காரைநகர் இந்துக் கல்லூரியினால் வெளியிடப்பட்டு வருகின்ற சயம்பு சஞ்சிகைகளின் PDF வடிவம் இவ்விணையம் ஊடாக எடுத்து வரப்படும் வரிசையில் 1952-1953ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சிகை திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் எழுதப்பட்ட கண்ணோட்டத்துடன் எடுத்து வரப்பட்டுள்ளது.
1952 – 1953ம் ஆண்டு சயம்பு மலர் – ஒரு கண்ணோட்டம்
– எஸ்.கே.சதாசிவம் –
1952 – 1953ம் ஆண்டு சயம்பு சஞ்சிகையின் இணை ஆசிரியர்களாக திரு.N.சபாரத்தினம், திரு.ஏ.சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பணியாற்றி வெளியிடப்பட்ட இம்மலர் ஒரு கூட்டு முயற்சி என ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்ட ஆழமான, தூரநோக்கு சிந்தனையுள்ள கருத்துக்களை அன்றைய ஆட்சியாளர்கள் கவனத்தில் எடுத்து இருப்பின் நாடு இன்று மேன்நிலை அடைந்து இருக்கும். திரு.D.S. சேனநாயக்காவை தொடர்ந்து வந்த பிரதமரினதும், அமைச்சரவையினதும் செயற்பாடுகள் தூரநோக்குடைய அனுபவம் மிக்கனவாக அமையாமையால் நாடு எதிர்காலத்தில் நல்லதொரு நிலையை எதிர்பார்க்க முடியாது எனக் குறிப்பிடுகின்றனர். 1952ம் ஆண்டு வேலை நிறுத்தமும் கடை அடைப்பும் இக் கருத்தினை ஆமோதித்து நிற்கின்றது எனக் குறிப்பிடுகின்றனர்.
கல்வியில் ஆசிரியரின் ஆளுமை முக்கிய வகிபாகத்தை வகிப்பதனால் ஆசிரியர்களுக்கு உரிய வேதனமும், அங்கீகாரமும் வழங்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் மொழிக் கல்வி, இலவசக்கல்வி என்பன இல்லாதிருப்பின் செல்வந்தராயிருந்து ஆங்கிலம் படிப்போரின் வேலையாட்களாக கிராமத்தின் வறிய பிள்ளைகள் இருந்திருப்பர் எனக் குறிப்பிடுகின்றனர். அதிபர் தன் அறிக்கையில் வள அபிவிருத்தி, மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளில் அடைந்த அடைவுகள் பாடப்புறச் செயல்களில் மாணவர்கள் பங்குபற்றல் ஏனைய சாதனை அடைவுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் தொழில் சார்ந்த கைவினை பயிற்சிகளை அறிமுகம் செய்வதன் மூலம் நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும் எனக் குறிப்பிட்டுள்ளார். தாய் மொழியில் பாட போதனைகள் ஆரம்பிக்கப்பட்டமையால் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழில் புதிய நூல்களை ஆக்கம் செய்தல் வேண்டும் எனும் வேண்டுகோள் விடுக்கும் வேளையில் சகோதர மொழி முன்நிலையில் நிற்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.
திரு.A.நடராஜா ஆசிரியர் அன்று ஜேர்மனியில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை வல்லரசு நாடுகளின் நிலைப்பாடுகள், உலக ஒழுங்கில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்கள், அரசியற் கோட்பாடுகள், களநிலைமை என்பவற்றை கருத்தில் கொண்டு ஆய்வுக்கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.
மாணவர் எழுத்தாக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொழிலாளவர்க்கம் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் இணைத்து நடாத்திய 1952ம் ஆண்டு வேலை நிறுத்தத்தையும் கடை அடைப்பையும் அரசு அதனை அடக்கிய முறையையும், விலை வாசி ஏற்றங்கள் பற்றியும் திரு.C.கணேசலிங்கம் 1952ம் ஆண்டு ஹர்த்தால் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உணவுத் தேவையை நிறைவு செய்ய, உயர்ந்த அறுவடையை பெற்றுக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபடல், புதிய அணுகு முறைகளை கையாள்வதன் அவசியத்தை உணவு எனும் கட்டுரையில் திரு.M.வேலாயுதபிள்ளை வலியுறுத்தியள்ளார்.
நாகரிகம் வளர்ந்த வரலாறு எனும் கட்டுரையில் வளர்ச்சி அடைந்த நாகரீகத்தை தற்காத்து கொள்ள அனைவரும் தங்களை ஆன்மீகப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் திரு.A.வியரத்தினம், திரு.N.சண்முகநாதன் கட்டுமரத்தில் காரைநகரை சுற்றிய பயணம் எனும் கட்டுரையில் தாங்கள் ஊர்காவற்றுறையில் கட்டுமரத்தில் ஏறி கடற்படை தளக் கட்டுமானங்களை பார்த்துக்கொண்டு, வான் உயர நிற்கும் வெளிச்ச வீட்டைப்பார்த்துக் கொண்டு, வடகடல் பக்கமாக சென்றதாக குறிப்பிடுகின்றார். அங்கிருந்து ‘தூம்பில்’ மலையைப் பார்த்ததாக குறிப்பிடுகின்றார். 1980கள் வரை தூம்பில் பகுதியில் உயரமான மண்மேடுகள் காணப்பட்டன. அரசமரம், தாளை மரங்கள் நிறைந்த பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாடிகள் காணப்பட்டன. தூர இருந்து பார்ப்பவர்க்கு உயர்ந்த பனை மரங்கள் அடையாளமாக இருந்தது. இன்று அவையாவும் கடலினால் கொள்ளப்பட்டுவிட்டன.
கல்லூரியில் இல்லங்களுக்கு இடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி, ஏனைய நிகழ்வுகளுக்கான அறிக்கைகள், கல்லூரியில் இயங்கிய மன்றங்கள், விஞ்ஞானச் சங்கம், மகளிர் சங்கம், சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இம்மன்றங்களில் கல்வி, சமூகம், சர்வதேச நிகழ்வுகள், அபிவிருத்தி, அரசியல் தொடர்பான உரைகள், விவாதங்கள் நடைபெற்றமையை அறிக்கைகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
வெள்ளிவிழா கண்ட ஆசிரியர் திரு.S.கந்தையா அவர்களின் சேவையின் சிறப்புப் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது.
1954ம் ஆண்டு கல்லூரி நிகழ்வுகளுக்கான கால அட்டவணை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உதைபந்தாட்டக்குழு, மல்யுத்தகுழு, இல்லங்கள், மெய்வல்லுனர் வீரர் வீராங்கனைகள் படங்கள் இடம்பெற்றுள்ளன.
சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட விடயங்கள் யாவும் கல்லூரியில் பணி ஆற்றிய அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின் உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளமை பாராட்டுக்குரியது.
கீழே உள்ள இணைப்பினை அழுத்தி சஞ்சிகையை முழுமையாகப் பார்வையிடலாம்.
இச்சஞ்சிகையில் பதிவிடப்பட்டுள்ள புகைப் படங்களை ஒரே தடவையில் இலகுவாகப் பார்க்க வசதியாக அவையனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “1952-1953ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற “சயம்பு” சஞ்சிகையின் PDF வடிவம், சிறு கண்ணோட்டத்துடன்”