யாஃகாரைநகர் இந்துக் கல்லூரியில் (கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம்) பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றியதன் பயனாக காரைநகர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டவர். பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தலில், கற்பித்தல் நுட்பங்களைக் கையாண்டதுடன் தேவைப்படும் உபகரணங்களையும் தன் முயற்சியினால் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர்.
தன் கல்லூரிக் காலத்தில் மெய்வல்லுனர் நிகழ்வுகள், மற்றும் உதைபந்தந்தாட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றியமையினால் தொடர்ந்தும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு அக்கறையுடன் உழைத்தவர்.
காரைநகரில் இருந்து 1983ல் இடமாற்றம் பெற்று சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் விஞ்ஞானபாட சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றினார். கற்பித்தலில் சிறப்பான அணுகுமுறை. பாடம் தொடர்பான தெளிவான அறிவு. நிறைவான சிந்தனை, சிரமம் பாராது கருமம் ஆற்றும் பண்பு ஆகியன கல்வி உலகில் திரு.சோமாஸ்கந்தனுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தன. க.பொ.த.சாதாரண தர விடைத்தாள்கள் திருத்தம் செய்கின்ற குழுவில் பிரதம புள்ளியிடும் பரீட்சகராக கடமையாற்றினார்.
வட்டுக்கோட்டை வட்டாரப் பாடசாலைகளின் மெய்வல்லுனர் நிகழ்வுகளின் செயலாளராக நீண்ட காலமாகக் கடமையாற்றினார்.
கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடத்திய மத்தியஸ்தர் பரீட்சையில் சித்திபெற்று இரண்டாம் தர மத்தியஸ்தராகவும் (Class – II Referee) மெய்வல்லுனர் சங்கம் நடத்திய ஆரம்பிப்பாளர், நேரங்கணிப்பாளர், மைதான சுவட்டு நிகழ்வுகளின் நடுவர் தேர்வுகளில் சித்திபெற்று விளையாட்டுத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
1965ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியமனம் பெற்று காரைநகருக்கு வருகைதந்த சோமாஸ்கந்தன் அன்றைய காலத்தில் காரைநகரில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தங்கும் அல்லின் வீதியில் அமைந்துள்ள விடுதியில் 1970 வரை வசித்தார்.
திரு.சோமாஸ்கந்தன் கடமையேற்ற வேளை காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், சிறந்த ஓட்ட வீரரும் உதைபந்தாட்ட வீரருமான திரு.ஆ.குமாரசாமி இந்தியாவில் Y.M.C.A. யில் விளையாட்டுத்துறைப் பயிற்சியை நிறைவு செய்து விளையாட்டுத்துறை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருவரும் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருந்தமையால் கல்லூரியின் விளையாட்டுத்துறை உன்னத நிலையை நோக்கி நகர்ந்தது.
கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் அமெச்சூர் மெய்வல்லுனர் சங்க (Amateur Athletic Association) விதிகளுக்கமைவாக நடைபெறுவதை திரு.சோமாஸ்கந்தன் உறுதி செய்தார். (மைதான சுவட்டு நிகழ்வுகளுக்கு மைதானத்தை தயார்செய்தல், போட்டி நடைபெறும் ஒழுங்குமுறை)
விளையாட்டுப்போட்டி தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள், மைதான சுவட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பெற்ற திறனை (புறப்படுகை, நிறைவு செய்தல், அஞ்சல் கோல் பரிமாற்றம், எறிதல், பாய்தல், விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக போட்டியில் பங்குபற்றல்) ஏனைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு கொள்வதற்கான வகையில் அமையும்.
விளையாட்டுப் போட்டி அழைப்பிதழின் இறுதிப்பக்கத்தை சாதனையாளர் பட்டியல் அலங்கரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சாதனைகள் ஏற்படுத்தப்படும்பொழுது போட்டி முடிவு கிடைத்தவுடன் சாதனையாளரின் சாதனை விபரம் அறிவிக்கப்படும். பரிசளிப்பு நிகழ்வின் போது விஷேட பரிசில்கள் வழங்கி சாதனையாளர் கௌரவிக்கப்படுவர்.
விளையாட்டுப் போட்டிப் பணிகள் ஆரம்ப தினத்திருந்து சுவடுகள் அமைத்தல் விளையாட்டுப்போட்டி முடிவடைந்த பின் அனைத்து தளபாடங்களையும் பாடசாலை வளாகத்திற்குள் எடுத்துச் செல்வது வரை சுயமாகச் செயலாற்றும் மாணவர் அணி பணிக்காகக் காத்திருக்கும்.
விளையாட்டுப்போட்டிகளுக்கு குறிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய தகுதி பெற்றவர்கள் அலுவலர்களாகப் பணியாற்ற அழைக்கப்படுவர். விளையாட்டுத்துறையில ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டியில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதன் மூலம் தகுதி வாய்ந்த அலுவலர்குழாம் ஒன்றை திரு.சோமாஸ்கந்தன் உருவாக்கினார்.
