பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு வருகை தந்து பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக இசைக் கச்சேரியினை நிகழ்த்திய பாடசாலையின் பெருமைக்குரிய பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமான செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் சென்ற 01-07-2015 அன்று புதன் கிழமை மதியபோசன விருந்தளித்து மதிப்பளித்திருந்தது.
சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாகசபை உறுப்பினர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவருமான சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்கள் தமது உரையில் செல்வி பரமேசுவரி கணேசன் அவர்கள் கனடா பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வந்து இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தி எல்லோரையும் இன்புறச் செய்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றி கூறினார். எல்லோரும் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற கச்சேரியில் அசையாமல் இருந்து கச்சேரியை இரசித்துக் கொண்டிருந்தது பிரமிக்கச் செய்தது. செல்வி அவர்கள் இசைத்துறையில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று கலாநிதிப் பட்டம் பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராக வரவேண்டும் என்றும், வாய்ப்புகள் கிடைக்கும்போது வேறு நாடுகளுக்கும் சென்று சிறப்புற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இங்கு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் ஈழத்தின் முன்னணி இசைக்கலைஞர் ஒருவரை இனம்கண்டு எமது சங்கம் இங்கு வரவழைத்தமையையிட்டு கனடாவின் இசைத்துறை வட்டாரம் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடமிருந்தும் எமது சங்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதை குறிப்பிட்டதுடன் இதையிட்டு எமது சங்கமும் கனடா வாழ் பழைய மாணவர்களும் பெருமைப்படமுடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் செல்வி பரமேஸ்வரியின் கனடாவிற்கான வருகை சங்கத்தின் வளர்ச்சிப்பாதையில் முக்கியமான படிக்கல்லாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கி பாடசாலையின் மேம்பாட்டிற்கு உதவியது மட்டுமல்லாது பாடசாலைக்கும் தாம் பிறந்த காரை மண்ணிற்கும் பெருமை சேர்த்த செல்வி பரமேஸ்வரிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
சங்கத்தின் உத்தியோபூர்வ இணையத்தளமான karaihinducanada.com நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் பேசுகையில் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்கள் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்து எம்மில் பலருடன் குழந்தையாகப் பழகி இன்று இசை வானில் குயிலாக உயரப் பறந்தாலும் தான் கல்வி கற்ற பாடசாலையையும் எம்மையும் மறவாமால் எமது அழைப்பை ஏற்று இங்கு வந்து இங்குள்ள முன்னணி சங்கீத வித்துவான்களும் கர்நாடக சங்கீத இசை ரசிகர்களும் பாராட்டும்படியாக அருமையான இசைக் கச்சேரிகளை நடத்தியமை எமக்கு எல்லாம் மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கின்றது எனக் கூறி அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்து பழைய மாணவர் சங்க கனடா கிளையின் சார்பில் சிறிய சன்மானத் தொகை பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களினால் செல்வி பரமேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டது.
செல்வி பரமேஸ்வரி தமக்கு வழங்கப்பட்ட மதிப்பிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அவர் தமதுரையில் நீங்கள் என்மீது இவ்வளவு அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதற்குக் காரணம் நீங்கள் ஒவ்வொருவரும் எனது தந்தையார் மீது (நாதஸ்வரக் கலைஞர் காரையம்பதி என்.கே.கணேசன்) குறிப்பாக காரைநகர் மக்கள் வைத்துள்ள அன்பும் மதிப்புமே எனவும் தமது தந்தையாரின் ஆத்மா தம்மை ஆசிர்வதித்து வருவதே பல்வேறு சவால்களையும் தாண்டி இசையுலகில் உயர்ந்து விளங்க காரணமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது உரையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தாம் பயின்ற பாடசாலையின் மேம்பாட்டிற்கு இசைக் கச்சேரியினை வழங்கியதையிட்டு மனநிறைவடைவதுடன் தாம் கனடாவில் தங்கியிருந்த குறுகிய காலப்பகுதியில் இங்குள்ள மூத்த கலைஞர்கள் முன்னணிக் கலைஞர்கள் மற்றும் இசைவளர்க்கும் அமைப்புக்கள் தமக்கு வழங்கிய வரவேற்பும் மதிப்பளிப்பும் தம்மை பெரிதும் ஊக்கிவித்திருப்பதாகவும் தாம் வேறு பல நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் கனடாவிற்கான பயணமே என்னை உலகப்புகழ் அடைய வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தம்மை இங்கு வரவழைத்ததன்மூலம் இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாகவிருந்து செயற்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “செல்வி பரமேஸ்வரி கணேசனுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை மதிய போசன விருந்து வழங்கி மதிப்பளித்தது”