காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் இந்திய மற்றும் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்களோடு இணைந்து வாசித்துத் தனக்கென தனியிடம் பெற்றுக் கொண்டவருமான அமரர் கயிலாயக்கம்பர் கணேசன் அவர்களது தவப்புதல்வியும் ஈழத்தில் கர்நாடக இசைத்துறையில் பெயர் சொல்லக்கூடிய முன்னணிக் கலைஞராகவும் இந்தியக் கலைஞர்கள் போல் நீண்ட இராக ஆலாபனை செய்யும் இயற்கையான ஞானமும் ஆற்றலும் கொண்டு கர்நாடக இசைப்பாரம்பரியத்தின் ஒழுங்கு முறை தவறாமல் இசைப்பயணம் செய்து பலரது பராட்டுதல்களைத் தன்னகத்தே கொண்டவர்தான் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் இராகசுரபி காரை பரமேஸ்வரி கணேசன் அவர்கள்.
இவர் கலாமன்றத்தின ஆரம்ப காலம் தொடக்கம் எமக்கு ஆதரவு வழங்கி வருவதோடு எமது கலாமன்றத்திற்கான கீதத்தினை இசையமைத்து பாடி வழங்கிய பெருமைக்குரியவர். கலாமன்ற மாணவனின் முதலாவது மிருதங்க அரங்கேற்றத்திற்கான பாட்டு இசைத்த இவருக்கு ‘இராகசுரபி’ என்னும் கௌரவ பட்டத்தினை வழங்கி சிறப்பித்ததில் எமது மன்றம் பெருமையடைகின்றது.
இவ்வாறு சிறப்புப் பெற்ற இவரது திறமைகளை உணர்ந்து கொண்ட கனடாவிலுள்ள காரைநகர் இந்துக்கல்லூரி என்று அழைக்கப்படும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினர் பரமேஸ்வரி கணேசன் அவர்களை அழைத்து அவரது அருமையான இசைமழையில் கனடாவாழ் மக்களை நனைய வைக்கும் அளப்பரிய செயலானது மிகவும் பாரட்டத்தக்கது.
அவர்களைப்போல் ஏனைய நாட்டில் வாழும் காரை அன்பர்களும் இவரை அழைத்து பெருமை கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு பழைய மாணவர் சங்கத்தினரின் நற்சேவையும் பரமேஸ்வரி கணேசன் அவர்களது இசைக்கச்சேரியும் சிறப்புற அமைய எல்லாம் வல்ல ஈழத்துச்சிதம்பர தில்லைக்கூத்தன் திருவடிகளைப் பிரார்த்தனை செய்து எனது வாழத்துக்களை கலாமன்றத்தின் சார்பில் மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
‘கலைவளம் பெருக்கி நிலை இன்பம் பெறுவோம்’
ந.சோதிநாதன்
ஸ்தாபகரும தலைவரும்
கிழவன்காடு கலாமன்றம் காரைநகர்
No Responses to “இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி வெற்றி பெற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் வாழ்த்து”