விளையாட்டுத்துறையில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) தனக்கென தனி வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டு விளங்கும் முதன்மைப் பாடசாலையாக தொடர்ந்து விளங்கி வருகின்றது.
1934 ஆம் ஆண்டில் இப்பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்தில் நடைபெற்ற அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்ற முதல் மாணவர்களான திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் முதல் இவ்வாண்டு (2015 இல்) தேசிய மட்ட மெய்வல்நுர் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள செல்வன் S.கோகுலன் வரையான வீரர்களின் சாதனைகள் இதற்கு சான்று பகர்கின்றன.
இந்த விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவித்த பல ஆசிரியர்களும் கல்லூரியின் வரலாற்றில் தடம்பிடித்து மாணவர்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளனர்.
அந்தவகையில் இவ்வாண்டு பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் நிகழ்வான காரைசங்கமம்-2015 இன் பிரதம விருந்தினராக காரை இந்துவில் 18 ஆண்டுகள் விஞ்ஞான, பௌதீகவியல் ஆசிரியராகவும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
காரை இந்துவின் விளையாட்டுத்துறைக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய இன்னொரு ஆசிரியரான திரு.அ.செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர்) அவர்களும் கௌரவ விருந்தினாராகக் கலந்துகொண்டிருந்தார்.
கல்லூரி வரலாற்றில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் விiளாட்டு வீரர்களான மருத்துவ கலாநிதி.ராதகோபாலன் செல்வரத்தனம் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவிலிருந்தும், திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் ஜேர்மனியிலிருந்தும், திரு.தம்பிஐயா பரமானந்தராஜா, திரு.கார்த்திகேசு சிவசோதிநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கனடாவிலிருந்தும் கலந்;துகொண்டிருந்தனர்.
இதேவேளையில் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களும் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் காரை அமைப்புகளில் எடுத்துக்காட்டான பல செயற்பாடுகளை துணிச்சலுடன் முன்னெடுத்துவரும் பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கத்திற்கு முன்னாள் ஆசிரியரான திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்ததுடன் அவருக்கான பயண ஏற்பாடுகளையும் செய்து கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்து நிகழ்விற்கு தனது ஆசிகளை அமைதியாக வழங்கி வரும் மற்றொரு விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.S.K.சதாசிவம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “காரை இந்து விளையாட்டுத்துறை ஆசிரியர்களின் ஆசியும் முன்னாள் விளையாட்டு வீரர்களின் சங்கமமும்”