ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர்.N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Phil. அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி ரசிகர்களை மூன்று மணிநேரம் சங்கீத சாகரத்தில் மூழ்கடித்த வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.
அருமையான இந்த இன்னிசைக் கச்சேரிக்கு பக்கவாத்திமாக வயலின் வித்துவான் திரு. A.ஜெயதேவன் அவர்களும் காரைநகர் தந்த மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் அணிசெய்து கச்சேரியை மேலும் மெருகூட்டியிருந்தனர்.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசைக் கச்சேரி கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 6:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்விற்கான நிதி அநுசரணையை குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம், மருத்துவ கலாநிதி இராமலிங்கம் செல்வராசா அவரது பாரியார் மருத்துவ கலாநிதி திருமதி.சறோ செல்வராசா, தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம், காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் திரு.முருகேசு காசிப்பிள்ளை, இதயநோய் வைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம், பிரபல மோட்டார் வாகன விற்பனை முகவர் திரு.அண்டி திருச்செல்வம், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ரவி ரவீந்திரன், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா, ஜக்கிய அமெரிக்க இராச்சியத்தில் பொறியியலாளராக பணியாற்றும் திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவரது பாரியார் நிர்மலாதேவி, karainews.com இணையத்தள ஆசிரியர் திரு.தீசன் திரவியநாதன், ஆகியோர் வழங்கி உதவியிருந்தனர்.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியில் விளையாட்டிலும், கல்வியிலும் சாதனைகள் படைத்த சிறப்பு மிக்க பழைய மாணவர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார்.
கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் அவர்தம் பாரியார் திருமதி.பவானி மகாதேவன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்களான இன்னிசை வேந்தர் சங்கீதபூஷணம் திரு.பொன்.சுந்தரலிங்கம், இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாசகம், பல்கலை வேந்தர் திரு.வர்ணராமேஸ்வரன், இசைக்கலா வித்தகர் திரு.மோகன் திருச்செல்வம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திர சர்மா, நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், பரதகலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்திருந்து மண்டபத்தை நிரப்பியிருந்தனர்.
நிகழ்வுகளை கல்லூரியின் சிறப்பு மிக்க பழைய மாணவர் பேராசிரியர் தில்லைநாதன் சிவகுமாரன், கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்களும் பாரியாரும், கல்லூரியின் மூத்த பழைய மாணவர் திரு.முருகேசு சின்னத்துரை அவர்களும் பாரியாரும் ஆகியோர் மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
கனடாப் பண் தமிழ் பண் ஆகியவற்றை திரு.கார்த்திக் இராமலிங்கம் அவர்களின் மாணவியான செல்வி ராகவி மனோராகவன் பண்ணோடு இசைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினரும் இணையத்தள நிர்வாகியுமான திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.
கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் தந்த வாய்ப்பாட்டுக் கலைஞருமான அமரர் சங்கீதபூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் குரலில் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கல்லூரிப் பண் இசைக்கப்பட்டது.
அடுத்து வந்த மூன்று மணிநேரத்திற்கு செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் கரைபுரண்டோடும் கர்நாடக இசை வெள்ளத்திற்காக அரங்கம் விரிந்தது. ஆவலோடு தமது இருக்கைகளில் நிமிர்ந்து இருந்த ரசிகர்கள் தம்மை மறந்து தாளம் போட்டு இசையரசியின் இசைக் கோலங்களை ரசித்தனர்.
ஒவ்வொரு உருப்படியும் பாடத் தொடங்கும் போதும் முடியும்போதும் இராக ஆலாபனை செய்தபோதும் அரங்கத்தில் ரசிகர்களின் கரவொலி எதிரொலித்தது.
காம்போதி, ஆபேதி, லதாங்கி ஆகிய மூன்று இராகங்களிலும் ஆலாபனை செய்திருந்தார். அதில் லதாங்கி இராகத்தில் அமைந்திருந்த ‘பிறவா வரம் தாரும்’ என்னும் பாபநாபன் சிவன் அவர்களின் கீர்த்தனையும் ஆபேதி இராகத்தில் அமைந்த ஸ்ரீதியாகராஜர் இயற்றிய ‘நகுமோ’ எனத் தொடங்கும் கீர்த்தனையும் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
ஒவ்வொரு பாடல் முடிவிலும் கற்பனாஸ்வரம் பாடி முடிக்கும் போதும் ஜோன்புரி இராகத்தில் சிவபுராணத்தின் சில வரிகளை இசைத்தபின் அதே இராகத்தில் ‘எப்போ வருவாரோ’ என்ற பாடலைப் பாடிய போதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுததினர்.
வீரமணி ஐயர் அவர்களின் பாடலைப் பாடியபோதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய போதும் சபையோர் உற்சாகப்படுத்திய கரவொலியில் அரங்கு நிறைந்தது.
