காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மண்டபம் கட்டிய வைத்தியர் K. விசுவநாதன் – எஸ்.கே.சதாசிவம்-
காரைநகர் இந்துக் கல்லூரியின் வைர விழா மலர் 1950 ஆம் ஆண்டு மார்கழி மாதம் வெளியிடப்பட்டது. இம்மலரில் பழைய மாணவர் ஒருவரால் எழுதப்பட்ட ‘நினைவுகள்’ எனும் கட்டுரையில் திரு.மு.சயம்பு நெருக்கடி மிக்க ஆரம்ப காலங்களில் பெருந்தன்மை மிக்க தனது மாமனாரான திரு.க. இலட்சுமணரின் உதவியைப் பெற்றார் எனவும், தொடர்ந்து வந்த காலங்களில் அங்கு வாழ்ந்த முன்னிலை மனிதர்களின் (Leading Men) ஆதரவைப் பெற்றார் எனவும் அவர்களில் முதன்மையானவர் புகழ் பெற்ற வைத்தியரும், பரோபகாரியுமான டாக்டர் K. விசுவநாதன் (The great grand – father of Mr.J.C.Arulampalam of the staff of the college) அவர்களால் கல்லினாலான முதலாவது கட்டிடம் கட்டப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 1905ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சேர். வில்லியம் துவைனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இக்கட்டிடத்தில் அமைந்த மண்டபத்திற்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மண்டபம் எனப் பெயரிடப்பட்டது என அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர் K. விஸ்வநாதனின் வாழ்வும் பணியும் பற்றியும் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நான் காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் சைவ சமய சூழலில் தமிழ் மக்கள் கல்வி கற்க பணியாற்றிய பெருமக்கள் தொடர்பான கட்டுரைகள் சில கிடைக்கப்பெற்றேன். அக்கட்டுரைகளில் வைத்தியர் K. விஸ்வநாதனின் பணி பற்றியதும் அடங்கும்.
இக்கட்டுரையில் ஸ்ரீமான் முத்து சயம்பு ஓலையினால் வேயப்பட்ட கூரையையும் களிமண்ணினாலான நிலத்தையும் உடைய கட்டிடத்தில் பாடசாலையை ஆரம்பித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியர் K.விசுவநாதனின் பெரிய நிதிப் பங்களிப்புடனும், பொது மக்களின் நிதிப் பங்களிப்புடனும் பெரிய நிரந்தரமான கல்லினாலான கட்டிடம் பழைய கட்டிடத்திற்கு மாற்றீடாகக் கட்டப்படடது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியர் K. விசுவநாதன் சிறந்த உன்னதமான பண்புகளை உடைய கிறிஸ்தவராக வாழ்ந்தவர். காரைநகர் மக்களுக்கு ஒரு பெரிய கட்டிடம் தேவை என்பதை உணர்ந்திருந்தார். இந்துக் கல்வி நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய முதல் கிறிஸ்தவர் வைத்தியர் K. விசுவநாதன் என மேலும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா தொடர்பான கட்டுரையில் சிவத்திரு.க.வைத்தீஸ்வரக்குருக்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘1888ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் பெரியார் திரு. முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகுக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்து ஆங்கில வித்தியாசாலை’. ‘வித்தியாசாலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை உணர்ந்த அன்பர்கள், ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் பாடசாலைக்கென அமைத்துக் கொடுத்தனர். இவற்றை யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த திரு. துவைனம் அவர்கள் 1905ஆம் ஆண்டு திறந்து வைத்தார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
1956ஆம் ஆண்டு “சயம்பு” சஞ்சிகையில் அதிபர் தன் அறிக்கையில் எங்களுடைய பெருமைப்படக்கூடிய வளமான நூலகம் திரு.சயம்பு அவர்களால் முதலாவதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் அமைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1956 ஆம் ஆண்டு சயம்பு சஞ்சிகையில் 04.08.1955 இல் நடைபெற்ற கட்டிடத் திறப்பு விழா பற்றிய அறிக்கையில் திரு. மு. சயம்பு அவர்களால் முதலாவதாகக் கட்டப்பட்ட மண்டபத்திற்குப் பதிலாக (It has replaced the old Hall ) வரலாற்றுப் பெருமை மிக்க இடத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகால கல்லினாலான கட்டிடம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நூலகம். தற்போது இவ்விடத்தில் மகிந்தோதய ஆய்வு கூடம் அமைந்துள்ளது.
புதிய நூலகம் சயம்பு சிலைக்குப் பின்புறமாக அமைந்திருந்தது. 1940, 1950 களில் கல்வி கற்ற மாணவர்களைத் தொடர்பு கொண்ட போது புதிய நூலகம் அமைப்பதற்கு முன் அவ்விடத்தில் பெரிய கற்றூண்களால் அமைக்கப்பட்ட மண்டபமும் இரண்டு அறைகளும் இருந்ததாகத் தெரிவித்தனர். ஆனால் அக்கட்டிடம் யாரால், எப்போ கட்டப்பட்டது என்பதை அவர்களால் உறுதிபடத் தெரிவிக்க முடியாமல் இருந்தது.
1950ஆம் ஆண்டு வைர விழா மலர் கட்டுரை மூலமும், எனக்குக் கிடைக்கப் பெற்ற கட்டுரை மூலமும் டாக்டர் K. விசுவநாதன் கல்லினாலான முதலாவது கட்டிடத்தை கட்டுவித்தார் என்பதை அறியக் கூடியதாக இருப்பினும் இக்கட்டிடத்தின் அமைவிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
டாக்டர் K. விசுவநாதன் மருத்துவர் கிறினின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். ஆயுள் வேத வைத்தியர், விவாக, இறப்பு, பிறப்புப் பதிவாளராகக் கடமையாற்றியவர். யாழ். குடாநாட்டில் புகழ் பெற்ற மருத்துவராக இருந்தமையால் நல்ல வருமானம் ஈட்டினார். ஏழைகளுக்கு இலவச வைத்திய சேவையை வழங்கினார். தபாற் கந்தோருக்கு அருகாமையில் டாக்டர் கிறின் ஞாபகார்த்த வைத்தியசாலையைக் கட்டி வைத்திய சேவை ஆற்றினார். 19th Centuary American Medical Missionionaries in Jaffna Ceylon காரைநகர் திருச்சபையின் நூறாவது ஆண்டு விழா மலர் ஆகிய நூல்களில் டாக்டர் K. விசுவநாதன் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய மகத்தான மருத்துவ சேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர் K. விசுவநாதன் தாராள சிந்தையுடன் வளமான கட்டிடத்தை வித்தியாசாலைக்கு வழங்கி மாணவர்கள் தரமான கல்வி பெற்றிட ஆவன செய்த பெரியார். காரைநகரில் மருத்துவ சேவையாற்றியவர்களில் வைத்தியர் K. விசுவநாதன் முதன்மையானவர்.
No Responses to “காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மண்டபம் கட்டிய வைத்தியர் K. விசுவநாதன் – எஸ்.கே.சதாசிவம்-”