பல நல் மாணாக்கர்களை உருவாக்கிய தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான அமரர் சி.குமாரவேலு அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவின் தொழிலதிபரும் அன்னாரிடம் பயின்ற பழைய மாணவனுமாகிய திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் முழுமையான உதவியுடன் காரை.இந்துவின் மாணவர்களிற்கான ஊக்குவிப்பு உதவித் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறித்த செய்தியினை ஏற்கனவே நாம் பிரசுரித்திருந்தோம்.
திரு.மகாதேவன் அவர்களினால் ஐந்து இலட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வட்டித்தொகை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி சிறப்புச் சித்தி பெறும் மாணவர்களிற்கு உதவி ஊக்குவிப்பதே ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் நோக்கமாகும். ஐந்து இலட்சம் ரூபாவும் இவ்வாண்டு வைப்பிலிடப்பட்ட நிலையில் அதற்கான வட்டித்தொகை அடுத்த ஆண்டு முதிர்ச்சியின்போதே பெறப்பட்டு மாணவர்களிற்கு உதவப்படமுடியும். ஆயினும் திரு.மகாதேவன் அவர்கள் மேலதிகமாக ஐம்பதாயிரம் ரூபாவினை உதவி இத்திட்டத்தினை இவ்வாண்டே தொடக்கி வைக்குமாறு கேட்டிருந்தார்.
அந்தவகையில் 2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்றிருந்த 21 மாணவர்களிற்கு குறித்த தொகை பகிரப்பட்டு 24-12-2021 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பரிசில் தினத்தின்போது வழங்கியதன் மூலம் அமரர் சி.குமாரவேலு மாஸ்டர் ஞாபகார்த்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களிற்கான ஊக்குவிப்பு உதவித் தொகையினை திரு.மகாதேவன் அவர்களே வழங்கி வைத்திருந்து திட்டத்தினை தொடக்கி வைத்திருந்தமை சிறப்பானதாகும்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான திரு.மகாதேவன் இத்திட்டத்தினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாகவே செயற்படுத்த முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊக்குவிப்புத் தொகையினை திரு.மகாதேவன் அவர்கள் மாணவர்களிற்கு வழங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுசரணையில் அமரர் சி.குமாரவேலு மாஸ்டர் ஞாபகார்த்த உதவித் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.”