பக்கவாத்தியக் கலைஞர்களும் தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தம்பங்கை நிரூபித்தனர். வயலின் வித்துவான் A.ஜெயதேவன் அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் தனியாவர்த்தனம் வாசித்தபோது மண்டபம் இசைப் பிரவாகத்தில் மூழ்கித் திணறியது.
அடுத்து பிரதம விருந்தினர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களை சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பிரதம விருத்தினர் உரையாற்றும்போது பல ஆண்டுகளாக தமிழ் பேசும் வாய்ப்பு தமக்கு இருக்கவில்லை என்றும் அதனால் தனது தமிழ் மறந்து போய்விட்டதாகவும் ஆனால் இன்று இந்த இசைக் கச்சேரியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தனது தாய்மொழி, பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றது என்றும் கூறினார். இருதய மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான மருத்தவகலாநிதி ராதகோபாலன், எமது நினைவுகள் எமது இதயங்களில் பதிவுசெய்யப்படுவதாகவும் அதற்கு எடுத்துக்காட்டாக தமது அநுபவத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்த ஒரு பத்து வயது சிறுமியின் வாழ்வில் இடம்பெற்ற சம்பவத்தை உணர்வு பூர்வமாகக் கூறினார்.
மேலும் அவர் தனது உரையில் இன்று எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை தாம் கல்வி கற்ற பாடசாலையை மறக்காது பல்வேறு வகையான உதவித்திட்டங்களை எமது பாடசாலைக்கு செ;ய்து வருவதற்கு காரணம் எங்கள் வாழ்விற்கு அத்திவாரம் இட்ட எமது பள்ளிக்கால நினைவுகள் எம் ஒவ்வொருவரினதும் இதயத்தில் அழியாது இடம்பிடித்திருப்பதாகும் என்றும் கூறி சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தமது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
அடுத்து இளம்கலைஞர் மன்ற நிறுவுநர் இன்னிசை வேந்தர் சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் அரங்கத்தின் நாயகி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பாராட்டுரையை வழங்கினார். திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்களை சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார். இன்னிசை வேந்தரின் பாரியார் திருமதி.பொன் சுந்தரலிங்கம் அவர்கள் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
இன்னிசை வேந்தர் தனது உரையில் ஈழத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது கலைத்துறையை வளர்த்து வருகின்ற இவ்வாறான கலைஞர்களை இனம் கண்டு நாம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு “இசையே அவரின் உயிர் “ எனவும் இன்று அவர் தனது திறiமையினால் தமது தந்தையாரையும் விஞ்சுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனவும கூறி பாராட்டியபோது சபையோர் தமது பலத்த கரவொலியால் அதனை வழிமொழிந்தனர்.
அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிறுவுனர்களில் ஒருவரும் எமது கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய அமரர்.சின்னத்திம்பி தம்பிராஜா அவர்களின் பாரியாரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி.மனோன்மணி தம்பிராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் சங்கத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வாசித்து செல்வி பரமேஸ்வரி அவர்களுக்கு வழங்கினார்.
வயலின் இசை வேந்தன் A.ஜெயதேவன் அவர்களை குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம்அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்;பாணம் T.செந்தூரன் அவர்களை தொழலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவரும் தற்போதயை போசகருமாகிய திரு.ரவி ரவீந்திரன் அவர்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வழங்கினார்.
அடுத்து கலைஞர்கள் இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீனிவாசகம், நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திரசர்மா ஆகியோர் இன்னிசை அரசி செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தினர்.
அடுத்து கௌரவ விருந்தினர் தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களையும் பாரியாரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாக சபை உறுப்பினர் திரு.திருவேங்கடம் சந்திரசோதி தம்பதிகள் பொன்னாடை போர்த்தி மலர்ச்செண்டு வழங்கிக் கௌரவித்தினர்.
அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது பதிலுரையில் தான் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அதனை நிறைவேற்றவும் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் தனது இசைக்கச்சேரியை வழங்குவதற்கும் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு தமது நன்றியைக் கூறினார்.
நிறைவாக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல அறிவிப்பாளருமான திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் எமது ஊரில் பிறந்து கலை ஈடுபாட்டுடன் வளர்ந்த தமது அநுபவத்தில் செல்வி.கணேசன் குடும்பத்தினரை நன்கு அறிந்தவராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.
வெளியே அடை மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது இனிமைiயான கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியை பொறுமையாக இருந்து ரசித்து மகிழ்ந்ததோடு எமது மண்ணின் மகளை இசையின் அரசியை எமது ஊர்மக்களும் இசை ரசிகர்களும் வாழ்த்தி தமது அன்பினைத் தெரிவித்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்.
No Responses to “மூன்று மணிநேரம் ரசிகர்களை சங்கீத சாகரத்தில் மூழ்க வைத்த செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி”