காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான யோகா ரீச்சர் என அழைக்கப்படும் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும், அவரால் அவ்வப்போது எழுதப்பட்டு வெளிவந்த சமய, இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் வெளியீடும் எதிர்வரும் 9-01-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருமன்காடு, வவுனியா காளியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பல தமிழறிஞர்களும், கல்வியாளர்களும், தமிழ், சமய உணர்வாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
ஆயிலி, காரைநகரைச் சேர்ந்த பண்டிதை செல்வி யோகலட்சுமி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளமாணிப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா பட்டமும் பெற்றுக்கொண்டவர். ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் கற்று பண்டிதையாக தேறியவர். இவரது கல்விப் பணி பரந்துபட்டதாகும். இவர் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், வளவாளர், பகுதிநேர விரிவுரையாளர் என பல பதவிகளை வகித்து கல்விச் சேவையாற்றியவர். சமய, இலக்கியச் சொற்பொழிவுகள் செய்து வருவதுடன் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என்பவற்றில் பங்குகொண்டு சிறந்த பேச்சாளர் என்ற பெயர்பெற்று விளங்குபவர். வடமாகாண சபையினால் வழங்கப்பட்ட முதலமைச்சர் விருது, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட ‘கலாபூசணம்’ என்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
வவுனியாவில் இவர் வசித்து வந்தகாலத்தில் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி மாணவர்கள் பலரும் இவரிடத்தில் தமிழையும் சமயத்தையும் கற்று பட்டம் பெற்றதுடன் அவற்றில் புலமையும் பெற்று விளங்குகின்றனர். தமிழ், சமய உணர்வோடு சேவையுணர்வும் மிக்க இவர் மாணவர்களிடத்தில்; எவ்வித கட்டணமும் பெற்றுக்கொள்ளாது இலவசமாகவே பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையான பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் கல்விப் பணி, தமிழ்ப் பணி, சமயப் பணி என்பன குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பெருமை கொள்வதுடன் அவரது பவள விழாவும் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க வாழ்த்தி மகிழ்கின்றது.
பவள விழா மற்றும் நூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியை பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது.”