சைவ உலகமே, அந்த மகானை நீ நன்றாக மறந்து விட்டாயா! அருணாசலம் அவர்களின் ஞாபகம் எங்கே! சரி நீ நில். காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு! உனது கருத்தென்ன!!
மேற்கண்டவாறு 1967 இல் காரைநகர் சைவ மகா சபையினால் வெளியிடப்பட்ட பொன் விழா மலரில் குரல் எழுப்பியவர் அருணாசால மகான் அவர்களை நேரில் கண்ட பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்.
காரைநகர் மகான் சிவத்திரு.சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “ என்ற நூல் காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடவுள்ள நிலையில் மகான் சிவத்திரு.ச.அருணாசாலம் அவர்கள் தொடர்புபட்ட தகவல்கள் கட்டுரைகள் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் கீழ்வரும் கட்டுரை எடுத்து வரப்படுகின்றது.
“அவர்களுக்குப் பிறகு அருணாசலந்தான்”
– பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை –
ஒரு சமயம் நாவலர் அவர்களின் தமையனார் புத்திரரும், யாழ்ப்பாணத்து நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மானேஜரும் ஆகிய ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் மேற்கண்டவாறு சொன்னார்கள். ‘அவர்கள்’ என்று அவர்கள் சொல்லுவது நாவலர் அவர்களை. ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பிறகு … பிள்ளை அவர்களும், சுன்னாகம் ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களும் தழிழை அபிவிருத்தி செய்வதற்கும் சைவத்தை ஒரு அளவுக்கேனும் பாதுகாப்பதற்கும் வெகுதூரம் பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் பிரயத்தனம் அவர்கள் எண்ணியவாறு அநுகூலப்படவில்லை. அக்காலம் ஆங்கில மோகம் ஆகாயத்தை அளாவி அண்ட முகட்டுக்கு அப்பாலேயும் போய்க்கொண்டிருந்தது.
1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாசம் ‘இந்துசாதன’த்தில் ஒரு விளம்பரம் வந்தது. பிள்ளை அவர்களும் புலவர் அவர்களும் சேர்ந்து செய்த விளம்பரம் அது நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஒரு காவிய வகுப்பு உண்டியும் உறையுளும் பிறவும் உதவி இலவசமாக நடத்தப்படும் என்றிருந்தது. என்னையுள்ளிட்டுப் பதினெண்மர் அவ் வகுப்பிற் சேருதற்குச் சென்றோம்.
புலவர் அவர்கள் நேர்முகப் பரீட்சை நடத்தினார்கள். பக்கத்தில் மானேஜர் த. கைலாசபிள்ளை அவர்கள் இருக்கிறார்கள். என்முறை வந்தது. நான் போய் அவர்கள் முன்னிலையில் நிமிர்ந்தேன். எனக்குப் பதினெட்டு வயசு முடிந்தது, அடுத்த வயசு நடக்கின்றது. பத்து வயசுக்குமேல் பள்ளிக் கூடப் பயிற்சிவாசனை கிடையாது. இடையிடையே திண்ணைப் பள்ளிக் கூடங்களிற் போய் நித்திரை தூங்குவதுண்டு. காகித ஆட்டங்கள் வேறு சூதுகளிலேதான் எனக்குப் போதிய பயிற்சி. இப்படிப்பட்ட என்னைப் புலவர் அவர்கள் சில கேள்விகள் கேட்டுவிட்டு இறுதியில், ‘கிறிஸ்தவ பள்ளியிற் படித்ததோ’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சிறிதும் கூசாமற் சொன்னேன். புலவர் அவர்கள் மானேஜர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள், அவ்வளவுதான்.
