காரை.இந்துவின் 2019ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு தினம் கொரோனா தொற்றினால் ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு அமர்வுகளாக நடாத்தத் திட்டமிடப்பட்டு மூன்று அமர்வுகள் சென்ற ஆண்டு நடாத்தி முடிக்கப்பட்டிருந்தன. கொரோனாத் தொற்றின் தீவிரம் காரணமாக பாடசாலை மூடப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நான்னாவது அமர்வு சென்ற 24-12-2021 வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக வலயத்தின் உடற் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பொன்னம்பலம் சகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவரும் கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு அதன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிற்கும் உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களும், கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.உ.கிருபாகரன், முன்னாள் உப அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்திருந்தனர்.
விருந்தினர்கள் மண்டப வாசலில் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரிச் சமூகத்தைச் சேர்ந்த ஏனையோருடன் இணைந்து விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். கல்லூரி மாணவர்கள் தேவாரம் பாடி இறைவணக்கம் செய்ததைத் தொடர்ந்து உப-அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கல்லூரி அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களது தலைமையுரை நிறைவுற்றதும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப் பெற்றன. இறுதியாக மாணவர்கள் நடன, இசை நிகழ்வுகளை வழங்கி விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்வித்தனர்.
க.பொ.த.சாதாரணம், கபொ.த.உயர்தரம் ஆகிய தேசியப் பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்றவர்களும் 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் சென்றவர்களும், 2016, 2017 ஆகிய ஆண்டுகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியற் கல்லூரிக்கு அனுமதி பெற்றவர்களும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும், விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்ட அதேவேளை குறிக்கப்பட்ட பாடங்களில் இத்தேசியப் பரீட்சைகளில் 100% சித்தியைப் பெற்றுக்கொள்வதற்கு தயார்படுத்தி விட்ட ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை சிறப்பானதாகும்.
தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுசரணையில் ஏற்படுத்தப்பட்ட அமரர் சி.குமாரவேலு மாஸ்டர் ஞாபகார்த்த உதவித் திட்டம் பரிசளிப்பு தின நிகழ்வின் இறுதியில் தொடக்கிவைக்கப்பட்டிருந்தது. இது குறித்த விபரமான செய்தி தனியாக எடுத்துவரப்பட்டுள்ளது.
பரிசளிப்பு தினத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வின் முழுமையான புகைப்படங்களின் தொகுப்பினை கீழே பார்வையிடலாம்;
No Responses to “மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் நான்காவதும் இறுதியுமான அமர்வாக சிறப்புடன் நடைபெற்ற 2019ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசில் தினம்”