அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி கணேசக்கம்பர் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இன்னிசைக் கச்சேரி வழங்குவதற்காக கனடாவிற்கு கலைப்பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்பான கட்டுரைகள் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் எமது நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவத ஆண்டு நிறைவினையொட்டி வெளியிடப்பட்ட ‘காரை நிலா’ சிறப்பு மலரில் இடம்பெற்ற கீழ் வரும் கட்டுரை இரண்டாவாதாக எடுத்து வரப்படுகின்றது.
தமிழிசை மூவர் இசைப்பணி – ஓர் ஒப்புநோக்கு
இந்திய சங்கீதத்தில் நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புடன்கூடிய இசைவடிவங்களுள் மிகப் பழமையான இசைவடிவங்கள் தேவார பதிகங்களாகும். தேவார முதலிகள் காலத்தின் பின் 16, 17, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழிசை மூவர் என அழைக்கப்படும் சீர்காழிமூவர் முத்துத்தாண்டவர் மாரிமுத்துப்பிள்ளை – அருணாசலக கவிராயர் ஆகியோராவர். இவர்கள் மூவரும் தமிழிசைக்கு வித்திட்டவர்கள். இவர்களின் கீர்த்தனைகளே பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றி தமிழிசையை வளர்ப்பதற்கு முன்னோடியாக அமைந்தன என்று கூறினால் மிகையாகாது.
கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் எனப்போற்றப்படும் தியாகராஜசுவாமிகள் சியாமாசாஸ்திரிகள் – முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் தமிழிசை மூவர் காலத்தால் பெரிதும் பிற்பட்டவர்களாவர். தமிழிசை மூவரின் செல்வாக்கு பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றக் காரணமாய் அமைந்தது.
முத்துத்தாண்டவர் (1560 – 1640)
17 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் சிறந்து விளங்கிய வாக்கேயகாரர் முற்காலத்தில் கீர்த்தனைகளில் பல்லவியும் சரணங்களுமே இடம்பெற்றிருந்தன. பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அமைப்பு முறையில் முதன் முதலில் கீர்த்தனைகளை இயற்றியவர் முத்துத்தாண்டவராவார். எனவே தான் கீர்த்தனை மரபின் தந்தை எனப்போற்றப்படுகின்றார். இவர் பாடிய கீர்த்தனைகள் அனைத்தும் சிதம்பர நடேசர் மீது பாடப்பட்டவையாகும். தாண்டவர் கீர்த்தனைகளில் நடனத்திற்கேற்ப சொற்கட்டுக்கள் அமைந்திருக்கும். நீண்ட தாளக்கோர்வைகள் கொண்டமைந்ததாக இவரது சொற்கட்டுகள் அமைந்திருந்தன. உதாரணமாக ‘ஆடிய வேடிக்கை பாரீர் என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. இது சாருகேசி இராகத்தில் அமைந்தது. சரணப்பகுதியில் நீண்ட சொற்கட்டு கொண்டதாக அமைந்துள்ளது.
முத்துத்தாண்டவரைப் பின்பற்றியே கோபாலகிருஸ்ணபாரதியார், பாபநாசம் சிவன், சுந்தானந்தபாரதியார், நீலகண்டசிவன் மாரிமுத்துப்பிள்ளை ஆகியோர் சிவதாண்டவத்தை வர்ணித்து சொற்கட்டுகளோடு கூடிய கீர்த்தனைகளை அமைத்தனர்.
இவர் பூலோககைலாயம் என்ற தொடர்மொழியை முதலடியாக கொண்டு கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தார். இவர் இயற்றிய கீர்த்தனைகள் 60 பதங்கள் 25 தெருவாறானோ என்ற கமாஸ் இராக பதம் பிரபல்யம் வாய்ந்தது.இடது பாதம் தூக்கி ஆடும் (கமாஸ்) மாயவித்தை செய்கிறானே. அம்மபவாணன் – (கரகரப்பிரியா) ஆடிக்கொண்டார் (மாயாமாளவகௌளை) இப்பாடலின் சரணத்தில் இரட்டித்த கால சாகிர்த்தியம் அமைக்கப்பட்டுள்ளது.