என்னை அப் பரீட்சைக்குக் கொண்டு செலுத்தியவர்கள், நாவலர் அவர்களுக்கும் அவர்கள் மருகர் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளைக்கும் மாணவராகிய உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் இளைய புத்திரரும், காரைநகர் இந்துக்கல்லூரி முன்னைநாள் ஆசிரியரும், அப்போது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிற் படித்துக் கொண்டிருந்தவருமாகிய திரு. நடராஜா அவர்கள். திரு. நடராஜா அங்கே நடந்தவைகளைக் கவனித்துவிட்டு அவர்களைத் தனிமையிற் கண்டு வெகுபரிதாபகரமான வேண்டுதல் செய்தார். ஆறுமாசம் வைத்துப் பார்த்து முடிவு சொல்லுவதாக எனக்கு உத்தரவு கிடைத்தது.
அடுத்த நாளே அரிவரியிலிருந்து பாடம் ஆரம்பமாயிற்று. ஆறு மாசத்துக்கிடையில், என்னுடன் சேர்ந்தவர்களிற் பலர், ‘இந்த படிப்பு வயிற்றுப் பிழைப்புக்குதவுமா” என்று சொல்லிக் கொண்டு மெல்ல மெல்லக் கழன்று விட்டார்கள். ஒரு வருஷத்தில் விடுதிக்குரியவர்கள் எல்லாருமே போய்விட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் தனித்து எஞ்சியிருந்தேன்.
ஒருநாள் புத்தம் புதிய மனிதர் ஒருவர் என் முன்னிலையிற் தோன்றினார். பொதுவான கரிய நிறம், மெலிந்த வரண்ட தேகம், வறுமையில் அடிபட்டதற்கு அறிகுறிபோன்ற தோற் சுருக்குகள், முதுகோடு ஒட்டிய சுருங்கின வயிறு, சிந்தனை தேங்கிய முகம், நிலத்தை நோக்கிய பார்வை, தலை முண்டிதம், மயிர் முளையாத வழுக்கையல்ல, ஒரு துண்டினால் போர்த்தியிருந்தார். கக்கத்திற் காகிதச்சுருள்கள். நான் திடீரென்று எழுந்து நின்றேன். அந்த மனிதர் சொன்னார்:
“உந்தப் படிப்பு உபயோகப்பட வேண்டுமானால், உபாத்தியாயர்ப் பத்திரம் ஒன்று வேண்டும். நீ என்னுடன் வா. உணவு உடையெல்லாம் உதவி, உன்னை ஒரு உபாத்தியாயர் ஆக்கி வைக்கிறேன்”
“இங்கே எல்லா உதவியும் கிடைக்கிறது. நான் இங்கேதானே படிக்கப்போகிறேன். உபாத்தியாயர்ப் படிப்புக்குரிய வல்லமை எனக்கு இல்லை” என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன். எவ்வளவோ அந்த மனிதர் முயன்றும் வாய்க்கவில்லை.
“உனக்கு நான் சொல்லுவதொன்றும் விளங்கவில்லைப் பிள்ளை. நன்றாக யோசி” என்று சொல்லிவிட்டு அந்த மனிதர் போய்விட்டார்.
அந்தப் புதிய மனிதர் ஆர்?
அந்தக் காலத்தில் வண்ணார்பண்ணையில் விடுதி விடுகிறவர்கள் விடியமுன் நாலுமணிக்கு எழுந்து, வில்லூன்றிக்கோ, பறைச்சேரி வெளிக்கோ வெளியே போவது வழக்கம். அந்த நேரத்தில் மழைபோலப் பனிபொழியுங் காலமாய் இருந்தாலுங் கூட அந்த மனிதர், அந்தத் துண்டினாலேதான், தலையையும் மூடிப்போர்த்துக் கொண்டு, பறைசேரி வெளித் தெருவிலே, கிழக்குமுகமாக, யாழ்ப்பாணம் நேக்கி, வெகு தூரத்திலிருந்து நடந்து வருவதை அடிக்கடி நான் காணுவதுண்டு. மனிதரைத் தூரத்தே நான் கண்டதும் மெல்ல விலகிவிடுவேன்.
அந்த மனிதர் ஆர்?