1970களின் நடுப்பகுதிகளில் யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடத்திய மெய்வல்லுனர்ப்போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது. தனி வீரர்களுக்கிடையிலான மெய் வல்லுனர் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை எதுவென தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை மைதானத்தில் காணப்பட்டது. இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற 4x100m, 4x400m அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் காரைநகர் இந்துக்கல்லூரியின் அஞ்சல் ஓட்டக் குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை அகன்று யாஃகாரைநகர் இந்துக் கல்லூரியின் முதலாம் இடம் உறுதி செய்யப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதம கல்வி அதிகாரி திரு.எஸ்.தங்கராசா அவர்கள் உரையாற்றும் பொழுது கிராமியப் பாடசாலை ஒன்று நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலையும், சமூகமும் விளையாட்டுத்துறையில் காட்டுகின்ற அர்ப்பணிப்பும், அக்கறையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார்.
1934ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் (All Ceylon Inter School Alhletic Meet) திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் தேசிய ரீதியில் பரிசு பெற்ற கல்லூரியின் முதல் மாணவர்கள்.
திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பின்வரும் மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசியப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பெற்றனர்.
இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிகள்
திரு.செல்வரத்தினம் இராதகோபாலன் 1973ஆம் ஆண்டு போட்டியில் 100மீற்றர் உயரம் பய்தல் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கமும் 1974ஆம் போட்டியில் 100மீற்றரில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றரர்.
திரு.கந்தமூர்த்தி ஆனந்த சற்குணநாதன் 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 200மீற்றர், 400மீற்றர், 400 மீற்றர் தடை தாண்டல், ஈட்டி எறிதல், தட்டெறிதல், முப்பாச்சல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி 400 மீற்றர் தடை தாண்டல் நிகழ்ச்சியில் பரிசு பெற்றார்.
திரு.சபாரத்தினம் கோவிந்தராசா 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 100மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல் நிகழ்வுகளில் பங்குபற்றினார்.
திரு.திருநாவுக்கரசு யோகராஜா 1977 – 1982 வரை நடைபெற்ற போட்டிகளில் 1500மீற்றர். 3000 மீற்றர் நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில் பெற்றரர்.
திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் யாழ் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு இலங்கைப் பாடசாலை உதைபந்தாட்ட அணித்தெரிவிற்கான போட்டிகளில் பங்குபற்றினார்.
பாடசாலை மாணவர்களின் பயிற்சி நிறைவடையும் வரை பொறுமையுடன் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும் பழைய மாணவர்கள். கழகங்களின் வீரர்களுடன் உதைபந்தாட்டத்தில் பங்குபற்றுவார். இவர்களுக்கு விளையாட்டுக்குத் தேவையான பயிற்சிகள், சட்டவிதிகள் பற்றி போதனை வழங்கப்படும். மாலை முடிவடைகின்றது. வீடு செல்ல வேண்டும் என்கின்ற அவசர நிலை என்றுமே திரு.சோமாஸ்கந்தன் முகத்தில் தெரிவதில்லை. திரு.சோமாஸ்கந்தன் பாடசாலைக்கு வெளியே வாழ்ந்த காரைநகர் இளைய சமூதாயத்தின் நன்மதிப்புக்கும் பாத்திரமானவர்.
திரு.சோமாஸ்கந்தன் சிறந்த பயிற்றுனராக ஊக்குவிப்பாளராக திகழ்ந்தமையினால் அவர் காலத்தில் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காணப்பட்டது. இதன் பயனாக அவர்களின் பணிக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இளைய தலைமுறை விளையாட்டுத் துறையில் தகுதி பெற்றது.
பாடசாலைக்கு வந்தோம். படித்தோம், விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம், விளையாடினோம் என்ற நிலையை மாற்றி ஒரு அசைவு நிலையை ஏற்படுத்தியவர்.
திரு.சோமாஸ்கந்தனிடம் விஞ்ஞானம் கற்றோம், விளையாட்டுப் பயின்றோம் என்று சொல்கின்ற மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து செயற்படும் விழிப்பு நிலையை அவதானிக்கலாம்.
காரை நலன்புரிச்சங்கம் லண்டன் திரு. சோமாஸ்கந்தன் இடமாற்றம் பெற்றுச்சென்று 30 ஆண்டுகள் கடந்த பின்னர் தனது இருபத்தைந்தாவது ஆண்டு “காரை சங்கமம்” விளையாட்டு நிகழ்விற்கு திரு.சோமாஸ்கந்தன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிப்பதன் மூலம் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் ஏற்படுத்திய அசைவின் உணர்வு இன்று வரை உணரப்படுகின்றதே என்பதே பொருளாகும்.
No Responses to “திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி – எஸ்.கே.சதாசிவம் –”