‘ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத் தேர் ஆட’
இதில் ஆட என்னும் பதம் இறுதியில் வருகின்றது. இம்முறை சம்பந்தர் தேவாரத்திலும் காணப்படுகின்றது.
‘சடையா யெனுமால் சரண்நீ எனும்மால்
விடையா யெனுமால் வெருவா விழுமால’;
இவருடைய கீர்த்தனைகளில் சைவசித்தாந்தக் கருத்துக்களும் பழைமையான வரலாறுகளும் சொற்சுவை, பொருட்சுவை, எதுகை மேனை, தொடை ஆகியவை நயங்கள் கொண்டவையாகவும் விளங்குகின்றன.
அருணாசலக் கவிராயர் (1711 – 1779)
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மயூரத்தை அடுத்துள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தருமபுரத்திலுள்ள சைவமட்டத்தில் தங்கி சமயநூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவர். தமிழ்இலக்கண இலக்கியங்களிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவர் கற்ற நூல்களில் கம்பராமாயணரும் திருக்குறளும் குறிப்பிடத்தக்கவை. இதுவே பிற்காலத்தில் இராமநாடக கீர்த்தனைகள் இயற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவை. இராமநாடகக் கீர்த்தனைகளில் சூழ்நிலைக்கேற்பவும் பாத்திரங்களின் குண நலனுக்கேற்பவும் இசைவடிவங்களைப் படைத்துள்ளார். இவ்வாறாக 197 கீர்த்தனைகளை அமைத்துள்ளார். இவை தவிர கொச்சகம், விருத்தம் தரு கலிப்பா, கலித்துறை திபதைகள் தோடயம் என பல்வேறு பாவினங்களைக் கையாண்டுள்ளார். இவை தவிர சீர்காழி தலபுராணம் சீர்காழிக்கோவை அசோமுகி நாடகம் என்பவைகளையும் இயற்றியுள்ளார்.
அருணாசலக் கவிராயருடைய இராமநாடகக் கீர்த்தனைகள்
இராமருடைய புகழைப் பாடுவதனால் இராமநாடகக் கீர்த்தனை என பெயர் கொடுத்துள்ளார். கவிராயர் இராம நாடகக் கீர்த்தனைகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டு 19 ஆம் நூற்றாண்டில் பெருவழக்கிலிருந்தது. இராம நாடகத்தை கீர்த்தனைகளாக இயற்றியமைக்கான காரணங்கள்.
1. இதுவரையில் இராமநாடகத்தை கீர்த்தனையாக எவரும் செய்யாமை
2. கீர்த்தனை பாமரமக்களும் கேட்டு இன்புறும் வடிவம்
3. இராக தாளங்களை குறிப்பதற்கு இரு இசையாளர் உதவியமை.
இந்நூல் தமிழ் நாடக நூல் என்று சொல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. மேடை நாடகத்திற்கும் ஹரிகதை முறையில் மேடை பிரசங்கம் செய்வதற்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் தெலுங்கிலும் தமிழிலும் புராணக்கதைகள் இதிகாசக்கதைகள் என்பன மராட்டிய ஹரிகதைப் பாணியில் கீர்த்தனைகளாக இடையோடுபாடப்பட்டு கதாகாலட்சேப முறையில் மன்னர்கள் முன்னிலையில் அரசவையில் பாடப்பட்டு வந்துள்ளன. இதனால் இவருடைய இராமநாடக கீர்த்தனைகளுக்கும் பெருவரவேற்பு இருந்து வந்தது.
