எமது கல்லூரியில் தமது குரலிசையினால் அனைவரையும் கவர்ந்த பழைய மாணவியும் நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசக்கம்பர் M.A, M.Phil அவர்கள் சுவிற்சலாந்து ஜேர்மனி பிரான்ஸ் பின்லண்ட் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்ட வரிசையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு கலைப்பயணம் மேற்கொண்டு இவ்வாரம் ரொரன்ரோவை வந்தடையவிருக்கின்றார்.
இந்நிலையில், ஈழத்து இளம் கலைஞராகிய செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களை வரவழைத்து அவரின் இன்னிசைக் கச்சேரியை கனடாவில் நடத்தும் ஏற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈழத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவ்வாறான கலைஞர்களை இனம்கண்டு அவர்களை புலம்பெயர்நாடுகளுக்கு அழைத்து கச்சேரிகளையும் கலைநிகழ்வுகளையும் நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என ஈழத்தைச் சேர்ந்த ரொரன்ரோவின் முன்னணிக் கலைஞர்களான சங்கீதபூசணம். பொன்.சுந்தரலிங்கம், சங்கீதவித்துவான் பண்ணிசைமாமணி திருமதி.பராசக்தி விநாயகதேவராஜா, இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷமி சீனிவாசகம், பல்கலை வித்தகரும் குரலிசை நிபுணருமான திரு.வர்ணராமேஸ்வரன், நாட்டியக்கலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரட்ணம், பரதகலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளதுடன் தமது முழுமையான ஆதரவினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராகசுரபி.செல்வி.பரமேஸ்வரி கணேசக்கம்பர் அவர்களின் இன்னிசைக் கச்சேரி வரும் சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 5:30 இற்கு கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கில் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.
கச்சேரிக்குப் பக்கவாத்தியங்களாக வயலின் இசையினை வயலின் வித்துவான் A.ஜெயதேவன் அவர்களும், மிருதங்க இசையினை காரைநகர் தந்த கலைஞர் மிருதங்க வித்துவான் ‘யாழ்ப்பாணம்’ T.செந்தூரன் அவர்களும் வழங்கி அணிசெய்ய இருக்கின்றனர்.
கச்சேரிக்கு அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) அன்று காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் வாய்ப்பாட்டு இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை(Workshop) ஓன்றும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.
No Responses to “இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி”