அண்மையில் மறைந்த காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரான மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் மறைவிற்கு கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் ஊடாக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னாரது பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டிருந்தன.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர் திருமதி அரூபா ரமேஸ், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அமரர் கனகசபாபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு நிகழ்வில் பங்குபற்றியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அன்னாரது ஆத்ம சாந்திக்காக அனைவரும் எழுந்து நின்று மௌனப் பிரார்த்தனை செய்தனர்.
அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் தமது அஞ்சலி உரையில், கனகசபாபதி அவர்கள் கல்லூரிச் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்து கல்லூரியின் பல முக்கியமான தேவைகளை தமது சங்க நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தி அவற்றினை நிறைவு செய்து வைத்ததில் இவருடைய பங்களிப்பு போற்றுதற்குரியதாகும். வசதி குறைந்த கல்லூரி மாணவர்களின் கல்வியிலே மிகுந்த அக்கறைகொண்டு செயற்பட்டு வந்த இவர், பல மாணவர்களிற்கும் இறுதிவரை உதவிகளை வழங்கி ஊக்குவித்து வந்துள்ளார். ஈழத்துச் சிதம்பர ஆதீனகர்த்தாக்கள் பரம்பரையில் வந்த இவர் கணித பாடத்தைக் கற்பிப்பதில் ஆற்றல் மிக்கவராக விளங்கியவர். தனியார் ஆசிரியராகப் பணியாற்றியிருந்த காலத்தில் பலரும் இவரிடத்தில் கணித பாடத்தை விரும்பிக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். கல்லூரி வளர்ச்சி சார்ந்து தூர நோக்குடன் செயற்பட்ட இவர், சொல்ல வேண்டியவற்றை சொல்லவேண்டிய நேரத்தில் தெரியப்படுத்தி எம்மை வழிப்படுத்திய பெருந்தகையாவார். இவருடைய இழப்பானது அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும், பாடசாலைக்கும் பெரும் இழப்பாகவே பார்க்கமுடிகிறது என அதிபர் தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டார்.
பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் பொருளாளர் திரு.க.நிமலதாசன் அவர்கள் உரையாற்றுகையில், கனகசபாபதி அவர்கள் காரைநகரில் கிராமசேவை அலுவலராகப் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி மக்களினதும் அதிகாரிகளினதும் பாராட்டினைப் பெற்றவர். கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற போதிலும் தனது ஊரையும், தான் கற்ற காரை.இந்துவையும் ஆழமாக நேசித்தவர். காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தில் ஆறு ஆண்டுகள் பொருளாளராகப் பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு அயராது உழைத்தவர். இவர் கனடாவிலிருந்து வந்து காரைநகரில் தங்கியிருந்த காலங்களில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளை சீரிய முறையில் திட்டமிட்டு நிறைவேற்றி வைப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பினை வழங்குவதிலும், குறித்த திட்டங்களின் அறிக்கைகளை அவ்வப்போது எம்மிடமிருந்து பெற்று சங்க உறுப்பினர்களிற்கு சமர்ப்பிப்பதிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்தவர். இறுதிவரை அவரது சிந்தனையும் முழுமையான ஈடுபாடும் கல்லூரியின் வளர்ச்சியிலேயே இருந்து வந்துள்ளது. கனகசபாபதி அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியே எமது கல்லூரியானது தேசியப் பாடசாலையாக உள்வாங்கப்பட்டமைக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும் என திரு.நிமலதாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் ஆசிரியை திருமதி சிவசங்கரன் சிவரூபி அவர்களும், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கனகசபாபதி அவர்களின் உதவியைப் பெற்று வருகின்ற மாணவர்களுள் ஒருவரான செல்வன் நிறோசன் கருணாகரன் அவர்கள் மாணவர்கள் சார்பிலும் அஞ்சலி உரையாற்றினர்.
அஞ்சலி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் மறைவிற்கு கல்லூரிச் சமூகம் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியது.”