புலவர் அவர்கள் புத்தகம் படிப்பிப்பார்கள். மனேஜர் அவர்கள் கதைசொல்லி உலகம் படிப்பிப்பார்கள். இது அவர்கள் வழக்கம். ஒரு நாள், “அவர்களுக்குப் பிறகு அருணாசலம் தான்” என்று, ஏதோ சந்தர்ப்பத்தில் மனேஜர் அவர்கள் கதை தொடங்கினார்கள். கதை சிறிது வளரத் தொடங்கவே, “அந்தப் புதிய மனிதர்தான் அருணாசலம்” என்று எனக்குத் தெரிந்துவிட்டது. வெகு உற்சாகமாகக் கதையை உற்றுக் கேட்கத் தொடங்கினேன். கதை முழுவதையும் இங்கே அவிழ்க்க முடியாது. இனிக்கிற பகுதி-இல்லை உயிர் துடிக்கிறபகுதி இதோ வருகிறது.
ஸ்ரீமான் அருணாசலம் அவர்கள் காரைதீவிற் பிறந்தவர்கள். வானசாஸ்திர மகா பண்டிதரான அலன் ஆபிரகாம் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.
அருணாசலத்துக்கு ஆங்கிலம் படிக்க வாய்க்கவில்லை. தெல்லிப்பழையில் அமெரிக்கமிஷன் ஆசிரிய கலாசாலையிற் படித்து மூன்றாந் தராதரப்பத்திர வகுப்பிற் சித்தியெய்தினார். இனி இரண்டாந் தராதரப் பத்திர வகுப்பிற் படிக்கவேண்டும். இரண்டிற்கும் இடையில் ஒரு அக்கினி ஆறு. அஃதாவது ஞானஸ்நானம். அது பெற்றால்தான் அடுத்த வகுப்பிற்கு உயரலாம். இல்லையேல் அவ்வளவில் ஸ்தம்பனம்.
அடுத்த நாள் ஞானஸ்நான தினம். முதல்நாள் இரவு அருணாசலத்துக்கு நித்திரையில்லை. அருணாசலம் இருக்கிறார். நிற்கிறார், கிடக்கிறார், நடக்கிறார், அவருடைய ஆத்மா சுழலுகின்றது. நீண்ட யோசனை. கோழி கூவுகின்றது. கோழியுங்கூவ அருணாசலத்தின் திருவுள்ளத்திலும் ஏதோ கூவினது. யோசனை முற்றுப் புள்ளியடைந்தது. துணிவு பிறந்தது. இன்னும் இருள் விடியவில்லை. அது புறத்திருள். ஆனால், அருணாசலத்தின் அகத்திருள் விடிந்தது. அருணாசலம் தமது பெட்டியைத் தூக்கினார். மதிலில் ஏறினார், தெருவிற் குதித்தார். இல்லை! அவர் வெறுந்தெருவிற் குதிக்கவில்லை! சைவ உலகத்திற் குதித்தார்! அருணாசலம் குதித்தார்!! அக்கினி ஆற்றை ஒரு தாண்டில் தாண்டினார்! மகான் தாண்டினார்!!
முப்பது வருஷ காலம், ஊண் இல்லை, உறக்கம் இல்லை, இயக்கம் இல்லை, பெண்டு இல்லை, பிள்ளை இல்லை, எதையும்- யாரையும்-திரும்பிப் பார்க்க நேரமில்லை. தெருத்தெருவாய்-ஊர் ஊராய்-அருணாசலம் அலைந்தார். காரைதீவிலிருந்து கொழும்புக்கு, சேர் பொன். அருணாசலந் துரையைக் காண, நடந்து போய் நடந்து வந்தார் என்று கூடக்கதை. “சைவப் பள்ளிக் கூடங்கள் ஊர் தோறும் கட்ட வேண்டும். அதற்கு முன், சைவ உபாத்தியாயர்களை உற்பத்தி செய்ய வேண்டும். அப்படியானால் முதலில் சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலை வேண்டும்” இது அருணாசலத்தின் சங்கற்பம்.
“சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலை வேண்டும்”!