இராமாயணம் கவிதை நாடகம் சொற்பொழிவு திரைஇசை கதாகாலசேபம் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிவந்தன. அருணாசலக் கவிராயரும் கம்பர் இயற்றியது போன்றே இராமாயணத்தை ஆறு காண்டங்களாகப் பிரித்துள்ளார். பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிஸ்கிந்தா காண்டம், சுந்தரா காண்டம், யுத்த காண்டம் என்பவையாகும். 12,000 பாடல்களாக இராமாயணத்தை கம்பர்பாட இயற்றமிழ் செய்யுட்களை கொண்ட பல விருத்தப்பாக்களை தொடக்கமாக கொண்டும் தமிழில் 197 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
எடுத்துக்காட்டாக சுந்தரகாண்டம் என்னும் பகுதியை நோக்கின் தோடையம், திபதைகள், தருக்கள் கொச்சக்கம், கலித்துறை ஆகிய பாவினங்களைக் கையாண்டு பாடல்கள் 268 அமைந்துள்ளன. கீர்த்தனைகள் தரு என்ற பெயரில் குறிப்பிடுகிறார். இதில் வசனங்கள் வருவதில்லை. தரு என்னும் கீர்த்தனைப் பகுதி முழுவதும் பாத்திரங்கள் பேசிப்பாடி ஆடுகின்ற பகுதிகளாகும். தருக்கள், வர்ணனைத்தரு, வாக்குத்தரு, புலம்பல்தரு எனபலவகைப்படும். அவற்றும் சிலவற்றை காண்போம்.
தருக்கள்
1. பாய்ந்தானே அனுமன் நாதநாமக்கிரியை ஆதிதாளம்
2. எட்டு நாளையே பாரும் அம்மா
இராவணன் போரும் இவன் ஊரும் – சாரங்கா ஆதிதாளம்
அசோகவனத்தில் இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதாதேவி தனது உள்ளக் குறுமலை திரிசடையோடு முறையிடும் சந்தர்ப்பத்தில் சோகத்தை வெளிப்படுத்த திபதையை பயன்படுத்தியுள்ளார்.
3. ஐயா நானொரு பெண்பிறந்த கதையை
யாருடனே சொல்வேன் திரிசடையே – நீலாம்பரி இராகம் ஆதிதாளம்.
இராவணர்காக் கண்ட அனுமன் தனது போபத்தினை வெளிப்படுத்தும் போது அடானா இராகத்தினை கையாண்டுள்ளார்.
இந்த இராவணைக் கண்டு சும்மா போனால்
என்ன அனுமன் நானே – அடானா ஆதிதாளம்
எனவே பாத்திரங்களின் குணநலனுக்கேற்ப பொருத்தமான இசைவடிவாக்கப்படைத்தல் இவரின் இசை நுட்பமாகும். தனது 60 வது வயதில் தமிழ்நாடு முழுவதும் இராமகதையை இனிதாய் தமிழில் பாடியவர். பல இசைவடிவங்களை கொண்ட முதல் தமிழிசை நாடகமாக இராமநாடகம் விளங்குகிறது.
மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1782)
இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாரிமுத்தாப்பிள்ளை சிதம்பரத்திற்கு வடக்கே அமைந்துள்ள தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே கீர்த்தனைகளை இயற்றும் ஆற்றல் பெற்றவர். நடராஜப் பெருமான் கனவில் தோன்றி இவ்வூருக்கு ஒரு பிரபந்தம் இயற்றும்படி கேட்க இவரும் இறைவன் திருவருனை வியந்து ‘புலியூர் வெண்பா’ என்னும் நூலைப்பாடி முடித்தார். இவைப் பாடல்களில் இவ்வளவு பொருட்சுவை உடைய பாடல்களைக் காண்பதரிது. இறைவனை நிந்திப்பது போன்று அமைந்த கீர்த்தனைகள் நிந்தாஸ்துதி எனப்படும். இவை இவர் கீர்த்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நடராஜ பொருமான் மீது பாடிய பாடல்கள் ஐம்பது என்று கூறப்படுகின்றது. இவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை இருபத்தைந்து ஆகும். முத்துத் தாண்டவர் பாடல்களிலும் நிந்தாஸ்துதி கீர்த்தனைகளைக் காணலாம். தாண்டவரைப் பின்பற்றியே மாரிமுத்தாப்பிள்ளை நிந்தாஸ்துதி கீர்த்தனைகள் இயற்றியதாகக் கூறப்படுகின்றது.
