பேரன்புடையீர்
போற்றி ஓம் நமசிவாய. வணக்கம்.
திரு.சி. கணபதிப்பிள்ளை ஐயர் எழுதிய
“சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த
திரு ச. அருணாசலம் அவர்கள்”
(இரண்டாம் பதிப்பு)
நூல் வெளியீட்டு விழா
“சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம் ஆவார்கள். சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் யுத்தவீறு இச் சேதுபந்தனத்தின் வழிவந்ததேயாம்.” என்றும், “யாழ்ப்பாணத்தின் மூன்று சமயக்கண்கள் நாவலர், அருணாசலம், இராசரத்தினம் என்போராவர்” எனவும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்கள் காரைநகர் மல்லிகைக் குறிச்சியை பூர்வீகமாகவும் குட்டிப்புலத்தை(குமிழங்குளி) பிறப்பிடமாகவும,; தங்கோடையை வதிவிடமாகவும் கொண்டவர். திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்கள் (31.10.1864–17.01.1920) காலப்பகுதியில் வாழ்ந்தவர். அவர் தவத்திரு ஆறுமுகநாவலரின் செயற்பாடுகளால் மிகவும் கவரப் பெற்றார். அக் காலத்தில் ‘மிஷனரிமாரின்’ கல்வி உத்தியோக மாயை வலைக்குள் தமிழ்மக்கள் பலர் சிக்கினர். அதனால் தங்களின் உண்மைச் சமயமாகிய சைவசமயத்தை விட்டுப் புறச் சமயத்தில் சேர்ந்தனர்.
சைவப்பெற்றோரின் பிள்ளைகள் சைவத்தமிழ்ப் பாடசாலைகளில் கற்பதற்காக தமது ஊராகிய காரைநகரில் உள்ள சைவப் பற்றுள்ள பெருமக்களை அணுகி தமது சைவப் பாடசாலைகள் அமைக்கும் திட்டங்களைத் தெளிவாக விளக்கி அவர்களின் ஆதரவுடன் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை (இப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையாக அமைக்கப்பெற்றது) வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலை, போன்ற பல பாடசாலைகளை நிறுவினார்.
இலங்கை முழுவதும் சைவத் தமிழ்ப் பாடசாலைகள் நிறுவத் தீவிரமாக முயன்றார். அவர் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து தன் எண்ணத்தை நிறை வேற்றுவதில் சமர்த்தர். காலநேரம் பாராது ஊண் உறக்கமின்றி ஊர்தோறும் சைவப்பாடசாலைப் பிரசாரகராய் அலைந்து பல பாடசாலைகள் அமையக் காரணமானார்.
அவர் அமைத்த சைவப்பாடசாலைகளில் கற்பிப்பதற்கு சைவ ஆசிரியர்களைத் தோற்றுவிப்பதற்கு தீவிர முயற்சிகள் செய்து, 1916 ஆம் ஆண்டிற் கத்தோலிக்கர் தவிர்ந்த ஏனைய மூவகை கிறித்தவர்களும் சைவர்களும் சேர்ந்து கற்கும் கோப்பாய் ஐக்கிய ஆசிரிய போதனா பாடசாலையின் சைவர்களின் பகுதியை திரு. அருணாசலம் பெற்றுக் கொண்டனர். ஓரளவு அவரது கனவு நனவாகியது. திரு. அருணாசலம் அவர்கள் ஊரெல்லாம் அலைந்தார். வறிய மாணவர்களைத் தேடிப் பிடித்தார். ஊண், உடை, புத்தகங்கள் உதவினார். பணம் சம்பாதிக்க வழிகாட்டியாக இருந்தார். சைவ ஆசிரியர்களை உற்பத்தி செய்து சைவம் வளர வகை செய்தார். மகான் அருணாசலம் அவர்கள.
சைவப்பாடசாலைகளை நிறுவவும், சைவ ஆசிரிய கலாசாலையை அமைக்கவும், சைவ ஆசிரியர்களைத் தோற்றுவிக்கவும் தனது சொத்துக்களை எல்லாம் விற்றுச் செலவு செய்தவர். அருணாசலம் அவர்கள் புகழுக்காகத் தொண்டு செய்யவில்லை. சைவத் தொண்டும், தமிழ்த் தொண்டுமே அவருயிர். திரு. அருணாசலம் அவர்கள் பற்றி முகாமையாளர் ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் “அவர்களுக்குப் பிறகு அருணாசலந்தான் இந்த நாட்டில் ஒரு மனிதர்” எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடம் கூறியிருந்தார். அவர்கள் என்று முகாமையாளர் கூறியது நாவலர் அவர்களை.
மேற்கொண்டு மகான் சிவத்திரு. ச. அருணாசலம் அவர்களின் செயற்பாடுகளை, பணிகளை, தியாகங்களை நூலைப் படித்து அறிந்து கொள்வீர்கள். இந்நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறிவித்து அழைத்து வாருங்கள். உங்கள் சபைக்கு, மன்றத்துக்கு எவ்வளவு நூல்கள் தேவை என்பதை அறியத் தாருங்கள்.
உங்களின் வாழ்த்துச் செய்தியை அனுப்பியும், நூல் வெளியீட்டு விழா பற்றிய விளம்பரத்தை உங்கள் இணையத் தளத்தில் வெளியிட்டும் விழாவிற்கு அனுசரணை நல்கி ஆதரவு நல்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
அன்பே சிவம்.
பணிவன்புடன்,
தி.விசுவலிங்கம் (905)566-4822 மின்னஞ்சல்: saivamanram
பதிப்பாசிரியர்
(தலைவர, கனடா சைவ சித்தாந்த மன்றம்)
No Responses to ““சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச. அருணாசலம் அவர்கள்” (இரண்டாம் பதிப்பு) நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்”