முப்பது வருஷ முயற்சிக்குப் பிறகு-அருணாசலம் அவர்கள் ‘ஊழையும் உப்பக்கம்’ கண்டதன் பயனாக, அரசாங்கம், ‘சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலையைத் தனித்து நடத்தப் பரிபக்குவமில்லையே’ என்று வெகு காலம் கண்ணீர் வடித்து, 1915 ஆம் ஆண்டு வரையில் ‘கிறிஸ்தவர்களோடு பங்காளிகளாய்ச் சைவர்களும் நடத்தலாம்’ என்று ஒருவாறு இரங்கியது. கத்தோலிக்கர் சேர மறுத்து விட்டார்கள். ஏனைய கிறிஸ்த மிஷனரிமாரும் சைவர்களிள் பிரதிநிதியான அருணாசலமுஞ் சேர்ந்து நடத்த முன் வந்தார்கள்.
கோப்பாயில் ஐக்கிய ஆசிரிய போதனாசாலையொன்று தோன்றியது. சைவப் பகுதியை அருணாசலம் நடத்த முன் வந்தார். மங்கல்ய தாரண தருணம். வாத்தியங்கள் கோஷிக்கின்றன. மாப்பிள்ளையும் எழுந்துவிட்டார். மங்கல்யம் நல்ல மங்கல்யம். ஒரே ஒரு குறை. மணப்பெண் வரவில்லை. விலக்கு. எப்படி இருக்கிறது திருமண வைபவம்!
அருணாசலம் சைவ விடுதியை நடத்த முன்வந்துவிட்டார். எல்லாம் ஆயத்தம். ஒரே ஒரு குறை. விடுதிக்குப் பிள்ளைகள் இல்லை.
அமெரிக்க மிஷன் நடத்தும் கிராமப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் கிடையாது. ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்புக்கள் தாண்டி, அவற்றுக்குமேல் ‘என்றன்ஸ்’ (Entrance) வகுப்பிலும் சித்தி எய்தியவர்களே ஆசிரிய கலாசாலைக்குரியவர்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளே அருணாசலம் அவர்களின் விடுதிக்குத் தேவை. பிள்ளைகளுக்கு என்ன செய்வது!
அப்பொழுது சைவப் பள்ளிக்கூடங்கள் வெகு அருமை. நாவலரின் சைவப்பள்ளிக் கூடங்கள் இரண்டே இரண்டு. ஒன்று கோப்பாயிலுள்ளது. மற்றது வண்ணார்பண்ணையில் உள்ளது. அந்தப் பள்ளிக் கூடங்களில் மேல் வகுப்புக்கள்-‘என்றன்ஸ்’ வரை வகுப்புக்கள்-நடந்துவதற்கு அருணாசலம் முயற்சி செய்தார். அன்றி, குறிப்பிட்ட சில கிறிஸ்தவ பாடசாலைகளில், மேல்வகுப்பிற் படிக்கும் சைவப் பிள்ளைகளை-அஃதாவது ஞானஸ்நானத்துக்கென்று கிறிஸ்தவர்கள் அடைகாக்கும் பிள்ளைகளை-முற்றுக்கையும் இட்டார்.
பிள்ளைகளைத் தேடுவதற்கு மகான் அருணாசலம் நாய்படாப்பாடு பட்டார். என்னிற்கூட ஒரு கண் வைத்தவர் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யாழ்ப்பாணம் முழுவதும் திரிந்தார். வடமாகாணம் எங்கும் அலைந்தார். மட்டக்களப்புக்கு ஓடினார். அங்கும் இங்கும் பெரியவரும், சிறியவர்களுமாகப் பிள்ளைகள் சிலரைச் சேர்த்தார். உண்டி தருவேன், உடை தருவேன், புத்தகம் இனாம், என்றெல்லாம் ஆசைகாட்டிச் சேர்த்தார். சேர்ந்த பிள்ளைகளைப் போஷிப்பதெப்படி?