இவர் தமது 12 வது வயதிலேயே உமையவள் மீது உமையவள்மாலை என்னும் பிரபந்தம் இயற்றினார். அதன் பின் புலியூர்வெண்பா எனும் வருணாபுரி ஆதிமூலகர் குறவஞ்சி, ஆதி மூலகர் நொண்டி நாடகம், அநீதி நாடகம,; புலியூர் சிங்கார வேலர் பதிகம், விடங்கேசர் பதிகம், நடராஜ பெருமான் மீது ஐம்பது பாடல்கள் இரதபந்தம் முதலிய சித்திரக் கவிகள் பல்வித வர்ணங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சீர்காழி அருணாசலக்கவிராயரும் இவரும் ஒரு காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தனைகள்
1. என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா – வேளாவளி; இராகம் ஆதி தாளம். (நிந்;தாஸ்துதி)
2. ஒருக்கால் சிவசிதம்பரம் – ஆரபி இராகம் – ஆதி தாளம்
3. எந்நேரமும் ஒரு காலை – தோடி இராகம் ஆதி தாளம் (நிந்;தாஸ்துதி)
4. காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே – எதுகுலகளம்போதி ஆதி
5. என்ன காரியத்துக்கு இப் பேயாண்டிமேலே – இச்சை கொண்டாய் மகளே – தர்மவதி இராகம்
6. ஏதுக்கித்தனை மோடிதான் – சுருட்டி இராகம் – ரூபக தாளம்
முடிவுரை
இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற இம்மூவரும் சீர்காழிப் பதியிலே தோன்றியமையினால் சீர்காழி மூவர் என அழைக்கப்பட்டனர். இவர்களுள் முத்துத்தாண்டவரும். மாரிமுத்தாப்பிள்ளையும் தில்லைநடராசரைப் போற்றிப் பாடினார்கள். மாரிமுத்தாப்பிள்ளை பூலியூர்வெண்பாவை சிதம்பரத்தலம் சம்பந்தப்பட்ட 100 பாடல்களைப் பாடியள்ளார். மாரிமுத்தாப்பிள்ளையின் சமகாலத்தவராக திருப்புகழ் பாலபாரதி என்ற கவிஞர் மாரிமுத்தாப்பிள்ளையின் புலமைத் திறன்போல் முழுதும் தெளிந்த மனம்போல் எங்கும் காணவில்லை என்று பாடுகின்றார். இவரைப் போலவே அருணாசலக் கவிராயரும் சீர்காழிக்கு அருகே உள்ள மாயுரத்தை அடுத்த தருமபுரம் சென்று அங்கிருந்த சைவ ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர்களிடம் சமயக்கல்வியும் வடமொழியும் கற்றிருந்தார். இம்மூவர்களது பாடல்களினாலும் தமிழ் சேர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கின்றது. தமிழ் இசைச் சங்கத்தினால் இவரது கீர்த்தனைகளை இசை ஆய்வாளர்களும் கலைஞர்களும் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளனர். இவர்களது பாடல்களினால் தமிழ் இசை என்றும் வளம்பெறும் என்பது திண்ணமாகும்.
உசாத்துணை நூல்கள்
1. தமிழிசை தொன்மையும் பெருமையும், தொகுதி – 1 இசைத்துறை தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2006.
2. தென்னக இசையியல் Dr.T.P.செல்லத்துரை, வைகறைப்பதிப்பகம், திண்டுக்கல் 5ம் பதிப்பு, 2005
3. இசையும் பிறநுண்கலைகளும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2005
4. தமிழிசைக் கலைக்களஞ்சியம், 4ம் தொகுதி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2000.
இராகசுரபி. பரமேஸ்வரி கணேசக்கம்பர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
இசைத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நன்றி: காரை நிலா – 2014
No Responses to “தமிழிசை மூவர் இசைப்பணி – ஓர் ஒப்புநோக்கு”