெரு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் நீலிப்பந்தனையை வதிவிடமாகவும் கொண்டிருந்து வவுனியாவில் வசித்து வந்தவரான அமரர் கனகாம்பிகை பேரம்பலம் அவர்கள் அமரத்துவமடைந்த 31வது நினைவு நாள் இன்றைய தினம் அன்னாரது குடும்பத்தினரால் நினைவுகூரப்படுவதுடன் அன்னாரது ஆத்ம சாந்திக்காக அன்னாரது குடும்பத்தினர் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இத்தருணத்தில் கனகாம்பிகை பேரம்பலம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது அன்புப் பேத்தியும் எமது சங்கத்தின் உறுப்பினருமாகிய திருமதி சத்தியராணி மகேஸ்வரன் அவர்களின் உதவியுடன் காரை.இந்துவைச் சேர்ந்த இரு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான திட்டம் ஒன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. உதவியைப் பெறுவதற்கு அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட செல்வன் பரந்தாமன் சாரங்கன், செல்வன் சசிகரன் தனுஜன் ஆகிய இரு மாணவர்களும் வாழ்வாதார வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் கற்றலில் மிகுந்த ஆர்வமும், திறமையும் மிக்கவர்கள். செல்வன் சாரங்கன் நடக்கவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதுடன் செல்வன் தனுஜன் சென்ற ஆண்டு தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர். இவர்கள் இருவரும் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் வரைக்கும் அமரர் கனகாம்பிகை பேரம்பலம் ஞாபகார்த்த உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள். இவர்கள் இருவருக்குமான முதலாவது உதவு தொகை அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களுடைய ஏற்பாட்டில் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டது. ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கல்லூரியின் விளையாட்டுத்துறை சாதனையாளரும், புகழ்பெற்ற கணிதபாட ஆசிரியருமாகிய ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.செல்வரத்தினம் அவர்களும் மாணவர்களிற்கான உதவியை வழங்கி வைத்திருந்தனர். இதன்போது பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.க.நிமலதாசன் அவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர்.
இவ்வுதவியை வழங்க முன்வந்த அமரர் கனகாம்பிகை அவர்களது பேத்தியாரான திருமதி சத்தியராணி மகேஸ்வரன் அவர்களிற்கும் உதவியைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்கு சகலவகையிலும் ஒத்துழைத்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
காரை.இந்துவின் பழைய மாணவியாகிய அமரர் கனகாம்பிகை பேரம்பலம் அவர்கள் காரைநகரின் சிறந்த கல்விப் பின்புலமும், சமூக அக்கறையும் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். அனைவரிடமும் அன்பாகப் பழகும் இவர் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். இவரது தந்தையாரான அமரர் ஆறுமுகநாதன் அவர்கள் காரைநகர் மக்களால் நன்கறியப்பட்ட சமூகச் செயற்பாட்டாளரும், புகழ் மிக்க ஆங்கில ஆசிரியருமாவார். அன்னாரது ஒரு சகோதரனாகிய அமரர் ஏ. நடராசா அவர்கள் எமது கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பதவி வகித்து சிறந்த பணியாற்றியவர். கனகாம்பிகை அவர்களது துணைவரான கல்லூரியின் பழைய மாணவனும், முன்னாள் புகையிரத நிலைய அதிபருமாகிய அமரர் வே.பேரம்பலம் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் பங்குகொண்டு உழைத்திருந்தவர் என்பதுடன கல்லூரியின் வெள்ளி விழா அமைப்புக் குழுவில் (கொழும்பு) இடம்பெற்று பணியாற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தாய் மாமனாராகிய முன்னாள் கணக்காளர் அமரர் மு.ஆறுமுகம் அவர்களும் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு பலவிதமான உதவிகளை வழங்கி வந்தவர் என்பதுடன் வெள்ளிவிழாவை சிறப்பாக அமைத்த குழுவின் செயலாளராகப் பணியாற்றியிருந்தவர்.
அமரர் கனகாம்பிகை அவர்களின் 31வது நினைவு நாளாகிய இன்று அன்னாரது குடும்பத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் அன்னரை நினைவுகூருவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
உதவிகள் வழங்கி வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்டிருந்த புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “அமரர் கனகாம்பிகை பேரம்பலம் ஞாபகார்த்தமாக மாணவர்கள் இருவரது கற்றல் செயற்பாட்டிற்கான உதவித் திட்டம் அன்னாரது 31வது நினைவு தினத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.”