அருணாசலம் பெற்ற பிள்ளைகள், தமது தகப்பனார் தங்கள் சொத்துக்களை ஊர்தோறும் திரிந்து பெற்ற பிள்ளைகளின் பொருட்டு, விரயஞ் செய்கின்றார் என்று, கோட்டில் அந்த மகான்மீது வழக்குத் தொடுத்தவர்கள் என்று கூடக் கேள்வி. காரைதீவு வாசரும், ஒரு காலத்தில் பிரபல வர்த்தகரும், கப்பல் வைத்திருந்தவரும் மகா பிரபுவும், வள்ளலுமான திரு. வைரமுத்து ஆறுமுகம்பிள்ளை அவர்கள் அருணாசலமவர்கள் சேர்த்துவரும் பிள்ளைகளுக்கு உண்டி-உடை-உறையுள் உபகரித்து இன்முகங்காட்டி, இன்சொற் பேசி வலக்கரம் போல உதவினார்கள்.
அருணாசலம் அவர்களின் ஆசிரியகலாசாலைக் கனவு-அவர்கள் கண்முன்னே நனவானது.
அருணாசலம் அவர்கள் அன்று இட்ட வித்துதான், கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையாயும், பிறகு, ஆண், பெண் ஆசிரிய கலாசாலையாயும் கிளைவிட்டிருக்கிறது. அதே வித்துத்தான் சைவ வித்தியாவிருத்திச் சங்கமாயும், நூற்றுக் கணக்கான சைவப் பாடசாலைகளாயும் சைவாசிரிய கலாசாலையாயும், பரிணமித்து இருக்கிறது. சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் அதிபரான அப்புக்காத்து, திரு. சு. இராசரத்தினம் அவர்கள், அக்காலத்தில் அருணாசலம் அவர்களின் சைவப் பைத்தியங்களை இங்கிலிசுப் படுத்திக் கொடுப்பதுண்டு. சங்கதி அதுதான்.
‘உனக்கு நான் சொல்லுவதொன்றும் விளங்கவில்லை. உனக்கு ஒரு உபாத்தியாயர்ப் பத்திரம் வேண்டும்’ என்று 1918இல் அருணாசலம் அவர்கள் எனக்கு உபதேசித்தார்கள். அந்த உபதேசம் பத்து வருஷத்துக்குப் பிறகு என்னிடம் பலித்தது. 1929இல் உபாத்தியாயர்ப் பத்திரத்துடன் வெளிவந்தேன்.
அன்று தொடக்கம் பலவருடங்களாக-சாதாரண பள்ளிக் கூடத்திலல்ல-ஒரு சைவாசிரிய கலாசாலையில் படிப்பித்து வந்தேன். என்னையும் ஒரு ஆசிரியன் என்று சொல்ல வைத்தது இந்த மகான் அன்று ஒருநாள் செய்த உபதேசம்.
ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் விடியமுன் நாலு மணிக்கு எழுந்து ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்பவர்கள். எழுந்தவுடன் தெருக்கதவைப் போய்த் திறப்பார்கள். திறக்கும்பொழுதெல்லாம் அருணாசலம் அவர்களையே நினைந்து கொண்டு திறப்பதாகச் சொல்லுவார்கள்.
அருணாசலம் அவர்கள் வெகு நேரத்துக்கு முன்னமே, காரைதீவிலிருந்து நடந்து வந்து, தம்முடன் ஏதாவது யோசிப்பதற்கு கதவு திறக்கும் தருணம் பார்த்து, குந்திக்கொண்டு பெரும்பாலும் காத்திருப்பார்களாம். நல்லது!
சைவ உலகமே, அந்த மகானை நீ நன்றாக மறந்து விட்டாயா! அருணாசலம் அவர்களின் ஞாபகம் எங்கே! சரி நீ நில். காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு! உனது கருத்தென்ன!!
(நன்றி: காரைநகர் சைவ மகாசபை பொன்விழா மலர் -1967)
No Responses to “செல்வப் பிரபுவே! காரைநகரமே! நீ அந்த மகானை மறந்து விட்டாயா? – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை”