2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் வணிகமும், கணக்கீடும்(Business & Accounting) பாடத்தில் காரை.இந்துவிலிருந்து தோற்றிய அனைத்து 14 மாணவர்களும் 100% சித்தியினைப் பெற்றது மட்டுமல்லாது அனைவருமே C தரத்திற்கு மேலான சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தனர். எட்டுப்பேர் A தர சித்தியினையும் இரண்டு பேர் B தர சித்தியினையும் நான்கு பேர் C தர சித்தியினையும் பெற்றிருந்தமை பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இம்மாணவர்களிற்கு இப்பாடத்தினைக் கற்பித்த ஆசிரியை திருமதி தயாளினி ஜெயக்குமார் அவர்களது அர்ப்பணிப்புடனான கடின உழைப்பே இம்மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதனைக்கு அடிப்படையானதாகும். ஆசிரியை தயாளினியின் இத்தகைய சேவையை கருத்திற்கொண்ட வடமாகாணக் கல்வித்திணைக்களம் 2019ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட சாதனையாளராக அவரைத் தெரிவுசெய்து கௌரவித்திருந்தது. திருமதி தயாளினி ஜெயக்குமார் அவர்கள் சிறந்த ஆசிரியை மட்டுமல்லாது கல்லூரியின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முன்னின்று பணியாற்றி கல்லூரியின் நிர்வாகத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்ற முன்னுதாரணமான ஆசிரியையாக விளங்குபவர்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் தயாளினி அவர்களைக் கௌரவிப்பதெனத் தீர்மானித்ததன் அடிப்படையில் அவர் பொன்னாடை அணிவித்தும் ரொக்கமாக பரிசில் வழங்கியும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
அமரர் திருமதி திருவேங்கடம் சரஸ்வதி ஞாபகார்த்த ஊக்குவிப்பு உதவியைப் பெறும் சாதனை மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா
2019ஆம் ஆண்டில் கொழும்புத் தமிழ் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இசைப் போட்டியில் பிரிவு 4இல் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் 2வது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 3வது இடத்தினையும் பெற்றுக்கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் தற்போது உயர் வகுப்பில் பயின்று வருகின்ற செல்வி அமிர்தா ஆனந்தராசா அவர்கள். இவரும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் ரொக்கப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருக்கான ரொக்கப் பரிசிலை வழங்குவதற்கு மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து அமரத்துவம் அடைந்தவருமாகிய அமரர் சரஸ்வதி திருவேங்கடம் அவர்களது ஞாபகார்த்தமாக அன்னாரது குடும்பத்தினர் உதவியிருந்தனர். அமரர் திருவேங்கடம் அவர்களது ஞாபகார்த்தமாக கல்லூரியின் தேநீர் சாலையை அமைப்பதற்கு இக்குடும்பத்தினரே உதவியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த இரு கௌரவங்களும் 24-12-201 அன்று நடைபெற்ற கல்லூரி பரிசளிப்பு தின இறுதி அமர்வின்போது இடம்பெற்றிருந்தன.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “சாதனை ஏற்படுத்தி இந்து அன்னையை பெருமைப்படுத்திய ஆசிரியை திருமதி தயாளினி ஜெயக்குமார், மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா ஆகியோர் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்”