கனடா பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும், தமிழுலகு போற்றும் புகழ்பூத்த தமிழறிஞர் பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் புதல்வனுமாகிய சிவானந்தநாதன் தம்பதியினரின் புதல்வனான திரு.மயூரன் அவர்களும் அவரது துணைவியாரும் இணைந்து உதவிய இரண்டு இலட்சம் ரூபா மூலம் காரை.இந்துவில் தரம் 6இல் பயிலும் 68 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி திரு.மயில்வாகனம் மகேந்திரன், ஓய்வுநிலை அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம், ஜேர்மன்-காரை ஒன்றியத்தின நிறுவுனர்களுள் ஒருவரும் அதன் உப-தலைவரும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.அருள்முகன்சாயிபாபா விஜயரத்தினம், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு.உ.கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு உபகரணங்கள் அடங்கிய பொதிகளை மாணவர்களிற்கு வழங்கி வைத்தனர். காலணிகள் (Shoes), காலுறை (Socks), கொப்பிகள், புத்தகப் பை என்பனவே வழங்கப்பெற்ற பொதியில் உள்ளடக்கப்பெற்றனவாகும்.
இந்நிகழ்வில் உரையாற்றியோர் அனைவரும் நன்கொடையாளரான திரு.மயூரனின் பேரனான பண்டிதமணி சு.அருளம்பலவனாரின் பெருமைகளை எடுத்துக் கூறியிருந்ததுடன் அவரது வழி வந்த அவரது பேரனான மயூரன் அவர்கள் தனது தந்தையாரும், உறவினர்களும் கற்ற பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய முன்மாதிரிப் பணியினைப் பாரட்டத் தவறவில்லை.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் உரையாற்றுகையில்; எமது கல்லூரி பழைய மாணவர்களின் அடுத்த சந்ததியும் கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவுகின்ற நிலையை ஏற்படுத்த உழைத்து வருகின்ற பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பணியினை வெகுவாகப் பாராட்டியிருந்ததுடன் மயூரன் தம்பதியினரின் முன்னுதாரணமான செயற்பாடானது போற்றிப் பாராட்டிற்குரியது எனத் தெரிவித்து மயூரன் தம்பதியினருக்கும் இவர்களுடைய தொடர்பினை ஏற்படுத்தித் தந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் உரையாற்றும்போது, நாம் கற்ற காலத்தில் மாணவர்களிடையே சமத்துவம் அற்ற ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவதால் ஏழைப் பிள்ளைகள் புத்தகம் இல்லாது கற்ற சூழ்நிலையே இருந்தது. இன்று அரசாங்கம் வழங்கும் இலவச புத்தகங்கள், சீருடைகள் என்பவற்றுடன் இங்கே வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களும் எல்லா மாணவர்களும் சமத்துவ நிலையில் கல்வியைப் பயிலும் சூழலை ஏற்படுத்துவதாகவுள்ளது. காரை.மண் பெற்றெடுத்த முத்து பண்டிதமணி சு.அருளம்பலவனார். தமிழுலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர். பன்னிரு திருமுறைகளில் சிறப்புப் பெற்ற நூலாகக் கருதப்படும் திருவாசகத்திற்கு உரை-ஆய்வுரை எழுதிய அறிஞர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர். எனினும் ஆழமான நுட்பமான கருத்துக்கள் செறிந்த முதன்மைபெற்ற நூலாக விளங்குவது பண்டிதமணியின் உரையாகும். பதிற்றுப்பத்து என்ற சங்ககால நூலுக்கும் உரை எழுதியவர் இவராவர். இதனால் ‘சங்கநூற்செல்வர்’ என்ற விருதும் பெற்றவர். இவரின் பெருமையை உணர்ந்த காரைநகர் பிரதேச சபை இவரது வதிவிடம் அமைந்துள்ள வீதிக்கு இவரின் பெயரைச் சூட்டி என்றென்றும் நினைவுகூர வைத்துள்ளது. பண்டிதமணியின் மகன் சிவானந்தநாதன். கலைப் பட்டதாரியான இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான சிவானந்தநாதனின் மகன் மயூரன் கனடாவில் வளர்ந்து கற்று பல்கலைக்கழகப் பட்டம்பெற்று பிரபல நிறுவனம் ஒன்றில நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுபவர்.; . இத்தகைய இவர் இக்கல்லூரிக்கு உதவியமை குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம் என பண்டிதர் வேலாயுதபிள்ளை தமது உரையில் குறிப்பிட்டார்.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ம.மகேந்திரன், சிவானந்தநாதனின் மைத்துனியான கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் ஆகியோரும் உரையாற்றியதைத் தொடர்ந்து மாணவர்களிற்கான உதவிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. ஆசிரியர் திரு.சண்முகம் சுகந்தன் அவர்கள் நன்றி தெவித்து உரையாற்றினார். உதவியைப் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:நிகழ்வின் முழுமையான புகைப்படத் தொகுப்பினை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடமுடியும். புகைப்படத்தின் மீது அழுத்துவதன் மூலம் அதனை பெரிதாகப் பார்வையிடலாம் என்பதுடன் படத்தின் வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் உள்ள அம்புக் குறிகளை அழுத்திச் செல்வதன் ஊடாக குறித்த படத்தின் முன்னேயும் பின்னேயும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்வையிடலாம்.
https://photos.app.goo.gl/MzoTEmUzXSU47dZm7
No Responses to “காரை.இந்துவின் 6ஆம் தர மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு உதவிய கனடாவைச் சேர்ந்த மயூரன் தம்பதியினரின் முன்னுதாரணமான பணிக்கு பலரும் பாராட்டு.”