காரைநகர் இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள நடராசா ஞாபகார்த்த மண்டபம் காரைநகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது எனலாம். கல்லூரிச் சமூகத்தினது மட்டுமல்லாது காரைநகர்ச் சமூகத்தினது பயன்பாடு சார்ந்து முக்கியத்துவம் மிக்க மண்டபமாக விளங்குவது. கலை விழாக்கள், பொதுப் பரீட்சைகள், சமூக, சமய நிகழ்வுகள் என்பன நடைபெறுகின்ற அழகிய பெரிய மண்டபமாக இது அமையப் பெற்றுள்ளது. எத்தகைய நிகழ்வானாலும் அதன் சிறப்பிற்கு ஒலி அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாகும். தற்போது இம்மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலி அமைப்பானது நீண்டகால பாவனையிலிருந்த பழமையான சாதனங்கள் காரணமாக சீரான முறையில் செயற்படமுடியாதநிலையிலுள்ளது. அத்துடன் பல சாதனங்கள் பழுதடைந்து இயங்கு நிலையிலில்லாதுள்ளன.
இதனை அண்மையில் கல்லூரிக்குப் பயணம் செய்து அவதானித்த கல்லூரியின் பழைய மாணவனும், ஜேர்மன்-காரை ஒன்றியத்தின் நிறுவுனர்களுள் ஒருவருமாகிய திரு. அருள்முகன்சாயிபாபா விஜயரத்தினம் அவர்கள் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களுடன் கலந்து பேசியதைத் தொடர்ந்து இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா செலவில் உயர்தரத்திலான நவீன ஒலி அமைப்புச் சாதனங்களை வாங்கி அன்பளிப்புச் செய்துள்ளார். கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் என்பன சார்ந்து மக்கள் பணியாற்றி மறைந்தவரான கல்வி உலகு போற்றும் ஆற்றல்மிகு ஆங்கிலப் பேராசிரியர் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 4வது ஆண்டு நினைவுகூரப்படும் இத்தருணத்தில் அன்னாரது ஞாபகார்த்தமாக அன்னாரது சகோதரனான அருள்முகன்சாயிபாபா அவர்கள் குறித்த ஒலிபரப்புச் சாதனங்களை அன்பளிப்புச் செய்துள்ளமை சிறப்பானதும் போற்றிப் பாராட்டுதற்குரிய பணியுமாகும். இச்சாதனங்கள் அனைத்தும் கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து அவற்றினை மண்டபத்தில் பொருத்தி ஒலி அமைப்பினை ஏற்படுத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் திரு.அருள்முகன் சாயிபாபாவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
காரை.இந்துவின் பழைய மாணவனான அமரர் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது குடும்பத்தினரால் நிறுவப்பட்டுள்ள அமரர் விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் பல சமூக உதவித் திட்டங்களும், மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதுடன் காரை.இந்துவில் ஆசிரியப் பணியாற்றியிருந்த ஆங்கிலப் புலமை மிக்க அமரர் என்.விஜயரத்தினம் அன்னாரது துணைவியாரான அமரர் திருமதி சிவயோகம் ஆகியோர் அமரர் கலாநிதி கென்னடி அவர்களினதும், திரு.அருள்முகன்சாயிபாபா அவர்களினதும் பெற்றோர் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
பின்வரும் ஒலி அமைப்புச் சாதனங்களே அன்பளிப்புச் செய்யப்பட்டனவாகும்:
1. Amplipier
2.Reciever
3.Microphone with Stand – One
4.Wireless Microphones – Two
5.Air Microphones – Four
6.Speakers (Boxes) – Six
அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒலி அமைப்புச் சாதனங்களின் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
.
No Responses to “நடசாசா ஞாபகார்த்த மண்டபத்தின் பயன்பாட்டிற்று அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் ஞாபகார்த்தமாக ஒலி அமைப்புச் சாதனங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.”